உண்டாட்டுப் படலம் - 1071

bookmark

காரிகையொருத்தி தன் காதலனிடம் தோழியைத் தூதனுப்புதல்

1071.

கனை கழல் காமனால் கலக்கம் உற்றதை.
அனகனுக்கு அறிவி’ என்று. அறியப் போக்கும் ஓர்
இன மணிக் கலையினாள். ‘தோழி! நீயும் என்
மனம் எனத் தாழ்தியோ? வருதியோ?’ என்றாள்.
 
கனைகழல்     காமனால்   கலக்கம்   உற்றதை  -  ஒலிக்கும்
வீரக்கழல்களை  யணிந்த  காமதேவனால்.   (காம  நினைவால்)   யான்
கலக்கம்  உற்றுள்ளேன்  என்பதை;  அனகனுக்கு  அறிவி - குற்றமற்ற
(என்)  கணவனுக்கு  அறிவிப்பாயாக;  என்று  அறியப் போக்கும் ஓர்
இனமணிக்  கலையினாள்  - என்று கூறி  (தன்தோழியை). பிரிந்துள்ள
தன்  கணவனிடம்  அனுப்ப  முன்வந்த   உயர்   மணிகள்  அழுத்திய
மேகலையணிந்த  மாது  ஒருத்தி;  தோழி நீயும்  என்  மனம் எனத்
தாழ்தியோ?   வருதியோ?  என்றாள்  - (தன்  தோழியை  நோக்கி)
தோழியே! நீயும் என் மனத்தினைப் போல  (அவனிடத்திலேயே)  தங்கி
விடுவாயோ? மீண்டு வருவாயோ? என்று (ஐய வினா) எழுப்பினாள். 

என்     மனம் என்னிடம் இல்லை என்பதை நயமுற விளக்கியவாறு.
உண்டு  களித்திருக்கும்  இப்போது. அவன்  இல்லாமையால்  மன்மதன்
அம்பால்   மிக   வருந்துகின்றேன்;   அவனைச்    சென்று   உடனே
அழைத்து  வருவாயா?  அல்லது  என்  மனம்   போல.   அவனிடமே
இருந்து  விடுவாயா?  என்று  ஓயாது   அவனையே   நினைத்திருக்கும்
மனத்தை.   தோழிக்குக்   கூறுவாள்   போல்   சாடுகிறாள்.  நெஞ்சம்
அவனிடம்  சென்றது. “கெட்டார்க்கு நட்டார் இல்  என்பதோ  நெஞ்சே
நீ. பெட்டாங்கு அவர்பின் செலல்” (திருக். 1293)                 25