சுவாமி விவேகானந்தர்
சுவாமி விவேகானந்தர்..!!
👳 நம் நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றினை நாம் படிக்கும்போது, அந்த தலைவர்கள் அத்தனை பேருக்கும் பின்னணியில் ஒரு உண்மையான உந்து சக்தியாக இருந்தவர் யார் என்றால், அவர் வேறு யாருமில்லை - சுவாமி விவேகானந்தர்தான்.
👳 19ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் தலைசிறந்த சமய தலைவர்களுள் ஒருவர். நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு இந்து சமயத்தை வளர்த்தவர்.
👳 சுவாமி விவேகானந்தர் அவர்கள், வேதாந்த தத்துவத்தின் மிக செல்வாக்கு மிக்க ஆன்மீக தலைவர்களுள் ஒருவராக தலைச்சிறந்து விளங்கியவர். இவர் ராமகிருஷ்ண பரமஹம்சரின் தலைமை சீடராவார். மேலும் 'ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடம்' மற்றும் ஸ்ரீ 'ராமகிருஷ்ண மிஷன்' போன்ற அமைப்புகளையும் நிறுவியவர்.
👳 சுவாமி விவேகானந்தர் அவர்கள், ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உதவியற்றோர் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் நலனுக்காகவும், நாட்டிற்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்த தியாகத்தின் அவதாரமாகத் திகழ்ந்தவர்.
👳 பெரும் சமூக சீர்திருத்தவாதியாகவும், தத்துவவாதியாகவும், சிந்தனையாளராகவும் மற்றும் இந்திய இளைஞர்களுக்கான துடிப்புச் சின்னமாகவும் விளங்கும் சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளான ஜனவரி 12ஆம் தேதி ஆண்டுதோறும் நாடு முழுவதும் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது.
சுவாமி விவேகானந்தரின் குழந்தை பருவம் !!
👳 சுவாமி விவேகானந்தர் 1863ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி கல்கத்தாவில் பிறந்தார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. இவரது தந்தை பெயர் விசுவநாத் தத்தா மற்றும் தாயார் பெயர் புவனேஸ்வரி தேவி ஆகும். இவரது தாய்மொழி வங்காளமாகும்.
👳 சுவாமி விவேகானந்தர் மிகவும் கலகலப்பாகவும், குறும்புத்தனமாகவும் இருப்பார். இவர் சிறுவயதிலேயே மிகுந்த நினைவாற்றல் கொண்டவராகவும், சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார்.
👳 மேலும் இவர் இசையில் ஆர்வம் மிக்கவராக இருந்தார். அதனால் இசையும், இசை வாத்தியங்களும் பயின்றார். இவர் சிறந்த பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தார்.
👳 தினசரி விவேகானந்தருக்கு அவரது தாயார் ராமாயண, மகாபாரத கதைகளைச் சொல்வார். இதனால் ராமர் கதாபாத்திரத்தின் மீது மரியாதை தோன்றி ராமரை வணங்க தொடங்கினார்.
👳 இவர் இளம்வயது முதலே தியானம் இருப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். தியானத்தில் இருக்கும்போது சில நேரங்களில் உறவினர்கள் அவரது உடலை குலுக்கி அவரை சுய நினைவுக்கு கொண்டுவர வேண்டியதாய் இருந்தது. சிறுவயதிலிருந்தே எல்லாவற்றையும் ஆராய்ந்து அறியும் குணம் இவருக்கு இருந்தது.
👳 சிறுவயது முதலே சுவாமி விவேகானந்தருக்கு துறவிகளின் மீது பெரும் மரியாதை இருந்தது. யார் எதை கேட்டாலும், கேட்ட உடனேயே விட்டுக் கொடுக்க வேண்டுமென்ற மனப்பக்குவம் கொண்டிருந்தார். அவரிடம் பிச்சைக்காரன் பிச்சைக் கேட்கும் போதெல்லாம், அவரிடத்தில் இருக்கும் அனைத்தையும் கொடுத்து விடுவார்.
👳 இதனால் ஒருமுறை அவரை, தாயார் ஒரு அறையில் பூட்டி வைத்துவிட்டார். அப்படியிருந்தும் அந்த அறையில் இருந்த பொருட்களையும், தனது உடைகளையும் அறையின் ஜன்னல் வழியாக யாசகம் கேட்போருக்கு வெளியே வீசினார் விவேகானந்தர். இதனால் குழந்தைப் பருவத்திலிருந்தே சுவாமி விவேகானந்தருக்கு தியாக உணர்வு அதிகம் எனலாம்.
👳 இவர் இளம்வயதில் இருக்கும்போதே, சாதி மத பாகுபாட்டால் சமூகத்தில் நிலவிய மூடப் பழக்கவழக்கங்களை பற்றி பல கேள்விகளும், சந்தேகங்களும் எழுப்பினார்.
உயர்கல்வி :
👳 சுவாமி விவேகானந்தர், 1879ல் மெட்ரிக் பள்ளிப்படிப்பை முடித்து, கல்கத்தாவிலுள்ள (Presidency College) பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார். பின் கல்கத்தாவிலுள்ள (Scottish Church College) ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் சேர்ந்து தத்துவப் பாடத்தை படித்தார். மேலும், இவர் மேல்நாட்டு தத்துவங்களையும், தருக்கவியலையும் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாற்றையும் படித்தார்.
ஆன்மீக ஈடுபாடு :
👳 இச்சமயத்தில் இவர் மனதில் இறை உண்மைகளைப் பற்றி பல கேள்விகளும், சந்தேகங்களும் எழுந்தன. இறைவனை பலர் வழிபடுவதும், உலகின் வேறுபாடுகளும்-ஏற்றத்தாழ்வுகளும் இவருக்கு முரண்பாடாக தோன்றியது. இது பற்றி பல பெரியோர்களிடம் விவாதித்தார். இதுவே, அவரை 'கேஷப் சந்திர சென்' தலைமையிலான முக்கிய மத இயக்கமான 'பிரம்ம சமாஜில்' இணைய செய்தது. ஆனால், இம்முயற்சிகள் யாவும் இவர் கேள்விகளுக்கு தகுந்த விடையளிக்க முடியவில்லை.
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் சந்திப்பு :
👳 இந்த சமயத்தில், தஷினேஸ்வர் 'ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரை' பற்றி சுவாமி விவேகானந்தருக்கு தெரிய வந்தது. ஸ்ரீராமகிருஷ்ணர் அவர்கள், காளி அம்மன் கோவிலில் ஒரு பூசாரியாக இருந்தார். அவர் ஒரு கல்வியாளராக இல்லையென்றாலும், ஒரு சிறந்த பக்தனாக இருந்தார். இவர் பலமுறை கடவுளை உணர்ந்ததாக கூறியுள்ளார்.
