உண்டாட்டுப் படலம் - 1074
காதலாள் ஒருத்தி கிளியைக் கடிதல்
1074.
மன்றல் நாறு ஒரு சிறை இருந்து. ஒர் வாணுதல்.
தன் துணைக் கிள்ளையைத் தழீஇ. ‘என் ஆவியை
இன்றுபோய்க் கொணர்கிலை; என் செய்வாய் எனக்கு?
அன்றிலோடு ஒத்தி’ என்று அழுது. சீறினாள்.
மன்றல் நாறு ஒருசிறை இருந்து ஓர் வாள்நுதல்-மணம் வீசும் ஓர்
இடத்திலே இருந்து கொண்டு. ஒளிபெறும் நெற்றியை யுடையாள்
ஒருத்தி; தன் துணைக் கிள்ளையைத் தழீஇ - தனக்குத்
துணையாகவுள்ள கிளியைத் தழுவி; என் ஆவியை இன்று போய்க்
கொணர்கிலை - என் உயிர் நாயகனை இன்று (தூதாகப்) போய்
அழைத்து வந்தாய் அல்லை; என் செய்வாய் எனக்கு - (இந்த
உதவியைத் தவிர வேறு) எனக்கு என்ன உதவி செய்ய இருக்கிறாய்?;
அன்றிலோடு ஒத்தி - (பிரிந்தாரைத் தன் ஒலியால் வருத்தும்)
அன்றிலைப் போலவே நீயும் இருக்கிறாய்; என்று அழுது சீறினாள் -
என்று கூறிப் புலம்பி வெகுண்டு கொதித்தாள்.
பிரிந்தாரைச் சேர்க்கும் உதவியிலும் பெரிய உதவி உலகில் வேறு
இல்லை. நீ. போய் அவரை அழைத்து வாராமல் அவர் பெயரை
மட்டும் ஓயாது கூவி என்னை துயர் உறுத்துகிறாய்; அன்றில் வெளியே
கூவுகிறது; நீ உள்ளே கூவுகிறாய். ஆக. துயர் உறுத்துவதில்
இரண்டுபேரும் ஒன்றே; இடமே வேறுபாடு என்கிறாள். மேல் பாடலில்
கிளி கூவலில் மகிழ்ந்தாள். இப்பாடலில். அதுவும் வெறுத்தாள்.
பிரிந்தார்க்குத் துயர்தரும் பொருள்களுள் அன்றிலும் ஒன்று. 28
