ஆறு செல் படலம்

bookmark

கிட்கிந்தா காண்டம்

சீதையைப் பிரிந்த இராம இலக்குவர்கள் தேடியலைந்தனர். வழியில் கிட்கிந்தை எனும் வானரங்கள் ஆளும் நாட்டைச் சென்று சேர்ந்தனர். அங்கே அனுமன், சுக்கிரீவன் ஆகியோரின் நட்பைப் பெற்றனர். பிறகு சுக்கிரீவனின் சகோதரனான வாலியைக் கொன்று கிட்கிந்தையின் ஆட்சிப் பொறுப்பை சுக்கிரீவனுக்கு அளித்தனர். அதனால் இது கிட்கிந்தா காண்டம் எனப்படுகிறது. கிட்கிந்தா காண்டம் பதினேழு படலங்களைக் கொண்டுள்ளது.

ஆறு செல் படலம்

( வானர வீரர்கள் பிலத்திலிருந்து வெளிவந்த பின்பு, சுக்கிரீவன் தங்களுக்குக் குறிப்பிட்ட வழியின் படியே சீதையைத் தேடிச் சென்றதைக் கூறும் படலம் இது.

பொய்கைக் கரையில் வானரர் உறங்கத் துமிரன் என்னும் கொடிய அரக்கன் வருகிறான்; அந்த அசுரன் அங்கதனை மார்பில் அறைகிறான்; அங்கதனும் திருப்பியறைய, அந்த அரக்கன் அலறி வீழ்கிறான். அந்த அரக்கனைக் குறித்து அனுமன் வினாவுகிறான்; அதற்கு அங்கதன் நடந்த சம்பவத்தைக் கூறுகிறான். பின், ஜாம்பவான் துமிரனது வரலாறு கூறுகிறான். பின்னர், வானரர் சீதையைத் தேடிப் பெண்ணையாற்றை அடைகிறார்கள்; அதன்பிறகு அவர்கள் தசநவ நாடு அடைகிறார்கள்; விதர்ப்ப நாட்டில் தேடுகிறார்கள்; தண்டக வனத்தில் துருவி, முண்டகத் துறையை அடைகிறார்கள்; பாண்டு மலையின் சிகரத்தை அடைந்து, அங்கிருந்து கோதாவரியைச் சென்றடைகிறார்கள்; பின்னர்ச் சுவணகத் துறையில் அவர்கள் புகுந்து குலிந்த தேசத்தைக் கடக்கின்றார்கள்; கடந்து மேலும் அருந்ததி மலை, மரகத மலைகளைக் கடந்து வேங்கட மலையைச் சேர்கின்றார்கள்; அங்கிருந்து தொண்டை நாட்டை அடைகின்றார்கள்; பிறகு சோழநாட்டை அடைந்து மலைநாட்டின் வழியாகப் பாண்டிநாடு அடைகின்றார்கள்; முடிவாக, மகேந்திர மலையைச் சென்று அடைகின்றார்கள். இவை அனைத்தும் இப்படலத்தில் காணக் கிடைக்கும் செய்திகளின் சுருக்கம் ஆகும்)

ஸ்ரீ ராமபிரானின் கட்டளைப் படி தென்திசை புறப்பட்டுச் சென்ற வானர வீரர்கள் பொய்கையை அடைந்தனர். பின்பு களைப்பு தீர அந்த நீரை எடுத்துக் குடித்து தங்களது தாகத்தை தீர்த்துக் கொண்டனர். அத்துடன் அந்தக் கரையில் காணப்படும் தேனடைகளைப் பிழிந்து தேன் பருகிக் களித்தார்கள். நல்ல காய்களையும், கனிகளையும் பசி தீரத் தின்றார்கள். பின்பு உண்ட களைப்பாலும், பல யோசனை தூரம் வழி நடந்து வந்த களைப்பாலும் அங்கேயே படுத்துத் தூங்கினார்கள்.