👳 1881ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தர், அவரது நண்பர்களுடன் ராமகிருஷ்ண பரமஹம்சரை பார்க்க தஷினேஸ்வருக்குச் சென்றார். விவேகானந்தர், ராமகிருஷ்ணரிடம், 'கடவுளை பார்த்திருக்கிறீர்களா?' என்று கேட்டார். அதற்கு உடனடி பதிலாக, ராமகிருஷ்ணர் அவர்கள், 'ஆம், நான் உன்னை இங்கே பார்ப்பது போல், இன்னும் தெளிவாக கடவுளைப் பார்த்திருக்கின்றேன்' என்றார். இது சுவாமி விவேகானந்தருக்கு அதிர்ச்சியாகவும், புதிராகவும் இருந்தது.
👳 எதையும் பகுத்தறிந்து ஏற்றுக்கொள்ளும் விவேகானந்தரால் முதலில் ராமகிருஷ்ணரின் இறைவனைப் பற்றிய கருத்துக்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறைவழிபாட்டையும் உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை.
👳 பின் ராமகிருஷ்ணரின் வார்த்தைகள் நேர்மையானதாகவும், அவருக்குக் கிடைத்த ஆழ்ந்த அனுபவமே அவரை இவ்வாறு உச்சரிக்க செய்தது என்பதையும் உணர்ந்தார் விவேகானந்தர். இதுவே, அவர் அடிக்கடி ராமகிருஷ்ணர் அவர்களை சென்று சந்திக்கக் காரணமாக அமைந்தது.
👳 ராமகிருஷ்ணரின் போதனைகள் ஒரே தனி வழியினை போதிக்காமல், இரண்டு வழிகளிலும் இருக்கும் உண்மையை உணர்த்துவதாக இருந்தன. ராமகிருஷ்ணரின் ஆன்மீக ஈடுபாட்டால், விவேகானந்தரால் பக்தி மார்க்கம் மற்றும் ஞான மார்க்கத்தின் அவசியத்தினை புரிந்து கொள்ள முடிந்தது.
ராமகிருஷ்ணர் மீது கொண்ட பற்று!!
👳 எதையும் முற்றிலும் ஏற்கும் முன், அதனை சோதித்துப் பார்க்கும் குணம் சுவாமி விவேகானந்தருக்கு இருந்தது. அதனால், எந்தவொரு சோதனையும் இல்லாமல் ராமகிருஷ்ணர் அவர்களை தனது குருவாக ஏற்றுக்கொள்ள அவரால் இயலவில்லை.
👳 ஒருமுறை ராமகிருஷ்ணர் 'ஒருவர் கடவுளை உணர வேண்டும் என்றால், பணம் மற்றும் பெண்களின் மீதுள்ள ஆசையை விட்டுக்கொடுக்க வேண்டும்' என்று கூறினார். இதனை நினைவில் கொண்ட விவேகானந்தர், ராமகிருஷ்ணர் அவர்களின் தலையணைக்கடியில் ஒரு ரூபாய் நாணயத்தை மறைத்து வைத்தார்.
👳 வெளியில் சென்ற ராமகிருஷ்ணர், தனது அறைக்கு வந்து கட்டிலில் படுத்தார். மறுகணமே, அவருக்குத் தேள் கடித்தது போல் இருந்ததால், கட்டிலிலிருந்து குதித்தார். பின்னர், அவரது மெத்தையை உதறியபோது, அதில் இருந்து ஒரு ரூபாய் நாணயம் கீழே விழுந்ததைக் கண்டார்.
👳 பின்னர், இச்செயல் சுவாமி விவேகானந்தருடையது என்பதையும் அறிந்தார். இந்நிகழ்விற்குப்பின் சுவாமி விவேகானந்தர், ராமகிருஷ்ணரை தனது குருவாக ஏற்றுக்கொண்டு, இரட்டைத் தன்மையல்லாத அத்வைத வேதாந்தத்தில் ஐந்து ஆண்டுகள் அவரின் கீழ் பயிற்சி மேற்கொண்டார்.
விவேகானந்தர் பெயர் மாற்றம் :
👳 மற்ற சீடர்களை காட்டிலும், வேறுபட்டு விவேகமிக்கவராக திகழ்ந்ததால் நரேந்திரநாத் தத்தா (இயற்பெயர்) என்ற பெயரை 'விவேகானந்தர்' என்று மாற்றி சூட்டினார் ராமகிருஷ்ண பரமஹம்சர். அன்றிலிருந்து அந்த பெயரிலேயே அழைக்கப்பட்டார் விவேகானந்தர்.
குருவின் சமரசப் பார்வையும், காளியின் தரிசனமும் :
👳 ஒரு சமயம் குரு ராமகிருஷ்ணர், தொண்டை புற்றுநோயால் சாப்பிட முடியாமல் சிரமப்பட்டார். 'நீங்கள் தான் காளி பக்தர் ஆயிற்றே! அவளிடம் நேரில் பேசுவீர்களே! போய் அவளிடம் குணமாக்க கேளுங்கள்' என்றார் விவேகானந்தர்.
👳 'கேவலம், இந்த உடலைக் குணமாக்குவதற்காக அவளிடம் நான் கையேந்தமாட்டேன்' என உறுதியாகச் சொல்லிவிட்டார் குருநாதர். விவேகானந்தர் வற்புறுத்தவே, வேறு வழியின்றி காளியை வழிபட்டு விட்டு வந்தார்.
👳 அப்போது 'அம்பாள் என்ன சொன்னாள், குணமாக்கி விடுவாளா?' என்று விவேகானந்தர் ஆவலுடன் கேட்கவே, 'இல்லை! நீ சாப்பிடாவிட்டால், உனக்காக பல வாய்கள் சாப்பிடுகிறதே! அந்த திருப்தி போதாதா!' என அவள் திருப்பிக்கேட்டாள். நான் வந்துவிட்டேன் என்றார். மற்றவர்கள் சாப்பிட்டால், தான் சாப்பிட்டது போல என்று நினைத்த குருவின் சமரசப்பார்வை, விவேகானந்தரையும் ஒட்டிக்கொண்டது.
சுவாமி விவேகானந்தரின் துறவறம்!!
👳 சுவாமி விவேகானந்தர் ஸ்ரீராமகிருஷ்ணரிடம் அத்வைத வேதாந்தத்தை கற்றுத் தேர்ந்தார். பின் அவர் தனது அடுத்த நிலை என்ன? என்று யோசித்து, துறவறம் மேற்கொள்ளலாம் என்ற முடிவிற்கு வந்தார்.
துறவறத்தின் மீது பற்று :
👳 விவேகானந்தருக்கு துறவறத்தின்; மீது பற்று வந்தது. அதை தன் தாயிடம் தெரிவித்தார். அப்போது அவரின் தாயார் கத்தி ஒன்றை எடுத்துவருமாறு கூறினார். விவேகானந்தரும் கத்தியை எடுத்து வந்தார். ஆனால், அவரது தாயாரோ, 'இன்னும் உனக்கு துறவறம் மேற்கொள்வதற்கான பக்குவம் ஏற்படவில்லை' என கூறிவிட்டார்.
