அறிஞர் அண்ணா

bookmark

காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சராவார். அண்ணா, காஞ்சீபுரத்தில், மத்திய தர நெசவுத் தொழிலாளர் குடும்பமொன்றில் பிறந்தார். அவர், சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார். பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். அரசியலில் காங்கிரசல்லாத திராவிடக்கட்சிகளின் முதல் பங்களிப்பாளராக அண்ணாதுரை விளங்குகின்றார். தான் வாழ்ந்த காலத்தில், அண்ணா வாரிசு அரசியலை காட்டு ராஜாங்கம் என்று சாடினார்.ஆனால் , அப்போது அவருக்குத் தெரியாது பிற்காலத்தில் அதுவே அவர் கட்சியின் முகமாகிப் போகும் என்று.

முதன்முதலில் இந்தியா குடியரசான பிறகு ஆட்சி அமைத்த முதல் காங்கிரசல்லாத திராவிடக்கட்சித்தலைவர் என்ற பெருமையுடன், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவர் என்ற பெருமையும் கொண்டவர். இவரைப் பற்றி மேலும் விவரித்தால் வரலாற்றில் பக்கங்கள் போதாது, இருந்தாலும் எங்களால் முடிந்த வரை இவரது வாழ்க்கை வரலாற்றை சொல்ல முற்படுகிறோம்.

தமிழிலும், ஹிந்தியும், ஆங்கிலத்திலும், தெலுங்கு மிகச்சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான இவர் பல முற்போக்கு, சீர்திருத்த நாடகங்களையும் எழுதி இயக்கி அதில் ஒரு பாத்திரமாக நடித்தவரும் ஆவார். தமிழ் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியவரும் தன்னுடைய திராவிட சீர்திருத்தக் கருத்துக்களை அதன் மூலம் முதன்முதலாக பரப்பியவரும் இவரே. நடுத்தரவர்க்க நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவரான அண்ணாதுரை, தன் ஆரம்பகால வாழ்க்கையை பள்ளி ஆசிரியராகத் துவங்கியவர், சென்னை இராசதானியில் (மெட்ராஸ் பிரசிடென்சி) தன் அரசியல் ஈடுபாட்டினை முதன்முதலில் பத்திரிகையாளராக, பத்திரிகையாசிரியராக வெளிப்படுத்தினார்.

அன்றைய காலகட்டத்திலும் கொஞ்சம் படித்துவிட்டால் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும், அதிலும் கல்லூரியில் படித்துவிட்டால் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும் என்ற மனப்பான்மையும் ஆங்கில மோகமும் அதிகமிருந்தது. ஆங்கிலம் பேசினால் கவுரவம் என்று எண்ணிய காலமது. சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த அண்ணா விடுமுறையில் அவர் பாட்டியின் இல்லம் அடைந்தபொழுது, அவரின் பாட்டியார் சிறிதளவு ஆங்கிலம் பேசிக் காட்டுமாறு எவ்வளவு வற்புறுத்தியும் ஆங்கிலம் பேச மறுத்து ஆங்கிலம் பேசினால் உனக்கென்ன புரியும், தவிர நாம் இப்பொழுது பேசிக்கொண்டுதான் இருக்கின்றோம். தேவையில்லாமல் வேண்டாம் என்று மறுத்துவிட்டார். அவர் பாட்டியின் அன்புக் கட்டளையாக இருந்தாலும், போலியாக, தேவையில்லாமல் ஆங்கிலம் பேசுவதில் அண்ணாவிற்கு உடன்பாடில்லை.

ஒரு தடவை சில இங்கிலாந்து மாணவர்கள் அண்ணாவை பரிகசிப்பதற்காக அவரிடம் ஏனென்றால் என்ற வார்த்தை மூன்று தடவை தொடர்ந்து வருகிற மாதிரி வாக்கியம் கூற முடியுமா என்று கேட்டனர். அதற்கு அவர், "No sentence can begin with because because, because is a conjunction.”

“ எந்த வாக்கியமும் ஏனென்றால் வார்த்தையை கொண்டு துவங்காது ஏனென்றால், ஏனென்றால் என்பது ஒர் இணைப்புச் சொல்."

” என்று உடனே பதிலளித்தார்.

பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, நீதிக் கட்சியில் சேர்ந்தார். பின்னர் பெரியாருடன் திராவிடக் கழகத்தில் இணைந்து, மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பகுத்தறிவுக் கருத்துக்களையும், சமூக சீர்திருத்தக் கருத்துக்களையும் பரப்புவதில் முன்னின்று ஈடுபட்டார்.பெரியாரின் தனித்திராவிடநாடுக் கொள்கையின் காரணமாகவும், தன்னைவிட வயதில் இளையவரான மணியம்மையாரை பெரியார் மணம் புரிந்துகொண்டமையினால் கருத்துவேறுபாடு கொண்டு, திராவிடக் கழகத்தின் முக்கிய உறுப்பினர் பலருடன், 1949 ல், பெரியாரை விட்டு விலகி, திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) என்ற புதிய இயக்கமொன்றை நிறுவினார்.

உண்மையில் இப்படியும் ஒரு கூற்று உண்டு. திமுகவை ஆரம்பிக்கிற எண்ணமே அண்ணாவுக்கு இல்லை; பெரியாருடன் மன வருத்தம் ஏற்பட்டு விலகி இருந்த பொழுது, " எப்படி அவ்வளவு பெரிய பாரத்தைச் சுமப்பது வேண்டாம்! " என மறுத்தவரை ஈ.வெ. கே .சம்பத் சம்மதிக்க வைத்தாராம். அக்கட்சிக்கு ஆங்கிலத்தில் அண்ணா வைத்த பெயர் " dravidan progressive federation". ஆனால், பிற்காலத்தில் பத்திரிக்கைகள் மூலமாக சுருக்கப்பட்டு காலப்போக்கில் மருவி DMK என்று ஆனது.

தனிக்கட்சி துவங்கினாலும் தன்கட்சி கொள்கைகள் தாய்க்கட்சியான திரவிடக்கட்சியை ஒத்தே செயல்பட்டது. இந்தியாவின் தேசிய அரசியலில் பங்குகொள்ளும் விதமாக இந்தியக் குடியரசானதிற்குப் பின் இந்திய சீனப் போருக்குப்பின் 1963 இல் தனது தனித்திராவிட நாடுக் கொள்கையை கைவிட்டார்.

ஆளும் காங்கிரசுக் கட்சிக்கெதிராக பல்வேறு போராட்டங்களில், பல்வேறு காலகட்டங்களில் ஈடுபட்டு அவ்வாட்சியை எதிர்க்கலானார். இறுதியில் 1965 இல் இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் மிகத்தீவிரமாக ஈடுபடலானார். இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டதன் விளைவாக மக்களாதரவை அவரும், அவரது கட்சியான திராவிட முன்னேற்றக் கட்சியும் அபரிமிதமாக பெற்றன.

இதே போல பெரியாரை விட்டுப் பிரிந்த பின் எழுதப்பட்ட அறிக்கைக்குக் " கண்டனக்கனைகள்" எனப் பெயரிடப்பட்டு இருப்பதை பார்த்த அண்ணா," பெரியாரை எதிர்ப்பதா?" எனச் சொல்லி அதைக் கண்ணீர் துளிகள் என்று மாற்றினார். அண்ணா, பெரியார் மீது உண்மையானா மாரியாதையைக் கொண்டவர். தனது 19 வருட பிரிவில் ஒரு முறை கூட பெரியாரை விமர்சித்துப் பேசியதில்லை, ஏன் ஒரு கடும் சொற்கள் கூட கூறியதில்லை அண்ணா.பெரியார் தவிரத் தலைவர் இல்லை எனச் சொல்லி தலைவர் பதவியே இல்லாமல் கட்சி நடத்தி இருக்கிறார் அண்ணா.

ஒரு முறை காமாரஜர் கூட கோபத்தில் "இவர்களின் விரல்களை வெட்டுவேன்" என்று கடுமையாகச் சாடினாராம்.அதற்கு பதில் அளித்த அண்ணாதுரை "குணாளா குலக்கொழுந்தே" என்று ஆரம்பித்து காமராஜருக்கு அமைதியாக பதில் அளித்தாராம். மொத்தத்தில் அவர் வாழ்ந்த காலத்தில் அரசியலின் மானம் காக்கப்பட்டது.

முதல்வராக இருந்த காலத்தில் கூட அண்ணா பெட்ரோல் போட காசில்லாமல் திணறி இருக்கிறார் என்று அவருடன் இருந்த அதிகாரி சுவாமிநாதன் பதிவு செய்து இருக்கிறார். சென்னை நுங்கம்பாக்கம் இந்தியன் வங்கியில் 5,000 ரூபாய் மயிலாப்பூர் இந்தியன் வங்கியில் 5,000 ரூபாய் ஆகியன மட்டுமே இறந்த பொழுது அவருக்கு இருந்த கை இருப்பு.

