உண்டாட்டுப் படலம் - 1077

bookmark

ஒருத்தி யாது செய்வேன் என அயர்தல்

1077.

தோடு அவிழ் கூந்தலாள் ஒருத்தி. ‘தோன்றலோடு
ஊடுகெனோ? உயிர் உருகு நோய் கெடக்
கூடுகெனோ? அவன் குணங்கள் வீணையில்
பாடுகெனோ?’ எனப் பலவும் பன்னினாள்.
 
தோடு  அவிழ் கூந்தலாள் ஒருத்தி - மலர் இதழ்கள் மலரப்பெற்ற
கூந்தலையுடையாள் ஒரு  மங்கை;  தோன்றலோடு  ஊடுகெனோ?  -
(பிரிந்துள்ள  என் கணவன்  வரப்பெற்றால்)  அவனோடு நான் (பிரிவுத்
துயர்  தந்ததற்காக) ஊடல் கொள்வேனா; உயிர் உருகும் நோய்கெடக்
கூடு  கெனோ?  - என் உயிரை உருக்கிக் கொண்டுள்ள காமநோயைத்
தீர்த்துக்   கொள்ள    (உடனே   அவனைக்)  கூடுவேனோ?;  அவன்
குணங்கள் வீணையில் பாடுகெனோ? - (அவனுக்கு உவகை மிகுமாறு)
அவன்  குணங்களை  வீணையில்   இசைத்துப்   பாடுவேனோ? என்று
பலவும்  பன்னினாள்  -  (அவன்   வந்தவுடன்  செய்ய  வேண்டியவை
எவை  எவை) என்று (இவ்வாறு)  பலவழிகளை  (மனத்துள்)  ஆராய்ந்து
கொண்டிருந்தாள்!

கொண்டானை    மகிழ்விக்கத் திட்டமிடத் திண்டாடும் மகளிர் உயர்
பண்பு கூறியபடி. “புலப்பன்  கொல்;  புல்லுவேன் கொல்லோ; கலப்பென்
கொல்; கண்ணன்ன கேளிர்வரின்” திருக்குறள் (1267).              31