அண்ணா ஹசாரே - 2
1980 ஆம் ஆண்டு “தானிய வங்கி” என்ற ஒன்றை தொடங்கி, குறைந்த விலையில் தானியம் வழங்கப்பட்டு பசி மற்றும் கடன் தொல்லைக்கு முற்றுபுள்ளி வைத்தார். பிறகு “ஆற்று பள்ளதாக்கு வளர்ச்சித் திட்டத்தை” உருவாக்கி நிலத்தடி நீர் சேமிப்பின் மூலம் பாசனத்தை மேம்படுத்தவும் செய்தார். இந்த திட்டத்தின் மூலம், தண்ணீர் பற்றாக்குறை பெருமளவு தீர்க்கப்பட்டது எனவும் கூறலாம். அவர் அந்த கிராமத்திற்கு வரும்பொழுது 70 ஏக்கர் நிலத்தில் மட்டுமே பாசனம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், இந்த வளர்ச்சித் திட்டத்திற்கு பிறகு 1500 ஏக்கராக மாறியது. கால்நடை வளர்ச்சியை ஊக்குவித்து, பால் உற்பத்தியை பெருக்கவும் வழிவகை செய்தார். கிராமத்தில் கல்வியின் தரத்தை மேம்படுத்த 1976 ஆம் ஆண்டு ஒரு மாதிரிபள்ளியும், 1979ல் ஒர் உயர்நிலைப் பள்ளியும் தொடங்கப்பட்டது. ரலேகன் சித்தி கிராமத்தில் நிலவிய சமூக தடைகள் மற்றும் பாகுபாடுகள் அறவே ஒழிக்கப்பட்டது. “கூட்டு திருமண திட்டத்தின்” மூலம் ஏழை எளிய மக்களின் கடன் சுமை பெருமளவு குறைக்கப்பட்டது. தொடக்கத்தில் ஒரு புறக்கணிக்கப்பட்ட மற்றும் நம்பிக்கையிழந்த இந்திய கிராமங்களில் ஒன்றாக இருந்த “ரலேகன் சித்தி” கிராமம், இந்தியாவில் பல கிராமங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக மாறியது எனலாம். இந்த கிராமத்தின் வளர்ச்சி மற்றும் கட்டமைப்பிற்கு அவருடைய சிறப்பான பங்களிப்பை பாராட்டி நாட்டின் உயரிய விருதான “பத்ம பூஷன்” விருதை இந்திய அரசு அவருக்கு வழங்கி கெளரவித்தது.
ஊழலுக்கு எதிராக போராட ஒரு வெகுஜன இயக்கமான “பிராஷ்டாசார் விரோதி ஜன் ஆண்டோலன்” என்ற மக்களமைப்பை 1991 ஆம் ஆண்டு, அண்ணா ஹசாரே “ரலேகன் சித்தி” கிராமத்தில் தொடங்கினார். இந்த இயக்கத்தின் மூலம் 40 வனத்துறை அதிகாரிகள் மற்றும் மர வியாபாரிகளின் கூட்டு சதிக்கு எதிர்ப்பு தெரிவிப்பது மட்டுமல்லாமல், தற்கால பணிநீக்கம் மற்றும் இடமாற்றத்திற்கு வழிவகுத்தது. 2003 ல் தேசியவாத காங்கிரசு அமைப்பின் நான்கு அமைச்சர்கள் மீது ஊழல் குற்றசாட்டை எழுப்பி, 2003 ஆகஸ்ட் 9 ஆம் தேதி சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கினார். பிறகு, சுஷில் குமார் தோஷி அவரின் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க, தனிநபர் ஆணை குழு ஒன்றை நியமித்ததால், 2003 ஆகஸ்ட் 17 ஆம் தேதி உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். இந்திய நாடாளுமன்றத்தால் அரசிடம் மற்றும் அரசு உதவிப்பெறும் நிறுவனங்களிடமிருந்து மக்கள் உரிமையுடன் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக உருவாக்கப்பட்ட “தகவல் பெரும் உரிமைச் சட்டம்” 2005 ஆம் ஆண்டு நீக்கப்பட்டதால், இதற்கு எதிராக 2006 ஆகஸ்ட் 9ஆம் தேதி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். பிறகு, அரசு தன்னுடைய முடிவை மாற்றி கொண்டதால், 2006 ஆகஸ்ட் 19 ஆம் தேதி உண்ணாவிரதத்தைக் கைவிட்டார். இடமாற்றங்கள் ஒழுங்குமுறை மற்றும் உத்தியோகப்பூர்வ பணியில் தாமதம் போன்றவற்றிற்காக அண்ணா ஹசாரே கடுமையாகப் போராடினார். உணவு தானியங்களிலிருந்து, மது தயாரிக்க ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் கொள்கையை எதிர்த்தும் போராடினார்.
