உண்டாட்டுப் படலம் - 1069

bookmark

ஒருத்திக்கு மதுவுண்டதால், புருவம் வளைதலும்
நெற்றியில் வியர்வை உண்டாதலும்

1069.

கனித் திரள் இதழ் பொதி செம்மை கண் புக.
நினைப்பது ஒன்று. உரைப்பது ஒன்று. ஆம் ஒர் நேரிழை.
தனிச் சுடர்த் தாமரை முகத்துச் சாபமும்
குனித்தது; பனித்தது. குழவித் திங்களே.*
 
கனித்திரள்  இதழ்  பொதி  செம்மை  கண்புக  -  கொவ்வைக்
கனிபோன்று  திரண்ட  இதழ்களில்  மிகுந்திருக்கிற செந்நிறம் கண்களில்
போய்ச்சேர;நினைப்பது ஒன்று உரைப்பது ஒன்று ஆம் ஒர் நேரிழை
-  மனத்தால்   நினைப்பது   ஒன்றும்.  வாயால்  சொல்வது ஒன்றுமாக
ஆகிப்போன  சிறந்த அணிகள்  பூண்டாள் ஒருத்தியின்; தனிச் சுடர்த்
தாமரை  முகத்துச்  சாபமும்  -  தனி  ஒளி  வீசும் (அவள்) தாமரை
முகத்தில்    உள்ள    வில்போன்ற     புருவங்களும்;    குனித்தது;
குழவித்திங்கள்  பனித்தது -  வளைந்தன;  நெற்றியென்னும்  பிறைச்
சந்திரனும் வியர்த்தது.

கோபத்தின்     குணங்கள் யாவும்   கள்   உண்பார்க்கு உளவாதல்
சுட்டியவாறு.  “திங்களுள்  தீத்  தோன்றியற்று”  (கலி 41: 24)  என்றாற்
போல.  “திங்களும்  வியர்த்தது” என மதுவின்  கொடுமை  கூறியவாறு.
மதுவுண்பார்  உள்ளமும் உரையும் ஒன்றுபடாமல்  நினைப்பது  ஒன்றும்
உரைப்பது  ஒன்றும்  ஆக  ஆவார்  என்பார்.  “நினைப்பது   ஒன்று
உரைப்பது ஒன்று ஆம் ஒர் நேரிழை” என்றார்.                  23