👳 ஒவ்வொருமுறையும் விவேகானந்தர் துறவறம் பற்றி பேச்சு எடுக்கும் போதெல்லாம் கத்தியை எடுத்துவருமாறு அவரின் தாயார் கூறுவார். பிறகு அவருக்கு பக்குவம் வரவில்லை எனக்கூறி நிராகரித்துவிடுவார். ஆனால், ஒருசமயம் அவ்வாறு கேட்டபோது விவேகானந்தரின் துறவறத்துக்கு அவரின் தாயார் சம்மதம் தெரிவித்துவிட்டார்.
👳 இதனால், அவருக்கு மிகுந்த சந்தேகம் எழுந்தது. அதைத் தன் தாயிடமே வினவினார். அதற்கு அவரின் தாயாரோ 'துறவறம் மேற்கொள்பவர்கள், அடுத்தவர்களின் துன்பத்தை தன் துன்பமாக எண்ணிச் செயல்பட வேண்டும். ஒவ்வொருமுறையும் நீ என்னிடம் கத்தியை எடுத்துவந்து கொடுக்கும்போது, அதன் கூர்மையான பகுதி, என்னை நோக்கி இருக்குமாறு தருவாய். ஆனால், இம்முறை கத்தியின் கைப்பிடி இருந்த பகுதியை என்னிடம் தந்தாய். இதன்மூலம் உனக்கு துறவறம் மேற்கொள்வதற்கான தகுதி வந்துவிட்டது எனத் தெரிகிறது. ஆகையால் தற்போது நீ துறவறம் மேற்கொள்ளலாம்' என்றார்.
துறவறம் :
👳 1886ஆம் ஆண்டு இராமகிருஷ்ணர் இறந்த பின் விவேகானந்தரும் இராமகிருஷ்ணரின் மற்ற முதன்மை சீடர்களும் துறவிகளாயினர். பின்னர் நான்கு ஆண்டுகள் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் சுற்றினார் விவேகானந்தர்.
👳 தன்னுடைய இந்த பயணங்கள் மூலம் இந்தியாவிலுள்ள அனைத்து பகுதிகளின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை நிலை போன்றவற்றை அனுபவித்து அறிந்தார் விவேகானந்தர்.
👳 காசி, லக்னோ, ஆக்ரா, பிருந்தாவனம், ரிஷிகேஷ் என இந்தியாவின் எல்லா பகுதிகளுக்கும் யாத்திரை மேற்கொண்டார். சுமார் 14 ஆண்டுகள் பசிக்கொடுமையை உணர்ந்து அடுத்த வேளை என்ன சாப்பிடுவது? எங்கு உறங்குவது? என தெரியாமல்கூட கடுமையான துறவு வாழ்க்கையை மேற்கொண்டார்.
👳 சுவாமி விவேகானந்தர், தன் பயண முடிவில் இந்திய துணைகண்டத்தில் தென்கோடி முனையில் இருக்கும் கன்னியாகுமரிக்கு 1892ல் சென்றார். அவர் கடலில் சிறிது தூரம் நீந்தி, ஒரு தனி பாறையின் மீது அமர்ந்து, தனது தியானத்தை தொடங்கினார்.
👳 மூன்று நாட்கள் அங்கு தியானம் மேற்கொண்ட அவர், இந்தியாவின் கடந்த, தற்போதைய மற்றும் எதிர்காலம் பற்றி தன் தியானத்தில் கண்டதாகக் கூறினார். அவர் அமர்ந்து தியானம் செய்த அந்தப் பாறையே, விவேகானந்தரின் நினைவாக பிரபலமாகவும், ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாகத் திகழும் 'விவேகானந்தர் பாறை' என்ற பெயரில் கன்னியாகுமரியில் இன்றும் உள்ளது.
சிகாகோவில் சொற்பொழிவுக்கு வாய்ப்பு :
👳 சுவாமி விவேகானந்தர் இராமேஸ்வரத்துக்கு யாத்திரை மேற்கொண்டபோது, அந்த காலக்கட்டத்தில் இராமநாதபுரத்தின் மன்னராக இருந்த பாஸ்கர சேதுபதியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. சொற்பொழிவாற்றுவதில் வல்லவரான மன்னருக்கு சிகாகோவில் நடைபெற இருந்த உலக ஆன்மீக மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு வந்திருந்தது.
👳 விவேகானந்தரின் விவேகத்தை உணர்ந்திருந்த மன்னர் அந்த மாநாட்டில் பேச தம்மை விட விவேகானந்தரே சிறந்தவர் என முடிவு செய்தார். அவரது வேண்டுகோளை ஏற்று சிகாகோ சென்றபோதுதான் அந்த புகழ்பெற்ற சொற்பொழிவை ஆற்றினார் விவேகானந்தர்.
👳 1893ல், சிகாகோ உலக மாநாட்டில் மற்றவர்களெல்லாம் அங்கு வந்திருந்தவர்களை 'லேடீஸ் அன்ட் ஜென்டில்மேன்' என அழைத்து பேச்சை ஆரம்பிக்க, விவேகானந்தர் தனக்கே உரிய தனித்துவத்துடன் 'டியர் பிரதர்ஸ் அன்ட் சிஸ்டர்ஸ்' (Dear Brothers & Sisters) என ஆரம்பித்து, உலக மக்கள் யாவரும் இந்தியர்களின் சகோதர சகோதரிகள் என்ற கருத்தை ஆணித்தரமாகச் சொன்னார். அந்த ஒரு வார்த்தைக்கே அரங்கம் அதிர்ந்தது.
👳 சுவாமி விவேகானந்தர் அவரது பிரமாதமான பேச்சுத்திறன் மூலமாக அமெரிக்காவிலுள்ள அனைவரையும் மெய்மறக்கச் செய்தார். அவர் எங்கு சென்றாலும், இந்திய கலாச்சாரத்தின் பெருந்தன்மையைக் கருத்தூன்றிப் பேசினார். அவர் வரலாறு, சமூகவியல், தத்துவம் அல்லது இலக்கியம் போன்ற எந்த ஒரு தலைப்பாக இருந்தாலும், தன்னிச்சையாக எளிதாகப் பேசினார்.
பெண்களையெல்லாம் தாயாக கருதியவர் :
👳 இவரது பேச்சையும், சொற்பொழிவையும் கேட்டு அதிசயித்த ஒரு பெண் விவேகானந்தர் சென்ற இடமெல்லாம் பின் தொடர்ந்தார். அவரைத் தனிமையில் சந்திக்க வேண்டும் என்று எவ்வளவோ முயன்றார்.