அப்படி அவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது ஓர் கொடிய அசுரன் அவ்விடம் வந்தான். அவன் தோற்றம் யமனை விட மிகப் பயங்கரமாக இருந்தது. கரிய மேனியைக் கொண்டு மலை போலத் தோன்றினான். பிறைச் சந்திரன் போன்று வளைந்த கோரப்பற்களுடன் மிகவும் விகாரமாகக் காணப்பட்டான். அவனது கண்கள் கோபத்தால் தீப் பிழம்பைக் கக்கியது. பெரும் வலிமை படைத்த அவனிடம் அசுரர்களே யுத்தம் செய்ய அஞ்சுவார்கள். அப்படி இருக்கத் தேவர்களைப் பற்றிக் கேட்கத் தான் வேண்டுமோ?

அந்தக் கொடிய அரக்கன் களைப்பால் உறங்கிக் கொண்டு இருந்த அந்த அப்பாவி வானர வீரர்களை நெருங்கினான். கோபத்துடன் உறங்கிக் கொண்டு இருந்த வீரர்களைப் பார்த்து," இந்தத் தடாகம் என்னுடையது என்று அறிந்திருந்தும், இங்கே வந்து படுத்துக் கொண்டிருக்கும் இவர்கள் யார்?" என்று சினத்துடன் கூறிக் கொண்டே, அங்கதன் அருகில் வந்தான். ஆனால், அங்கதன் எதைப் பற்றியும் கவலைப் படாமல் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டு இருந்தான். அது கண்டு கோபம் கொண்ட அந்த அசுரன் , ஓங்கி அங்கதனின் மார்பில் அறைந்தான்.

அந்தக் கணத்தில் அங்கதன் கண்விழித்தான். தன்னை அப்படி மார்பில் அறைந்தவன் யார் என்று நோக்கினான். அவ்வாறு நோக்கிய கண்களுக்கு எதிரே ஒரு அரக்கன் நின்று கொண்டு இருப்பதைக் கண்டான். அதனால், அதீத கோபம் கொண்ட அங்கதன், தனது பலத்தை ஒன்று திரட்டி ஓங்கி அந்த அரக்கனின் மார்பில் திருப்பி ஒரு அடி அடித்தான். அந்த ஒரே அடியில் அந்த அரக்கன் கதறிக் கொண்டே கீழே விழுந்து துடி துடித்து இறந்தான்!

அரக்கனின் கதறல் ஒலியைக் கேட்ட மற்ற வானர வீரர்கள் உடனே கண் விழித்து எழுந்தார்கள். எதிரே ஒரு அரக்கனின் சடலத்தைக் கண்டு மிகவும் வியப்புற்றார்கள்; எனினும் மகிழவும் செய்தார்கள். விரைந்து அவன் சடலத்தின் அருகே சென்று சூழ்ந்து நின்றார்கள். வாயுமகனான அனுமான் அங்கதனை நோக்கி," இவன் யார்? இவன் செய்த காரியம் தான் என்ன?" என்று கேட்டான்.

உடனே அங்கதன் நடந்த விவரத்தை அனுமனிடம் கூறினான். அது கேட்டு அனுமன் அங்கதனின் செயலைப் பாராட்டினான். அப்போது அந்தக் கூட்டத்தில் இருந்த கரடிகளின் அரசனான ஜாம்பவான் அந்த அரக்கனின் சடலத்தைக் கண்டான். இந்த ஜாம்பவான் தான், முன்பு ஸ்ரீ மந் நாராயணர் வாமன ரூபம் எடுத்து உலகை அளந்த போது. இந்த உலகம் முழுதும் பரவிக் கிடந்த அவரது உருவத்தைப் பதினெட்டு முறை வலம் வந்தான். அதன் மூலம் இந்த உலகத்தையே பதினெட்டு முறை வலம் வந்தப் பெருமையைப் பெற்றான். அதனால் இந்த உலகத்தில் அவனுக்குத் தெரியாத விஷயங்களே இல்லை எனச் சொல்லலாம். அப்படிப் பட்ட நல்ல ஞானத்தை கொண்ட ஜாம்பவான் அந்த அரக்கனைப் பற்றியும் அறிந்து வைத்து இருந்தான். ஜாம்பவான் அனுமனிடத்தில்," இந்த அசுரன் யார் என்று சிந்தித்துப் பார்த்தேன். எனக்கு இவனைப் பற்றிப் புரிந்தது. இவன் இந்தத் தடாகத்தை அரசாள்கின்ற துமிரன் என்னும் பெயர் கொண்ட கொடிய அரக்கன். இவன் எண்ணற்ற நல்லோர்களை வதைத்து ஒழித்தவன்." என்றான்.

