உண்டாட்டுப் படலம் - 1081

bookmark

ஒருத்தி, கூடல் விருப்பைக் குறிப்பான் உணர்த்தல்

1081.

உய்த்த பூம் பள்ளியின் ஊடல் நீங்குவான்
சித்தம் உண்டு. ஒருத்திக்கு; அது. அன்பன் தேர்கிலான்;
பொய்த்தது ஓர் மூரியால் நிமிர்ந்து போக்குவாள்.
‘எத்தனை இறந்தன கடிகை. ஈண்டு?’ என்றாள்.
 
உய்த்த     பூம்பள்ளியின்   ஊடல்   நிங்குவான்  -  (தோழி)
அமைத்திருந்த  மலர்ப்படுக்கையில்.  (தான்   கணவனிடம்   கொண்ட)
ஊடலை முடித்துக்கொள்ள; ஒருத்திக்குச் சித்தம் உண்டு - அவளுக்கு
எண்ணம்  உண்டு;  அது. அன்பன் தேர்கிலன் - அந்த எண்ணத்தை
அவள்  கணவன் அறியாதவனாக இருந்தான்; பொய்த்ததோர் மூரியால்
நிமிர்ந்து போக்கினாள் - (அப்போது. ஒரு தூக்கம் தூங்கியெழுந்தவள்
போலப்)  பொய்யாகக்   (கைகால்களை   அவன்  மேல் படும்படியாக)ச்
சோம்பல் முறித்தாளாய்; எத்தனை இறந்தன கடிகை ஈண்டு என்றாள்
-   ‘இப்பொழுது.  எத்தனை   நாழிகைகள்   கழிந்ததுள்ளன?’  என்று
(தூக்கத்தில் அனைத்தும் மறந்தவள் போல்) கேட்டாள்.

தன்     பெருமையும்   மதிப்பும்  இழவாமல்.  பெண்மை ஊடலை.
முடித்துக்  கொள்ளும் நுட்பம் சுட்டியபடி.  “ஊடல்.  உணர்தல்.  புர்தல்
இவை காமம் கூடியயார் பெற்ற பயன்” (திருக். 1109)  என்பது  வள்ளுவ
வாசகம்.  நீங்குவான் - நீங்க; வினை எச்சம் தூக்கத்தில்  காலம்  உணர
இயலாது    ஆதலின்.   “எத்தனை   இறந்தன    கடிகை?”    என்று
வினாவினாள்.                                              35