👳 அயோவா, சென்லுயி, டெட்ராயிட், பாஸ்டன், கேம்பிரிட்ஜ், வாஷிங்டன் நியூயார்க் ஆகிய இடங்களில் விவேகானந்தருக்கு பேச அழைப்பு வந்தது. அவரும் சென்று பேசினார். அந்த இடங்களில் எல்லாம் அந்த பெண் பின்தொடர்ந்தார். கடைசியாக அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
👳 அமெரிக்க இளைஞர்கள் பலர் என் அழகில் மயங்கி என்னை சுற்றுகிறார்கள். ஆனால், நான் உங்கள் அறிவில் மயங்கி உங்களைச் சுற்றி வருகிறேன். என்னுடைய அழகும், உங்களுடைய அறிவும் சேர்ந்தால் நன்றாக இருக்குமே! நாம் திருமணம் செய்துகொண்டால் என் அழகோடும் உங்கள் அறிவோடும் சேர்ந்த குழந்தை பிறக்கும் என்று கூறினார் அந்த 20 வயது இளம்பெண். அப்போதுதான் 30 வயதைத் தொட்டிருந்த விவேகானந்தர் என்ன பதில் சொன்னார் தெரியுமா?
👳 'தாயே எனக்கு வயது 30 உங்களுக்கு 20 வயது இருக்கும். நாம் திருமணம் செய்து நமக்கு பிறக்கும் குழந்தை அறிவுமிக்கதாக இருக்குமென்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. அதற்குப் பதிலாக நீங்கள் என்னையே மகனாக ஏற்றுக் கொள்ளலாமே' என்றார்.
👳 சுவாமி விவேகானந்தரின் அந்த பதிலைக் கேட்டு ஸ்தம்பித்துபோனார் அந்தப் பெண். தன் கண் காண்கின்ற பெண்களையெல்லாம் தாயாக கருதியவர் சுவாமி விவேகானந்தர்.
👳 மேலும், சில ஆண்டுகள் மேலைநாடுகளில் தங்கி பல சொற்பொழிவுகள் ஆற்றி, வேதாந்த கருத்துகளை அனைவரிடமும் அறிமுகப்படுத்தினார். நியூயார்க் மற்றும் லண்டன் நகரங்களில் வேதாந்த மையங்களை நிறுவினார்.
இந்தியா திரும்புதல்:
👳 1897ஆம் ஆண்டு இந்தியா திரும்பியவுடன் கொழும்பு முதல் கல்கத்தா வரை அவர் ஆற்றிய பேச்சுகள், அப்போது கீழ்நிலையில் இருந்த இந்தியரை விழிப்புறச் செய்வதாகவும், இளைஞர்களுக்குள் இருந்த ஆற்றல்களை உணரும்படிச் செய்வதாகவும் அமைந்தது.
👳 உலக அரங்கில் இந்து மதத்தின் புகழைத் தன் சொற்பொழிவால் நிலைநிறுத்திய விவேகானந்தர், அமெரிக்கப் பயணத்தை முடித்துவிட்டு இலங்கை மார்க்கமாக பாம்பன் குந்துகால் பகுதியில் வந்து இறங்கினார். பாம்பனில் மிகச் சிறப்பான வரவேற்பை அளித்தார் அன்றைய ராமநாதபுரம் சமஸ்தான மன்னர் பாஸ்கர சேதுபதி.
ராமகிருஷ்ணா மிஷன் துவக்கம்!!
👳 மேற்கு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சுவாமி விவேகானந்தர், நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் 1897ல் இந்தியா திரும்பினார். இந்தியர்கள் மத்தியில் ஆன்மீக வளர்ச்சிக்கான தகவல்களைப் பரப்பத் தொடங்கினார். 'சமூக சேவை என்பது ஒரு கூட்டு முயற்சியால் மட்டுமே சாத்தியமாகும்' என்று அவர் உணர்ந்தார்.
👳 இந்த குறிக்கோளை அடைய, சுவாமி விவேகானந்தர், 1897ல் 'ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன்' என்ற அமைப்பைத் தொடங்கி, அதன் சிந்தனைகளையும், இலக்குகளையும் முறைப்படுத்தினார். அடுத்த இரண்டு ஆண்டுகளில், கொல்கத்தாவில் கங்கை நதிக்கரையில் பேலூரில் ஒரு தளம் வாங்கினார். அங்கு, அவர் கட்டிடங்களைக் கட்டமைத்து 'ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தை' நிறுவினார்.
👳 ராமகிருஷ்ணா மடம், ராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவாக சென்னை, மைலாப்பூரில் கட்டப்பட்டது. இம்மடம், கொல்கத்தாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தின் தலைமையகமான பேலூர் மடத்தின், கிளை மடமாக தென்னிந்தியாவில் அமைந்துள்ளது. இம்மடம், ஸ்ரீ ராமக ருஷ்ணரின் நேரடி சீடரான சுவாமி ராமகிருஷ்ணானந்தரால் தொடங்கப்பட்டது.
மனதை ஒருமுகப்படுத்தினால் வெற்றி :
👳 சுவாமி விவேகானந்தர் சொற்பொழிவாற்ற வெவ்வேறு ஊர்களுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்படியாக ஒருமுறை அமெரிக்காவில் ஓர் ஊரில் தங்கியிருந்தார். அங்கு ஒரு நீரோடையும், பாலமும் இருந்தன.
👳 ஒரு நாள் சுவாமி விவேகானந்தர், நீரோடைக் கரையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அங்கு சில இளைஞர்கள், முட்டையோடுகளைத் துப்பாக்கியால் குறிவைத்து சுடுவதற்குப் பயிற்சி செய்துகொண்டிருந்தார்கள்.
👳 அவர்கள், முட்டையோடுகளை ஒரு நூலில் கட்டி, நீரோடையில் மிதக்க விட்டிருந்தார்கள். அந்த நூல், நீரோடைக் கரையிலிருந்த சிறிய ஒரு கல்லில் கட்டப்பட்டிருந்தது. நீரோடை நீரின் அசைவுக்கு ஏற்ப, நூலில் கட்டப்பட்டிருந்த முட்டையோடுகள் இலேசாக அசைந்துகொண்டிருந்தன.
👳 இளைஞர்கள் பாலத்தில் நின்று, ஓடை நீரில் அசைந்துகொண்டிருக்கும் முட்டையோடுகளைச் சுடுவதற்கு முயற்சி செய்துகொண்டிருந்தார்கள். அவர்கள் துப்பாக்கியால் முட்டையோடுகளைச் சுட்டார்கள். ஆனால் அவர்கள் வைத்த குறி தவறித்தவறிப் போயிற்று. ஒரு முட்டையோட்டைக்கூட அவர்களால் சுட முடியவில்லை.
