அண்ணா ஹசாரே - 1
அண்ணா ஹசாரே ஒரு சமூக ஆர்வலர் ஆவார். ஊழலுக்கு எதிரான ஒர் அமைப்பான “ஜன லோக்பால்” என்ற மசோதா முன்வரைவை முன்வைத்து, ஹசாரே பெரும் போராட்டத்தை நடத்திக்காட்டி அனைவராலும் “இரண்டாம் காந்தி” என்று அழைக்கப்பட்டார். மகாராஷ்டிரா மாநிலம் அஹமது நகர் மாவட்டம் பர்தேர் தாலுக்காவில் உள்ள ஒரு கிராமத்தின் வளர்ச்சி மற்றும் கட்டமைப்பிற்கு அவருடைய சிறப்பான பங்களிப்பைப் பாராட்டி, நாட்டின் உயரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கப்பட்டது. ராணுவ அதிகாரியாக பணியாற்றிய பிறகு மக்களுக்கு சேவைசெய்வதையே தன்னுடைய வாழ்நாள் நோக்கமாக கொண்டு செயல்பட்ட அண்ணா ஹசாரேவின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.
கிசான் பாபுராவ் ஹசாரே எனப்பட்ட அண்ணா ஹசாரே அவர்கள், 1937 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் நாள் இந்தியாவின் மகாராட்டிரம் மாநிலத்திலுள்ள பிங்கார் என்ற இடத்தில் பாபுராவ் ஹசாரேக்கும், லட்சுமிபாய் ஹசாரேக்கும் மூத்தமகனாக பிறந்தார். இவருக்கு நான்கு சகோதரர்களும் மற்றும் இரண்டு சகோதரிகளும் உள்ளனர்.
அண்ணா ஹசாரேவின் தந்தை ஒரு மருந்தகத்தில் வேலைபார்த்து வந்தார், ஆனால், அவருடைய வருமானம் போதாத காரணத்தால் அவர்களுடைய மூதாதையர் வாழ்ந்த கிராமமான “ரலேகன் சித்தி” என்ற இடத்திர்கு அவருடைய குடும்பம் இடம் பெயர்ந்தது. உறவினரின் உதவியால் ஏழாம் வகுப்புவரை படித்த அண்ணா ஹசாரே அவர்கள், நிதி பற்றாக்குறையால் தன்னுடைய பள்ளிப்படிப்பை ஏழாம் வகுப்போடு முடித்துக்கொண்டு, மும்பை ரயில் நிலையத்தில் பூ விற்க ஆரம்பித்தார். பிறகு தனியாக பூக்கடை ஒன்றினையும் தொடங்கினார்.
1962 ஆம் ஆண்டு நடந்த இந்திய சீனப் போர், இந்திய இராணுவத்தில் அவசர ஆட்சேர்ப்பு நடவடிக்கைக்கு வழிவகுத்தது. ஹசாரே போதிய உடல்தகுதி இல்லாதவராக இருந்த போதிலும், 1963 ஆம் ஆண்டு இராணுவத்தில் சேர்க்கப்பட்டு, பயிற்சி மேற்கொண்ட பிறகு ஒரு சிப்பாயாக தன்னுடைய பணியைத் தொடங்கினார். 1965 ஆம் ஆண்டு நடந்த இந்திய பாகிஸ்தான் போரில் “கேம் கரன்” துறையில் எல்லைப்பணிக்காக அனுப்பப்பட்டார் அங்கு நடந்த போர்கல அனுபவம் அவரை மிகவும் பாதித்தது என கூறியுள்ளார். அவர் தன்னுடைய ஓய்வு நேரங்களை சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி மற்றும் வினோபா பாவே போன்றவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி படிப்பதில் செலவிட்டார். பிறகு 1975 ஆம் ஆண்டு இராணுவத்திலிருந்து விருப்ப ஓய்வினை பெற்றுக்கொண்டு, தனது சொந்த ஊரான “ரலேகன் சித்தி” கிராமத்திற்கு வந்தார். 13 வருடங்கள் இராணுவத்தில் பணிபுரிந்த அவர் சிக்கிம், பூட்டான், ஜம்மு & காஷ்மீர், அசாம், மிசோரம், மற்றும் லடாக் போன்ற பல்வேறு மாநிலங்களில் பணியாற்றியுள்ளார்.
அண்ணா ஹசாரே அவர்கள், இராணுவ பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, தன்னை மக்கள் சேவைக்கு அற்பணிக்க விரும்பினார். கடுமையான வறுமை, தண்ணீர் பற்றாக்குறை, சுகாதாரமற்ற சுற்றுசூழல் மற்றும் ஒரு நம்பிக்கை இழந்த கிராமமாக இருந்த “ரலேகன் சித்தி” கிராமத்திற்கு சமுதாய மற்றும் பொருளாதார மாற்றங்களை கொண்டுவர வேண்டுமென தீர்மானித்தார். இராணுவப் பணியில் தான் சம்பாதித்த பணத்தைக்கொண்டு, அழியும் நிலையிலிருந்த கோவிலை மீட்டு சீர்படுத்தினார். அதிக அளவில் இளைஞர்கள் தங்களை இந்த பணியில் ஈடுபடுத்திகொண்டதால் “தருண் மண்டல்” என்ற இளைஞர்கள் இயக்கத்தை தொடங்கினார். இதன் மூலம் கிராமத்தில் மதுக்கடைகளை மூடியது மட்டுமல்லாமல், மதுகுடிப்பவர்களுக்கு தண்டனையும் கொடுக்கப்பட்டது. கிராமத்தில் பீடி, புகையிலை மற்றும் சிகரெட் போன்றவை விற்கத் தடைவிதிக்கப்பட்டது.