சிவாஜி கட்சியை விட்டு விலகிய பொழுது அவரை நாம் தான் அடையாளம் காட்டினோம் என்று யாரோ சொல்ல, அண்ணா சிரித்துக் கொண்டே " அமெரிக்காவை கொலம்பஸ் அடையாளம் காட்டாவிட்டால் அது அமெரிக்கா இல்லையா?" எனக் கேட்டார்.

சுயமரியாதை திருமணங்களைச் சட்ட பூர்வமாக்கினார். தனது பேச்சாற்றலால் தமிழகத்தையே கட்டிப் போட்டவர் அண்ணா. ஒரு முறை அவரது தேர்தல் பேச்சைக் கேட்க ஆர்வத்துடன் தமிழக மக்கள் ஒரு நாள் மாலைப் பொழுதில் கூடி இருந்தனர். அப்போது இருள் சூழ்ந்து வெகு நேரம் ஆகியும் அண்ணா வரவில்லை, என்றாலும் அங்கு வந்த மக்கள் கூட்டத்தில் ஒருவர் கூட அந்த இடத்தை விட்டுப் போகவில்லை. அண்ணா இரவு 10:30 க்குத் தான் அந்தக் கூட்டத்தை அடைந்தார். வந்தவர் ஒரே ஒரு வரி தான் பேசினார் " மாதமோ சித்திரை, மணியோ பத்திரை எனக்கு மறவாமல் இடுவீர் முத்திரை" அவ்வளவு தான். அப்போது நடந்த தேர்தலில் பெருவாரியான வெற்றியை அடைந்தார் அண்ணா. சில வாரத்தைகள் கொல்லும்,சில வார்த்தைகள் வெல்லும் என்பார்கள். ஆனால், அண்ணாவின் ஒவ்வொரு வார்த்தையும் வென்றது. பொடி போடுவதைத் தவிர எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாதவர் அண்ணா.

சட்டமன்றத்தில் அண்ணாதுரை எதிர்கட்சியாக இருந்தபொழுதிலும், அளுங்கட்சியாக இருந்த பொழுதிலும் அவர் பணி சிறந்ததாகவே கருதப்பட்டது . அவரின் பேச்சு கண்ணியத்துடன் எதிர்த்து கேள்வி கேட்பவரையும் சிந்திக்கவைக்கவும், கோபக்கணைகளுடன் வார்த்தைகளை தொடுப்பவர்களையும் வெட்கித் தலைக்குனிய வைக்கும் நிலையிலேயே அவரின் பேச்சுக்கள் அமைந்திருந்தன.

1962 இல் அண்ணாதுரை மற்றும் அவரது கட்சியினர் 50 உறுப்பினர்கள் வெற்றிபெற்று சட்டமன்றத்தில் இடம்பெற்றிருந்தபொழுது, ஆளும் காங்கிரஸ் சார்பில் வைக்கபட்ட குற்றசாட்டுக்கு, மிக சாதுர்யமாக பதிலளித்த்தை கண்டு ஆளுங்கட்சியான காங்கிரசு கட்சியே வியந்தது. அவர்கள் அண்ணாவை நோக்கி வைத்த குற்றசாட்டு, அண்ணாதுரையால் நல்ல எதிர்க்கட்சியாக இயங்கத் தெரியவில்லை என்று கேலியுடன் தெரிவித்த குற்றசாட்டை அண்ணாதுரை இவ்வாறு பதிலுரைத்தார்.

    “ நீங்கள் எதிர்கட்சி சரியில்லை, என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் விரைவில் நீங்களே, அந்தக் குறையைப் போக்கி விடுவீர்கள் என்று எண்ணுகிறேன். நாங்கள் ஒரு காலத்தில் நீங்கள் இப்போது உள்ள இடத்தில் அமர வேண்டியவர்கள் என்பதால் பொறுப்புணர்ந்து அடக்கத்துடன் கூறுகிறேன்”.என்று தீர்க்கதரிசனத்துடன் குறிப்பிட்டார்.

அண்ணாதுரை முதலமைச்சரான இரண்டு வருடத்திற்குள் புற்று நோய் தாக்குதலுக்குள்ளாகி, மருத்துவ பராமரிப்பிலிருக்கும் பொழுது 3 ஆம் தேதி பிப்ரவரி , 1969 அன்று மரணமடைந்தார். (புகையிலைப் பொடி நுகரும் பழக்கம் காரணமாக ) இந்நோய் தீவிரமடைந்து மரணமடைந்தார். அவரின் இறுதி மரியாதையில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு கின்னஸ் உலக புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இறுதி மரியாதையில் சுமார் 1 கோடியே 50 இலட்சம் பேர் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர். இவரின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. இவரின் நினைவை போற்றும் வகையில் இவ்விடம் அண்ணா சதுக்கம் என்றப் பெயரில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.