உண்டாட்டுப் படலம் - 1073
ஒருத்தி கணவன்பேர் சொல்லும் கிளியைப் புல்லுதல்
1073.
விரை செய் பூஞ் சேக்கையின் அடுக்க மீமிசை.
கரை செயா ஆசை அம் கடல் உளாள். ஒரு
பிரைச மென் குதலையாள். கொழுநன் பேர் எலாம்
உரைசெயும் கிள்ளையை உவந்து புல்லினாள்.
விரைசெய் பூஞ்சேக்கையின் அடுக்கம் மீமிசை - மணம் மிகும்
மலர்ப்படுக்கையின் அடுக்குகளின் மேலே; கரை செயா ஆசை அம்
கடல்உளாள் - கரையிட்டுத் தடுக்க இயலாக் காதல் கடலில்
மூழ்கியுள்ளவளான; ஒரு பிரைசமென் குதலையாள் - தேன் என
இனிக்கும் மழலை மொழி உடையாள் ஒருத்தி; கொழுநன் பேர் எலாம்
உரைசெயும் கிள்ளையை - (தன்) கணவனுக்கு உரிய
பெயர்களையெல்லாம் சொல்லுகின்ற கிளியை (எடுத்து); உவந்து
புல்லினாள் - (உள்ளம்) மகிழ்ந்து தழுவிக் கொண்டாள்.
“அடுத்த மீமிசை” என்பதிலும் “அடுக்க மீமிசை” என்பது
இடத்திற்கேற்ற பொருட் சிறப்புறுதலால் அப்பாடமே கொள்ளப்
பெற்றது.
கணவனைப் பிரிந்த பெருந் துன்பப் பெருக்கில் வருந்துவார்க்குக்
கணவன் பெயர் கேட்டலும் பேரின்பம் தரும் செயல் ஆகும்.
ஆதலின். கணவன் பெயர் அனைத்தும் உரைக்கின்ற கிளி
மிகப்பேரின்பம் தருவது ஒன்று ஆதலின். “கொழுநன் பேர் எலாம்
உரை செயும் கிள்ளையை உவந்து புல்லினாள்” என்றார்.
“ஆவதொன்று அருளாய் எனது ஆவியை. கூவுகின்றிலை. கூறலை
சென்று எனா பாவை பேசுவபோல கண் பனிப்புறப் பூவையோடும்
புலம்?புகின்றார் சிலர்” (கம்ப: 5007) என்பதும் இங்கு ஒப்பு
நோக்கற்குரியது. 27
