உண்டாட்டுப் படலம் - 1079

bookmark

ஒருத்தி கூடற்சுழி இழைத்தல்

1079.

குழைத்த பூங் கொம்பு அனாள்
   ஒருத்தி. கூடலை
இழைத்தனள்; அது. அவள்
   இட்டபோது எலாம்
பிழைத்தலும். அனங்க வேள்
   பிழைப்பு இல் அம்பொடும்
உழைத்தனள்; உயிர்த்தனள்.
   உயிர் உண்டு என்னவே.
 
குழைத்த     பூங்கொம்பு  அ(ன்)னாள் ஒருத்தி - தளிர்த்துள்ள
பூங்கொடி  போன்றாள்   ஒருமங்கை;  கூடலை  இழைத்தனள் - (தன்
கணவன்  வருகையை   யறிய)க்  கூடல்  சுழிகளை (விரலால்) கீறினாள்;
அது  அவள் இட்ட போது எலாம் பிழைத்தலும் - (அக்கூடற்சுழிகள்
கூடும்  என்று  நினைத்துக்)  கீறிய  போதெல்லாம் கூடாமல் போனதும்;
அனங்க வேள் பிழைப்பு இல் அம்பொடும் உழைத்தனள்- மன்மதன்
இட்ட  பிழையாத  அம்புகளால்  தூளாக்கப்பெற்று  வருந்தினள்; உயிர்
உண்டு?  என்ன உயிர்த்தனள் - உயிர் இவளுக்கு உண்டோ என்னும்
ஐயம் தீர்க்க மூச்சு விட்டனள்.

கணவனைக்     கூடுவது   கூடுமோ  என அறிய. விழிகளை மூடித்
தரையில்  சுழியிட்டு.  சுழியின்  இருமுனையும்   கூடின்.   கணவனைக்
கூடலாகும் என அறியும் ஒரு பண்டை வழக்கு.  “கூடற்  பெருமானைக்
கூடலார்   கோமானைக்   கூடப்பெறுவேனேல்   கூடு  என்று.  கூடல்
இழைப்பாள்   போல்   கூடல்  இழையாது   இருந்தாள்   பிழைப்பின்
பிழைபாக்கு அறிந்து” (முத்தொள். 31)                          33