👳 இளைஞர்களின் இந்தச் செயலை விவேகானந்தர் பார்த்தார். இவர்களால் இந்த முட்டையோடுகளைச் சுடமுடியவில்லையே! என்று நினைத்தார். அதனால் அவர் முகத்தில் புன்னகை தவழ்ந்தது. இதை அங்கிருந்த இளைஞர்களில் ஒருவன் கவனித்தான்.
👳 அவன் விவேகானந்தரிடம், பார்ப்பதற்கு இந்த முட்டையோடுகளைச் சுடுவது சுலபமான செயல் போன்று தெரியும். ஆனால் நீங்கள் நினைப்பதுபோல், இந்த முட்டையோடுகளைச் சுடுவது அவ்வளவு சுலபமான செயல் அல்ல. நீங்களே முயற்சி செய்து பாருங்கள்! அப்போது உங்களுக்கே தெரியும்! என்று கூறினான்.
👳 சுவாமி விவேகானந்தர் துப்பாக்கியை கையில் எடுத்தார். அங்கிருந்த முட்டையோடுகளை குறி வைத்து சுட ஆரம்பித்தார். அப்போது அங்கு சுமார் பன்னிரெண்டு முட்டையோடுகள் நீரோடையில் மிதந்து கொண்டிருந்தன.
👳 விவேகானந்தர் வைத்த குறி ஒன்றுகூட தவறவில்லை. வரிசையாக அவர் ஒவ்வொரு முட்டையோடாக சுட்டார். அங்கிருந்த அத்தனை முட்டையோடுகளும் வெடித்து சிதறின. இதைப் பார்த்து அங்கிருந்த இளைஞர்கள் பெரிதும் வியப்படைந்தார்கள்.
👳 அவர்கள் விவேகானந்தரிடம், நீங்கள் துப்பாக்கி சுடுவதில் ஏற்கனவே நல்ல பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும். அதனால்தான் நீங்கள் அத்தனை முட்டையோடுகளையும் ஒரு குறிகூடத் தவறாமல் சுட்டீர்கள், இல்லையா? என்று கேட்டனர். அதற்கு விவேகானந்தர், என் வாழ்நாளில் இன்றுதான் நான் முதன்முறையாக துப்பாக்கியை தொடுகிறேன் என்றார். அவர் கூறியதை இளைஞர்களால் நம்ப முடியவில்லை.
👳 அவர்கள், அப்படியானால் ஒரு குறிகூடத் தவறாமல் உங்களால் எப்படி முட்டையோடுகளைச் சுட முடிந்தது? என்று கேட்டார்கள். அதற்கு விவேகானந்தர், எல்லாம் மனதை ஒருமுகப்படுத்துவதில்தான் இருக்கிறது. 'மனதை ஒருமுகப்படுத்தி செய்யும் எந்த செயலும் வெற்றியைத் தரும்' என்று பதிலளித்தார்.
👳 'எல்லா ஆற்றலும் உன்னில் உள்ளது. உங்களால் எதையும் மற்றும் எல்லாவற்றையும் செய்ய முடியும். அதை நம்புங்கள், நீங்கள் பலவீனமாக இருக்கிறீர்கள் என்று நம்பாதீர்கள்' என்று இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டினார் சுவாமி விவேகானந்தர்.
👳 அதேவேளையில், 'வெற்றிகளைச் சந்தித்தவன் இதயம், பூவைப்போல் மென்மையானது, தோல்விகளை மட்டுமே சந்தித்தவன் இதயம் இரும்பைவிட வலிமையானது' என்று சொல்லி அவர்களின் மனதை திடப்படுத்தினார்.
ஒரேயொரு வாய்ப்பு போதும் :
🌟 இன்னொரு சமயம், அமெரிக்காவில் நண்பர் ஒருவருடன் நடந்து சென்றுகொண்டிருந்தார் விவேகானந்தர். அங்கு வழியில் இருந்த கால்ஃப் விளையாட்டு மைதானத்தில் போட்டி நடைபெற்று கொண்டிருந்தது. ஒரு சிறிய குழியில் தூரத்திலிருந்து பந்தைச் சரியாக அந்தக் குழியில் விழவைக்க வேண்டும். அதுதான் போட்டியின் விதி. விவேகானந்தருக்கு போட்டியில் பங்குபெறும் வாய்ப்பு கிடைத்தது. 'ஒவ்வொருவருக்கும் நான்கு வாய்ப்புகள் கொடுக்கப்படும்' என்று சொல்லப்பட்டது. 'எனக்கு ஒரேயொரு வாய்ப்பு போதும்' என்றார் விவேகானந்தர்.
🌟 அருகிலிருந்த நண்பர், 'இது முடியாது' என்றார். ஆனால், விவேகானந்தர், ஒரு வாய்ப்பிலேயே பந்தைக் குழிக்குள் சரியாக செலுத்திவிட்டார். அவருக்குப் பரிசு கிடைத்தது. அவருடைய நண்பர், 'எப்படி இது உங்களால் முடிந்தது' எனக் கேட்டார். அதற்கு விவேகானந்தர் 'கிடைக்கும் வாய்ப்பை சவாலாக எடுத்துக்கொள்ள வேண்டும். திறமைகளை செயலில் காட்ட வேண்டும். பயன்பாடுகளை நினைத்துக்கொள்ள வேண்டும்' என்று பதிலளித்தார்.
🌟 எவருக்கும், வாய்ப்புகள் என்பது வாசற்கதவுகளை தட்டிக்கொண்டிருப்பதில்லை... ஆனால், வாய்ப்பு வரும் பட்சத்தில் அதனை அவர்கள் துணிவுடன் எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம் என்பதற்கு சுவாமி விவேகானந்தர் வாழ்வில் நடந்த சம்பவங்களே உதாரணம். பலவீனத்தோடு வாழ்ந்த இளைஞர்களிடம், 'பலமே வாழ்க்கை... பலவீனமே மரணம்' என்று நம்பிக்கை விதைகளை விதைத்தார், விவேகானந்தர்.
விவேகானந்தரை கவர்ந்த வண்டிக்காரர் :
👳 ஒருமுறை சுவாமி விவேகானந்தர், பாரீஸ் நகரத்திற்கு சென்று ஆன்மீக சொற்பொழிவுகள் மற்றும் தியான வகுப்புகள் நடத்தினார். ஓய்வு நேரங்களில் நகர்ப்புறத்தை சுற்றிப் பார்ப்பதுடன் பல்வேறு தரப்பு மக்களுடனும் பழகி, அவர்களது வாழ்க்கை முறைகள் பற்றி அறிந்து கொள்வதும் அவரது வழக்கம்.