2011 ஆம் ஆண்டு ஊழலுக்கு எதிரான ஒரு வலுவான “ஜன் லோக்பால் மசோதாவை” (இந்தியாவில் ஊழல் மற்றும் பொதுமக்கள் பணம் கையாடல் முதலிய தவறிழைக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் மக்களால் நேரடியாக தண்டிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படை சித்தாந்தத்தில் உருவாக்கப்பட்ட ஒரு மசோதா ஆகும்) இந்தியப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என ஒரு சத்தியாகிரக இயக்கத்தைத் தொடங்கினார். உச்சநீதிமன்ற நீதிபதி என்.சந்தோஷ் ஹெக்டே, வழக்கறிஞர் பிராஷாந்த் பூஷன், அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் “ஊழலுக்கெதிரான இந்தியா” என்ற இயக்கத்தின் உறுப்பினர்கள் சேர்ந்து இந்த “ஜன் லோக்பால் மசோதாவை” வரையறுத்தனர். சுதந்திரமான இந்த மசோதாவை, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் நிராகரித்ததால், ஹசாரே தன்னுடைய காலவரையற்ற உண்ணாவிரதத்தை 2011 ஏப்ரல் 5 ஆம் தேதி புது தில்லியிலுள்ள ஜந்தர் மந்தர் என்ற இடத்தில் தொடங்கினார்.
இந்த ஊழலுக்கு எதிரான அண்ணா ஹசாரேவின் போராட்டம் நாடுமுழுவதும் லட்சகணக்கான மக்களை அணிவகுக்கச் செய்தது. மேதா பட்கர், சமூக ஆர்வலர் அர்விந்த் கேஜ்ரிவால், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி கிரண் பேடி, ஜெயபிரகாஷ் நாராயண் மற்றும் பல சமூக ஆர்வலர்கள் தங்களுடைய ஆதரவைக் கொடுத்தனர். சென்னை, மும்பை, அகமதாபாத், ஷில்லாங் போன்ற பலநகரங்களில் எதிர்ப்புகள் பெருகியதால், 2011 ஏப்ரல் 8 ஆம் தேதி அரசாங்கம் இவ்வியக்கத்தின் கோரிக்கைகளை ஏற்றது மட்டுமல்லாமல், ஒரு கூட்டுக்குழு அமைக்கவும், அந்த கூட்டுக்குழுவில் இந்திய அரசால் தேர்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் மற்றும் ஐந்து மக்கள் சமூக பிரதநிதிகள் இடம் பெறுவார் என அறிவிக்கப்பட்டது. இதனால், 2001 ஏப்ரல் 9 ஆம் தேதி அண்ணா ஹசாரே தன்னுடைய உண்ணாவிரதத்தை முடித்துகொண்டார். இந்த கூட்டுக்குழு அமைப்பில் இந்திய அரசு வேட்பாளராக பிரணாப்முகர்ஜி, ப.சிதம்பரம், சல்மான் குர்ஷித் ஆகியோரும் அரசியல் அல்லாத சமூக பிரதநிதிகளாக அண்ணா ஹசாரே, என்.சந்தோஷ் ஹெக்டே, மூத்த வழக்கறிஞர் சாந்தி பூஷன், பிரஷாந்த் பூஷன் மற்றும் அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோரும் இடம் பெற்றனர்.
உண்ணாவிரதத்தை முடித்துகொண்ட அவர், 2011 ஆகஸ்ட் 15 ஆம் தேதியை மசோதா அமைக்க கெடுவாக விதித்தார். கருப்புப்பணத்திற்கு எதிராகவும், ஊழலுக்கெதிராகவும் அரசாங்கத்தின் தீவிரத்தை எதிர்த்தும், 2011 ஜூன் 5 ஆம் தேதி சமூக பிரதிநிதிகள் உண்ணாவிரதத்தில் இருந்த பொழுது, சுவாமி ராம்தேவ் அவர்களைக் கட்டாயமாக வெளியேற்றப்பட்டதைக் கண்டித்துப் போராட்டம் நடத்தியது மட்டுமல்லாமல், லோக்பால் மசோதா நிறைவேற்ற படவில்லையென்றால், 2011 ஆகஸ்ட் 16 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கப்போவதாக அறிவித்து பிரதமருக்கு கடிதமும் எழுதினார். 2011 ஆகஸ்ட் 16 ஆம் தேதி உண்ணாவிரதம் தொடங்க இருந்த அவரை, இந்திய அரசு சட்டம் ஒழுங்கு நிலைமையை காரணம் காட்டி கைதுசெய்தது. ஆனால், சிறையில் தன்னுடைய உண்ணாவிரதத்தைத் தொடங்கிய ஹசாரேவிற்கு நாடுமுழுவதும் மக்களிடமிருந்து ஆதரவு பெருகியது. 2011 ஆகஸ்ட் 20 ஆம் தேதி விடுதலைசெய்யப்பட்டு ராம் லீலா மைதானத்திற்கு வந்த அவர், வலுவான “ஜன் லோக்பால் மசோதா” நிறைவேற தனது கடைசி மூட்சிவரை போராடப் போவதாகவும் அறிவித்து, தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். 2011 ஆகஸ்ட் 28 ஆம் தேதி “லோக்பால் மசோதா” ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.
ஊழலுக்கெதிரான தன்னுடைய உண்ணாவிரதப் போராட்டத்தின் மூலம், நாடு முழுவதிலும் கோடிக்கணக்கான மக்களை தன் பின்னால் அணிவகுக்கச் செய்த காந்தியவாதியான அண்ணா ஹசாரேவிற்கு இந்தப் போராட்டம் வெற்றியைத் தந்தாலும் பல சர்ச்சைகளும், விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் அவர் மேல் விழத்தான் செய்தது. இருந்தாலும், அவருடைய போராட்டங்கள் இந்திய வரலாற்றில் மற்றுமொரு சுதந்திர போராட்டத்தை வலியுறுத்தியது எனவும் கூறலாம்.