ஜாம்பாவான் கூறியதைக் கேட்டு மற்ற வானர வீரர்களும் அந்தக் கொடிய அரக்கனை ஒரே அடியில் அடித்துக் கொன்ற அங்கதனைப் பாராட்டினார்கள். பின்பு அந்நேரம் சூரியன் உதயாமாகத் தொடங்கியதும், மீண்டும் தங்களது புனிதப் பயணத்தைத் தொடர்ந்தார்கள் அந்த வானர வீரர்கள். அப்போது பல யோசனை தூரங்கள் கடந்து பெண்ணையாறு, தவசநாடு, விதர்ப்ப நாடு, தண்டகாரணியம் ஆகிய இடங்களில் மூலை முடுக்குகள் என ஒரு இடம் விடாமல் சீதா பிராட்டியை சல்லடை போட்டுத் தேடினார்கள். ஆனால், எங்குமே சீதா பிராட்டி கிடைக்காததால் மிகவும் மனவருத்தம் அடைந்து முண்டகத்துரை என்னும் தெய்வத் தன்மை வாய்ந்த இடத்தை அடைந்தார்கள். அங்கே நறுமணம் கமழும் சோலைகள் நிறைந்து இருந்தன. அத்துறையில் வசிக்கும் பறவைகள் கூட கனிகளையன்றி அங்குள்ள மீன்களைப் புசிப்பதில்லை.அந்த தெய்வீகமான முண்டகத்துரை என்னும் இடத்திலும் வானர வீரர்கள் சீதா பிராட்டியைத் தேடினார்கள். ஆனால், அங்கும் சீதையை அவர்கள் காணாமல் திகைத்து அருகில் இருந்த பாண்டு மலை, கோதாவரி ஆற்றங்கரை, சுவண நதி, குலிங்க தேசம் ஆகிய இடங்களிலும் சீதா பிராட்டியைத் தேடிக் காணக் கிடைக்காமல் உடனே தாவித் தாவி அந்த வானர வீரர்கள் காற்றை விட வேகமாக திருவேங்கட மலையை அடைந்தார்கள். அங்கு உள்ள நீர்த் தடாகங்களில் எப்போதும் அந்தணர்களும், முனிவர்களும், தெய்வ மகளிரும், நீராடுவதைக் கண்டு வியந்து அதன் பெருமையை உணர்ந்தார்கள். பிறகு திருவேங்கட மலை சுற்றி உள்ள அனைத்து இடங்களிலும் சீதா பிராட்டியைத் தேடிக் கிடைக்காமல் வருந்திய வானரக் கூட்டம் மேலும் தனது பயணத்தைத் தொடர்ந்தவாறு தொண்டை நாட்டுக்கு சென்றார்கள். சீதா பிராட்டியைத் தேடிய படியே அங்கு காணப்பட்ட இயற்கையான சூழ்நிலைகள், கோயில்கள், நீர் நிலைகள் என அனைத்தையும் கண்டு வியந்தனர்.

பின்பு தொண்டை நாட்டில் இருந்து புறப்பட்ட வானர சேனை சோழ நாடு சென்றது. அங்கு பரந்த வயல் வெளிகளையும், அதில் மாடுகளை வைத்து உழ முடியாமல் யானைகளை கட்டி உழவு செய்யும் விவசாயப் பெருமக்களின் உழைப்பையும், தமிழக மண்ணின் வளத்தையும் கண்டு வியந்தார்கள். பிறகு பாண்டிய நாடு சென்றும் சீதையைத் தேடினார்கள். அப்போது தமிழர்களின் கட்டடக் கலையையும், வீரத்தையும், பண்பாட்டையும் கண்டு வியந்து அதில் சீதா பிராட்டியைத் தேடுவதைக் கூட சில கணங்கள் மறந்த வானர சேனை, மீண்டும் சீதா பிராட்டியின் ஞாபகம் வர அங்கிருந்தும் வேகமாகப் புறப்பட்டு ஒரு வழியாக மகேந்திர மலைக்குப் பிராட்டியைத் தேடி வந்தார்கள்.