👳 ஒருமுறை வாடகைக்கு எடுக்கப்பட்ட குதிரைகள் இழுக்கும் கோச் வண்டி ஒன்றில் பாரீஸ் நகரத்தை சுற்றி பார்க்கும் விதமாக தன் சீடருடன் சென்று கொண்டிருந்தார். கோச் வண்டியை ஓட்டிச் சென்ற வண்டிக்காரர், பாதி வழியில் வசதியான உடை அணிந்த இரண்டு குழந்தைகளையும், அவர்களை அழைத்து வந்த பெண்ணையும் பார்த்தார். அவர்கள் பணக்கார வீட்டுப்பிள்ளைகள் போல் இருந்தார்கள்.
👳 வண்டியை ஓர் ஓரமாக நிறுத்திய அவர், இறங்கி சென்று அந்த பிள்ளைகளை கட்டிக்கொண்டு தட்டிக் கொடுத்தார். அவர்களுடன் சிறிது நேரம் பேசிவிட்டு திரும்பி மீண்டும் வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றார். அவற்றை கவனித்துக்கொண்டிருந்த விவேகானந்தரின் சீடர் 'அவர்கள் யார்?' என்று வண்டிக்காரரிடம் கேட்டார்.
👳 அந்த பிள்ளைகள் தன்னுடைய மகன் மற்றும் மகள் என்றும், அழைத்து வந்தது தனது மனைவி என்றும் வண்டிக்காரர் தெரிவித்தார். 'அவர்களை பார்த்தால் பெரிய பணக்கார வீட்டுப்பிள்ளைகள் போல் இருக்கிறதே. நீங்கள் ஒரு சாதாரண கோச் வண்டியை தானே ஓட்டிக்கொண்டிருக்கிறீர்கள்?' என்று சீடர் வியப்புடன் கேட்டார்.
👳 அவரை கோச் வண்டி ஓட்டுபவர் திரும்பி கூர்ந்து கவனித்துவிட்டு, பாரீஸில் பிரபலமாக இருந்த ஒரு வங்கியின் பெயரை குறிப்பிட்டு 'அந்த வங்கி பற்றி ஏதாவது உங்களுக்கு தெரியுமா?' என்று கேட்டார். 'ஆமாம். நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அது பெரிய வங்கியாக இருந்தது. எனக்கும் கூட அதில் ஒரு கணக்கு இருந்தது. ஆனால், இப்போது அந்த வங்கி திவாலாகிவிட்டது போல் தெரிகிறதே?' என்றார் சீடர்.
👳 அதை கேட்டுவிட்டு வண்டியோட்டுபவர் அமைதியாக, 'நான்தான் அந்த வங்கிக்கு சொந்தக்காரன். அந்த வங்கி இப்போது கொஞ்சம் சிரமமான நிலையில் இருக்கிறது. அதன் பங்குகளை எல்லாம் வசூல் செய்து கடன்களை அடைக்க சிறிது காலம் ஆகலாம். அந்த நிலையில் மற்றவர்களுக்கு நான் எந்த விதத்திலும் சுமையாக இருக்க விரும்பவில்லை. அதனால், இந்த கிராமத்தில் உள்ள ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்தேன். என்னிடம் இருந்த சொத்துக்கள் எல்லாவற்றையும் விற்று விட்டு, ஓரளவு பிரச்சனைகளை சமாளித்தேன். தற்போது இந்த கோச் வண்டியை வாடகைக்கு ஓட்டுவதன் மூலம் குடும்ப செலவுகளை சமாளித்து கொண்டிருக்கிறேன்' என்ற வண்டிக்காரர் மேலும் தொடர்ந்தார்.
👳 'என் மனைவியும் அவளால் இயன்ற அளவு கொஞ்சம் சம்பாதிக்கிறாள். எங்களது இருவரது வருமானத்தில் குழந்தைகளுக்கு ஆகும் செலவுகளை சரி செய்து கொண்டிருக்கிறோம். கடன்களை முற்றிலும் அடைத்தவுடன், மீண்டும் வங்கியை திறந்துவிடுவேன்' என்றார் வண்டிக்காரர்.
👳 இதை அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த விவேகானந்தர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். 'ஆகா..! இந்த மனிதர் அல்லவா உண்மையான வேதாந்தி! அன்றாட வாழ்வில் வேதாந்த கருத்தை நடைமுறைப்படுத்தி வரும் இவரது தன்னம்பிக்கை நிச்சயம் போற்றுதலுக்கு உரியது. பெரிய அந்தஸ்தில் இருந்து விழுந்தும்கூட, அவர் சூழ்நிலை கைதியாக மாறிவிடவில்லை' என்று வாழ்த்தியதுடன் அவரது வீட்டுக்கும் சென்று அவரை பெருமைப்படுத்தினார்.
சுவாமி விவேகானந்தரின் மன உறுதி :
👳 ஒருசமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகருக்கு சென்றிருந்தார். அங்கு அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப்பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன.
👳 ஒருநாள் மாலை, பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. அதன் மூர்க்கத்தனமான ஓட்டத்தை பார்த்து பயந்து போன நண்பரின் மனைவி, அப்படியே மயங்கி விழுந்துவிட்டார்.
👳 அதைக் கண்டதும் விவேகானந்தரும், அவரது நண்பரும் பயந்துவிட்டனர். மனைவியை தூக்க நண்பர் முயன்றார். அப்போது மாடு அவர்களை நெருங்கிவிட்டது. நண்பருக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. இன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு இரையாக நேரிடும் என்பதை உணர்ந்த நண்பர், தன் உயிரை காப்பாற்றிக்கொள்ள எழுந்து வேறு திசையில் ஓடினார். ஆனால், விவேகானந்தர் அப்படி இப்படி அசையாமல் ஆணி அடித்தது போல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார்.
👳 பாய்ந்து வந்த மாடு, கீழே விழுந்து கிடந்த நண்பரின் மனைவியையும், விவேகானந்தரையும் விட்டு விட்டு, ஓடிக் கொண்டிருந்த நண்பரை துரத்தியது. அதைக் கண்ட நண்பர், உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடினார். மாடும் விடாமல் அவரைத் துரத்தியது. அதிர்ஷ்டவசமாக ஒரு கட்டிடத்திற்குள் புகுந்து தப்பினார் நண்பர். அதன் பிறகே பண்ணை ஊழியர்கள் ஓடிவந்து மாட்டை பிடித்து கட்டிப்போட்டனர். விவேகானந்தர் அதன் பிறகே அந்த இடத்தை விட்டு அசைந்தார்.
👳 அங்கு வந்த நண்பருக்கோ ஒரே ஆச்சரியம். அப்போது நண்பரின் மனைவியும் மயக்கம் தெளிந்து எழுந்தார். 'சிறிது கூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும் ஒரே இடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது?' என்று கேட்டார் நண்பர்.
