அடல் பிஹாரி வாஜ்பாய் - 1
அடல் பிகாரி வாச்பாய் 1996 ம் ஆண்டு சில காலமும், 1998ல் இருந்து 2004 வரையிலும் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தவர். இவர் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். மத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியரில் பிறந்த இவர் திருமணம் செய்து கொள்ளாதவர். 50 வருட பாராளுமன்ற உறுப்பினரான இவர் மக்களவைக்கு 9 முறையும் மாநிலங்களவைக்கு 2 முறையும் தேர்ந்தேடுக்கப்பட்டிருக்கிறார். 4 முறை வெவ்வேறு மாநிலங்களில் ( உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், டெல்லி ) இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே உறுப்பினர் இவர் ஆவார். மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் இவர் பணியாற்றி உள்ளார்.இவரது முழுமையான வாழ்வைப் பற்றி மேலும் அறிந்து கொள்வோம் வாருங்கள்.
பிரிட்டிஷ் இந்தியாவின் கீழ் வரும் குவாலியர் (இப்போது மத்திய பிரதேசத்தில் உள்ளது) என்னும் இடத்தில், கிருஷ்ணா பிஹாரி வாஜ்பாய் மற்றும் கிருஷ்ணா தேவி தம்பதியருக்கு மகனாக ஒரு நடுத்தர வர்க்க பிராமண குடும்பத்தில், டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி, 1924 ஆம் ஆண்டில் பிறந்தார். அவரது தந்தை ஒரு கவிஞர் மற்றும் பள்ளி ஆசிரியர் ஆவார்.
குவாலியரில் இருக்கும் கோர்கியில் உள்ள சரஸ்வதி ஷிஷு மந்திரில் தனது பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக முடித்த பின்னர், குவாலியர் விக்டோரியா கல்லூரியில் (இப்போதைய லக்ஷ்மி பாய் கல்லூரி) சேர்ந்தார். ஆரம்பத்தில் இருந்து படிப்பில் மிகுந்த ஆர்வமுடையவராக இருந்த அவர், தனது கல்லூரியில் ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதத்தில் அதிகமதிப்பெண்கள் வித்தியாசத்தில் தேர்ச்சிப் பெற்று, இளங்கலைப் பட்டம் வென்றார். பிறகு, கான்பூரில் உள்ள டிஏவி கல்லூரியில் சேர்ந்த அவர், அரசியலில் முதுகலைப் (எம். ஏ) பட்டத்தையும் முதல் வகுப்பில் தேர்ச்சியுற்று பெற்றார்.
தனது முதுகலைப் படிப்பை வெற்றிகரமாக முடித்த அவர், இந்துமத அமைப்பான ‘ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்’ன் ஒரு முழுநேர தொழிலாளியாக மாறினார். சட்டம் பயில வேண்டுமென்ற ஆர்வம் கொண்ட அவர், அதைத் தீவிரமாகப் பயின்றார். இந்திய சுதந்திரத்திற்காக மாபெரும் தலைவர்களும், புரட்சியாளர்களும் போராடிக் கொண்டிருந்ததால், அவர் சட்டப் படிப்பைப் பாதியிலே கைவிட்டு, ஒரு பத்திரிக்கையாளராக உருவெடுத்தார். பத்திரிக்கையாளராக மாறிய அவர், ‘ராஷ்ட்ர தர்மா’, ‘பஞ்ச்ஜன்யா’, ‘ஸ்வதேஷ்’ மற்றும் ‘வீர் அர்ஜுன்’ போன்ற நாளிதழ்களைத் திருத்தும் பணியில் ஈடுபட்டார். ஆர். எஸ். எஸ்-ன் முழு நேர ஊழியர்கள் போலவே, அவர் இறுதி வரை திருமணமாகாமலேயே ஒரு பிரம்மச்சாரியாகவே வாழ்ந்தார்.
