உண்டாட்டுப் படலம் - 1051
மகளிர் எய்திய இடங்கள்
மகளிர் மதுப் பருகுதல்
1051.
தயங்கு தாரகை புரை தரள நீழலும்.
இயங்கு கார் மிடைந்த கா எழினிச் சூழலும்.
கயங்கள் போன்று ஒளிர் பளிங்கு அடுத்த கானமும்.
வயங்கு பூம் பந்தரும். மகளிர் எய்தினார்.
தயங்கு தாரகை புரை தரள நீழலும்- ஒளிர்கின்ற விண்மீன்களைப்
போன்ற முத்துப் பந்தலின் நிழலிலும்; இயங்குகார் மிடைந்த கா
எழினிச் சூழலும் - வானில் இயங்கும் மேகம் நெருங்கித் தங்குகின்ற
சோலைகளில் திரைச் சேலைகளிட்ட இடங்களிலும்; கயங்கள் போன்று
ஒளிர் பளிங்கு அடுத்த கானமும் - குளங்கள் போல ஒளிர்கின்ற
பளிங்கறைகள் பொருந்திய தோட்டங்களிலும்; வயங்கு பூம்பந்தரும்
மகளிர் எய்தினர் - (மணம்) விளங்கும் மலர்ப்பந்தல்களிலும்
பெண்டிர் சென்று அடைந்தனர்.
முத்துப் பந்தல். திரைப்பந்தல். பளிங்கறை. மலர்ப்பந்தல்.
ஆகியவற்றின் குளிர் நிழல்களில் மெல்லியல் மகளிர் தங்கினர் எனச்
செல்வ வளமும். அவர் தம் மென்மைப் பாங்கும் ஒருங்கு சுட்டினார்.
கரிய திரைகளை நாற்புறமும் சூழவிட்டு அவற்றின் மேல்
மாலைகளைத் தொங்கவிட்டுப் பாடி வீடு அமைக்கும்
வழக்கம் ஆதலின் தார்மிடைந்த எனப் பாடங்கொண்டு “இயங்கு
தார்மிடைந்த கா எழினிச் சூழலும்” என்றார் எனினுமாம். எழினி:
திரை. தார்: மாலை. 5
