உண்டாட்டுப் படலம் - 1070

bookmark

கணவரும்-கள்ளும் ஒத்த எனல்

1070.

இலவு இதழ் துவர் விட. எயிறு தேன் உக.
முலை மிசை. கச்சொடு கலையும் மூட்டு அற.
அலை குழல் சோர்தர. அசதி ஆடலால்.
கலவி செய் கொழுநரும் கள்ளும் ஒத்தவே.
 
இலவு   இதழ்  துவர்விட - இலவம் பூவை ஒத்த (வாய்) இதழ்கள்
(தமக்குரிய)  செந்நிறம்  நிங்கவும்;  எயிறு  தேன்  உக  -  பற்களின்
இடையே  ஊறும்நீர்  இனிக்குமாறு  சுரக்கவும்;  முலைமிசை கச்சொடு
கலையும்  மூட்டு  அற  -  தனங்களின்  மீது  அணிந்த  கச்சுடனே
(இடையில்  அணிந்த)  ஆடையும்  முடிச்சு   அவிழவும்;  அலைகுழல்
சோர்தர - கூந்தல் அலைவதனால் சரிந்து வீழவும்; அசதி ஆடலால் -
பரிகாசச்   சிரிப்புத்   தோன்றுவதனால்;  கொழுநர் செய்  கலவியும்
கள்ளும்   ஒத்த   -   கணவர்   (தம்மோடு)  செய்கின்ற  கலவியும்.
மாதர்உண்ட கள்ளும் சமம் ஆயின.

எச்சங்கள்    குறிக்கும் செயல்கள்  எல்லாம் கலவிக்கும் கள்ளுக்கும்
பொதுவாதலால்.   “கொழுநர்   செய்    கலவியும்   “என   மாற்றிக்”
கூட்டப்பட்டது.  உதடு வெளுத்தல். பல் அடியில்  இனிய  நீர் சுரத்தல்.
ஆடையும்   கச்சும்   அவிழ்தல்.   கூந்தல்   குலைதல்.   பரிகசித்தல்
ஆகியவை     மது     வுண்ணல்.     கலவி     புரிதல்     ஆகிய
இரு     செயல் செய்வார்க்கும்  பொது நிகழ்வுகள் ஆகும். அசதியாடல்
-  பரிக  சித்தல். “ஒறுக்கப்  படுவார்  இவர் என்று அங்கு அசதியாடி”
(சீவக.  1871)  என்பது  காண்க;  கள்  இச்  செயல்களைச்  செய்தலால்.
இவற்றைச்  செய்யும்  கொழுநரோடு அது ஒத்தது  எனக்  கிடந்தவாறே
பொருள்  கொள்ளினும்   அமையும்.  “கொழுநரும்  கள்ளும்  ஒத்த” -
திணை   வழுவமைதி.    உண்டாட்டுப்   படலமாதலால்   கள்ளுக்குச்
சிறப்பளித்து  அஃறிணை  முடிவினை  உயர்திணைக்கும்  ஈந்தார்.  கள்
உண்பார்   அஃறிணை  முடிவினை  உயர்திணைக்கும்   ஈந்தார்.   கள்
உண்பார் அஃறிணைக்குச் சமம் எனக் கருதினார்.                 24