👳 அதைக் கேட்டு மெல்ல புன்னகைத்த விவேகானந்தர், 'நான் வித்தியாசமாக எதையும் செய்து விடவில்லை. வருவது வரட்டும்; சமாளிப்போம் என்ற ஒருவித மனஉறுதியுடன் நின்றுவிட்டேன். ஓடுபவரை கண்டால் துரத்தி செல்வது மிருகங்களுக்கு உரிய குணம். அதனால்தான் மாடு என்னை விட்டு விட்டு, ஓடிக் கொண்டிருக்கும் உங்களைத் துரத்தியது' என்று முடித்தார்.
👳 உயிருக்கு ஆபத்தான நேரத்தில் கூட, அதைக்கண்டு பயந்து ஓடாமல், வருவது வரட்டும் என்ற மனஉறுதி பெற்றிருந்த சுவாமி விவேகானந்தரை பார்த்து பெரிதும் வியந்தார் நண்பர்.
சுவாமி விவேகானந்தர் கற்ற பாடம் :
👳 எவ்வளவு பெரிய ஞானியாக இருந்தாலும், அறிவாளியாக இருந்தாலும் அவர்கள் வாழ்வின் முக்கியமான பாடங்களை மிக எளிமையானவர்களிடம் இருந்தே கற்றிருப்பார்கள்.
👳 அப்படிதான் சுவாமி விவேகானந்தரும், தன் வாழ்வின் முக்கிய பாடத்தை ஒரு விலைமாதுவிடம் இருந்து கற்றார். அந்த பாடம் என்ன? எப்படியான சூழலில் சுவாமி விவேகானந்தர் அந்த பாடத்தை விலைமாதுவிடம் இருந்து கற்றார் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்...
👳 சுவாமி விவேகானந்தர் ஒரு சிறந்த சந்நியாசி. இவர் உலகுக்கு காதல், அன்பு, அமைதி மற்றும் புரிதல் குறித்து எடுத்துரைத்துள்ளார். ஆனால், சுவாமி விவேகானந்தருக்கே காதல் மற்றும் இணைப்பு குறித்து ஒரு விலைமாது பாடம் எடுத்துள்ளார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
👳 சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா செல்வதற்கு முன்னர் சிறிது காலம் ஜெய்ப்பூரில் தங்கியிருந்தார். அப்போது ஜெய்ப்பூர் மகாராஜா ஒரு பெரும் நடன விழாவை ஏற்பாடு செய்திருந்தார். அந்த விழாவில் பங்குக்கொள்ளுமாறு சுவாமி விவேகானந்தருக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.
👳 தான் ஏற்பாடு செய்திருந்த அந்த நடன விழாவில் கலந்துக்கொள்ள பலதரப்பட்ட மக்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார் ஜெய்ப்பூர் அரசர். சுவாமி விவேகானந்தர் பங்கெடுத்துக் கொள்ளவிருந்த அதே விழாவில் ஒரு பிரபலமான விலைமாதுவும் பங்குபெறவிருந்தார்.
👳 விழா துவங்கிய சிறிது நேரத்திலேயே தனது தவறை உணர்ந்தார் ஜெய்ப்பூர் அரசர். ஒரு சந்நியாசி பங்கு பெற்றுள்ள இந்த விழாவில் விலைமாது பங்குபெறுவது சரியானதாக இருக்காது என்பதை அறிந்தார். ஆனால், அரசர் சற்று தாமதமாகவே இதை அறிந்தார். அவர் ஏற்கனவே விலைமாதுவை அழைத்துவிட்டார். மேலும், விலைமாது அங்கு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டிருந்தது.
👳 அப்போது சுவாமி விவேகானந்தர் மிகவும் இளம் வயது சந்நியாசியாக இருந்தார். தான் பங்குபெற்றுள்ள நடன விழாவில் விலைமாது பங்குபெற்றுள்ள செய்தி அறிந்து மன குழப்பத்திற்கு ஆளானார் விவேகானந்தர். முழுமையான சந்நியாச நிலை அடைந்திருந்தால், இது பெரும் மாற்றத்தை உணர செய்திருக்காது.
👳 சுவாமி விவேகானந்தர் தனது ஆசைகளை அடக்கிக்கொள்ள வேண்டும் என்பதற்காக, அந்த விழா நடந்து வந்த இடத்தில், ஒரு அறையில் தன்னைத் தானே பூட்டிக் கொண்டார். மேலும், அந்த அறையில் இருந்து வெளிவர மறுத்துவிட்டார். பலரும் அழைத்தும், சுவாமி விவேகானந்தர் அந்த பூட்டிய அறையில் இருந்து வெளிவரவே இல்லை.
👳 ஜெய்ப்பூர் அரசர் சுவாமி விவேகானந்தர் பூட்டிக் கொண்ட அறையின் அருகே வந்து அவரிடம் மன்னிப்புக் கோரினார். ஓர் சந்நியாசி பங்குபெறும் விழாவில் எத்தகைய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பதை நான் அறியேன் என்றும், நீங்கள் வந்து அழைக்கப்பட்ட நடன கலைஞர்களை சந்திக்க வேண்டும் என்றும் கோரினார்.
👳 சுவாமி விவேகானந்தரின் பதட்டம் அவரது முகத்திலேயே தெரிந்தது. சுவாமி விவேகானந்தர் பூட்டிய அறையைவிட்டு வெளியே வரவே இல்லை.
👳 அந்நேரம் விழாவில் இருந்த விலைமாது ஒரு பாடலை பாடத் துவங்கினார். அந்த பாடலின் பொருளானது, உன்னை போலவே நானும், நானாக சாதாரணமாக தான் இருக்கிறேன். நீ உன் மனதின் எண்ணங்களை கொண்டு அச்சம் கொள்ள தேவையில்லை என்பதாக இருந்தது. சுவாமி விவேகானந்தரின் அச்சத்திற்கு காரணம் அந்த விலைமாது அல்ல, அவரது மனதில் ஏற்பட்ட குழப்ப எண்ணங்களே ஆகும்.
👳 விலைமாதுவின் பாடல் வரிகளின் அர்த்தம் புரிந்து சுவாமி விவேகானந்தர் தான் பூட்டிய அறைகளின் கதவுகளை தானே திறந்து வெளியே வந்தார். மேலும், அந்த விலைமாதுவை நேரில் கண்டு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார். மேலும், அந்த விலைமாதுவிடம் தூய்மையான மனது இருக்கிறது. அவர் அலட்சியத்தின் உண்மை பொருள் என்ன என்பதை தனக்கு தெளிவாக புரியவைத்துவிட்டார் என்றும் சுவாமி விவேகானந்தர் கூறினார்.
