உண்டாட்டுப் படலம் - 1076

bookmark

ஒருவன் மனைவி ஊடலைத் தீர்க்க முயலுதல்

1076.    

செற்றம் முன் புரிந்தது ஓர் செம்மல். வெம்மையால்
பற்றலும். அல்குலில் பரந்த மேகலை
அற்று உகு முத்தின் முன்பு. அவனி சேர்ந்தன.
பொன்-தொடி ஒருத்தி கண் பொறாத முத்தமே.
 
முன்  செற்றம்  புரிந்தது ஓர் செம்மல் - முன்னர்ச் செய்த தவறு
நினைந்த   தலைவன்  ஒருவன்;  வெம்மையால்  அல்குலில்  பரந்த
மேகலை  பற்றலும்  -  (தன்  மனைவி. தன் அத் தவற்றை நினைந்து
கொண்டுள்ள    ஊடலைத்     தீர்க்கும்)     விருப்பத்தால்.   அவள்
இடைப்பகுதியில் பரவியிருந்த  மேலையைக்  (கையினால்) பிடித்தவுடன்;
அற்று    உகு    முத்தின்    முன்பு  -   (ஊடல்   நீடி   அவள்
எழத்தொடங்கியதால்)   அம்மேகலையில்  இருந்த முத்துக்கள்  எல்லாம்
அறுந்து  (நிலத்தில்)  வீழும்  முன்பாகவே;  பொற்றொடி ஒருத்திகண்
பொறாத  முத்தம் அவனி சேர்ந்தன - பொன்னாலான வளையணிந்த
அம்மங்கையின்  கண்களிலிருந்து  (கணவன்  செயலைப்  பொறுக்காமல்
எழுந்த) கண்ணீர் முத்துக்கள் நிலத்தில் வீழ்ந்தன.

பொற்றொடி     - பொன்தொடி.   அணி   முத்து வீழும்முன் கண்
மணிமுத்து வீழ்ந்தன என்று கணவன்  குறை  திருத்தும்  மகளிர் நிறைச்
சிறப்புக்    கூறியவாறு.     இடையிலிருந்து     விழ்வது    முன்னும்.
கண்ணிலிருந்து வீழ்வது பின்னும் (இட  உயர்வு  கருதின்)  வீழ்ந்திருக்க
வேண்டும்.  ஆனால்.  உணர்ச்சியின்  உயர்ச்சியினால்  இடை  முத்தை.
கண் முத்து முந்திக் கொண்டது எனக் கூறுவார்.                  30