👳 விலைமாதுவுடனான இந்த சந்திப்புக்கு பிறகு சுவாமி விவேகானந்தர் மிகவும் தைரியமாகவும், அச்சம் இன்றியும் மாறினார். நம் அனைவருக்குள்ளும் இதுபோன்ற ஆசைகளும், அந்த ஆசைகள் சார்ந்த அச்சங்களும் இருக்கும். முதலில் அந்த ஆசைகளை பூட்டி வைக்காமல் திறந்துவிட வேண்டும். பிறகு, நமது மனதை திறந்தபடியாக வைத்திருக்க வேண்டும். இது தேவையற்ற ஆசைகளை நம்மைவிட்டு வெளியேறவும், தேவையான வாய்ப்புகளை தவறவிடாமல் இருக்கவும் உதவும். ஒரு வாய்ப்பு அல்லது சூழலை எதிர்கொள்ளாமல், அதில் வெற்றிப்பெற யார் நமக்கு சிறந்த வகையில் உதவுவார்கள் என நம்மால் அறியமுடியாது.
பிரம்மச்சரியத்தின் சிறப்பு :
👳 ஒருமுறை சுவாமி விவேகானந்தர் இருக்கும் மடத்திற்கு வந்த ஒரு சீடர் அங்கே இருந்த களஞ்சியப் புத்தகங்களின் தொகுதியை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார். அவர் விவேகானந்தரிடம் வியப்புடன் கூறினார்...
👳 'இந்த புத்தகங்கள் எல்லாவற்றையும் ஒரு பிறவியில் படித்து முடிப்பது இயலாத காரியம்' என்றார். சுவாமி விவேகானந்தரோ அந்த புத்தகங்களில் பத்துப் பகுதிகளை முடித்துவிட்டுப் பதினோராம் பகுதியைப் படித்துக் கொண்டிருக்கிறார் என்பது சீடருக்கு தெரியாது.
👳 சுவாமி விவேகானந்தரோ அந்த சீடரிடம் 'என்ன சொல்கிறாய் நீ? முதல் பத்துப் பகுதிகளில் என்ன கேள்வி வேண்டுமானாலும் கேள். நான் பதில் சொல்கிறேன்?' என்றார்.
👳 சீடரோ திகைப்புடன் 'என்ன, இந்த நூல்களை எல்லாம் படித்து விட்டீர்களா?' என்றார்.
👳 விவேகானந்தரோ 'படிக்காமல் கேள்வி கேட்கச் சொல்வேனா? என்றார்.
👳 சீடர், சுவாமி விவேகானந்தர் சொல்வதால் அவரிடம் புத்தகத்தில் முதல் பத்துப் பகுதிகளிலிருந்து வௌ;வேறு விதமாக பல கேள்விகளை வெவ்வேறு பக்கங்களிலிருந்தும் கேட்டார்.
👳 விவேகானந்தர் அசராமல் அனைத்திற்கும் பதிலும், விளக்கமும், சில இடங்களில் அந்த புத்தகத்தின் மொழியிலேயே அவற்றை எடுத்துக்கூறி அசர வைத்தார்.
👳 சீடர் புத்தகத்தை வைத்துவிட்டு 'இது மனித ஆற்றலால் முடியாத காரியம்!' என்றார்.
👳 ஆனால், விவேகானந்தர் 'ஏன் முடியாது. இதோ பார், பிரம்மச்சரியத்தை ஒழுங்காக கடைப்பிடிப்பது ஒன்றால் மட்டுமே எல்லா கலைகளும் கணநேரத்தில் கைவசப்படும்.' என்றார்.
விவேகானந்தரை சோதித்த இளைஞர்கள்!!
👳 ஒருமுறை அமெரிக்காவில் சுவாமி விவேகானந்தர், இறைவனை அனுபூதியில் உணர்ந்த நிலை என்பது பற்றி சொற்பொழிவு ஆற்றினார். அந்த சொற்பொழிவில், இறைவனை பற்றிய உயர்ந்த அனுபவத்தை நேரடியாகப் பெற்ற ஒருவர், எந்த சூழ்நிலையிலும் கலங்குவதில்லை - பதற்றப்படுவதில்லை என்று குறிப்பிட்டார்.
👳 இந்த சொற்பொழிவை கேட்டு கொண்டிருந்தவர்களில் இளைஞர்கள் சிலரும் இருந்தார்கள். இவர்கள் உயர்கல்வி கற்றவர்கள். ஆனால், அந்த இளைஞர்கள் மனம் போனபடி வாழ்ந்தனர். அவர்கள், விவேகானந்தர் கூறியதை பரிசோதித்து பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.
👳 எனவே, அவர்கள் விவேகானந்தரை ஒரு சொற்பொழிவுக்காக அழைத்தனர். அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க விவேகானந்தர், சொற்பொழிவு செய்ய வேண்டிய இடத்திற்கு சென்றார்.
👳 ஆரம்பத்திலிருந்தே அந்த இளைஞர்கள், விவேகானந்தரை சோதிப்பது போலவே நடந்துகொண்டார்கள். ஒரு மரத்தொட்டியை கவிழ்த்து போட்டு, இதுதான் சொற்பொழிவு மேடை. இதில் நின்றுதான் நீங்கள் பேச வேண்டும் என்று கூறினார்கள்.
👳 விவேகானந்தர் எந்த மறுப்பும் கூறாமல் அவர்கள் கூறியதை ஏற்றுக்கொண்டு சொற்பொழிவு செய்ய ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் அவர் சொல்லிக்கொண்டிருந்த கருத்தில் மனம் ஒன்றிய நிலையில், சூழ்நிலையை மறந்து பேசினார்.
73; திடீரென்று அவரை சுற்றிலும் துப்பாக்கிக் குண்டுகள் வெடித்தன! காதைப் பிளக்கும் துப்பாக்கிக் குண்டுகளின் ஓசை அங்கு பலமாக எழுந்தது! சில குண்டுகள் விவேகானந்தரின் காதின் அருகிலும் பாய்ந்து சென்றன! ஆதலால் சுற்றிலும் பதற்றமும் கூக்குரலும் எழுந்தன.
👳 ஆனால் இவ்விதம் சூழ்நிலை மாறியது காரணமாக, விவேகானந்தரிடம் எந்தச் சலனமும் இல்லை. அவர் சூழ்நிலையால் ஒரு சிறிதும் பாதிக்கப்படவில்லை. அவர் தொடர்ந்து சொற்பொழிவு செய்துகொண்டிருந்தார். இப்போது, விவேகானந்தரைச் சோதித்துப் பார்க்க வேண்டும்! என்று நினைத்த இளைஞர்கள் தோற்றார்கள்.
👳 எதுவுமே அங்கு நடக்காததுபோல், விவேகானந்தர் உரிய நேரத்தில் தன் சொற்பொழிவை முடித்தார்.அந்த இளைஞர்கள் விவேகானந்தரிடம், உண்மைதான் சுவாமிஜி, நீங்கள் அப்பழுக்கற்றவர்.
👳நீங்கள் மற்றவர்களுக்கு என்ன போதிக்கிறீர்களோ, அப்படியே வாழ்கிறீர்கள் என்று கூறி, அழாத குறையாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்கள்.
