திருவலஞ்சுழியும் - திருக்கொட்டையூர்க்கோடீச்சரமும்
திருச்சிற்றம்பலம்
724
கருமணிபோற் கண்டத் தழகன் கண்டாய்
கல்லால நிழற்கீ ழிருந்தான் கண்டாய்
பருமணி மாநாகம் பூண்டான் கண்டாய்
பவளக்குன் றன்ன பரமன் கண்டாய்
வருமணிநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்
மாதேவன் கண்டாய் வரதன் கண்டாய்
குருமணிபோல் அழகமருங் கொட்டை யூரிற்
கோடீச் சரத்துறையுங் கோமான் றானே.
6.73.1
725
கலைக்கன்று தங்கு கரத்தான் கண்டாய்
கலைபயில்வோர் ஞானக்கண் ணானான் கண்டாய்
அலைக்கங்கை செஞ்சடைமே லேற்றான் கண்டாய்
அண்ட கபாலத்தப் பாலான் கண்டாய்
மலைப்பண்டங் கொண்டு வருநீர்ப் பொன்னி
வலஞ்சுழியின் மேவிய மைந்தன் கண்டாய்
குலைத்தெங்கஞ் சோலைசூழ் கொட்டை யூரிற்
கோடீச்சரத் துறையுங் கோமான் றானே.
6.73.2
726
செந்தா மரைப்போ தணிந்தான் கண்டாய்
சிவன்கண்டாய் தேவர் பெருமான் கண்டாய்
பந்தாடு மெல்விரலாள் பாகன் கண்டாய்
பாலோடு நெய் தயிர்தே னாடி கண்டாய்
மந்தார முந்தி வருநீர்ப் பொன்னி
வலஞ்சுழியின் மன்னு மணாளன் கண்டாய்
கொந்தார் பொழிற்புடைசூழ் கொட்டை யூரிற்
கோடீச் சரத்துறையுங் கோமான் றானே.
6.73.3
727
பொடியாடு மேனிப் புனிதன் கண்டாய்
புட்பாகற் காழி கொடுத்தான் கண்டாய்
இடியார் கடுமுழக்கே றூர்ந்தான் கண்டாய்
எண்டிசைக்கும் விளக்காகி நின்றான் கண்டாய்
மடலார் திரைபுரளுங் காவி ரிவாய்
வலஞ்சுழியின் மேவிய மைந்தன் கண்டாய்
கொடியாடு நெடுமாடக் கொட்டை யூரிற்
கோடீச்சரத் துறையுங் கோமான் றானே.
6.73.4
728
அக்கரவம் அரைக்கசைத்த அம்மான் கண்டாய்
அருமறைக ளாறங்க மானான் கண்டாய்
தக்கனது பெருவேள்வி தகர்த்தான் கண்டாய்
சதாசிவன்காண் சலந்தரனைப் பிளந்தான் கண்டாய்
மைக்கொண்மயிற் றழைகொண்டு வருநீர்ப் பொன்னி
வலஞ்சுழியான் கண்டாய் மழுவன் கண்டாய்
கொக்கமரும் வயற்புடைசூழ் கொட்டை யூரிற்
கோடீச் சரத்துறையுங் கோமான் றானே.
6.73.5
729
சண்டனைநல் லண்டர்தொழச் செய்தான் கண்டாய்
சதாசிவன் கண்டாய்சங் கரன்றான் கண்டாய்
தொண்டர்பலர் தொழுதேத்துங் கழலான் கண்டாய்
சுடரொளியாய்த் தொடர்வரிதாய் நின்றான் கண்டாய்
மண்டுபுனற் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்
மாமுனிவர் தம்முடைய மருந்து கண்டாய்
கொண்டல்தவழ் கொடிமாடக் கொட்டை யூரிற்
கோடீச் சரத்துறையுங் கோமான் றானே.
6.73.6
730
அணவரியான் கண்டாய் அமலன் கண்டாய்
அவிநாசி கண்டாயண் டத்தான் கண்டாய்
பணமணிமா நாக முடையான் கண்டாய்
பண்டரங்கன் கண்டாய் பகவன் கண்டாய்
மணல்வருநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்
மாதவற்கும் நான்முகற்கும் வரதன் கண்டாய்
குணமுடைநல் லடியார்வாழ் கொட்டை யூரிற்
கோடீச் சரத்துறையுங் கோமான் றானே.
6.73.7
731
விரைகமழு மலர்க்கொன்றைத் தாரான் கண்டாய்
வேதங்கள் தொழநின்ற நாதன் கண்டாய்
அரையதனிற் புள்ளியத ளுடையான் கண்டாய்
அழலாடி கண்டாய் அழகன் கண்டாய்
வருதிரைநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்
வஞ்சமனத் தவர்க்கரிய மைந்தன் கண்டாய்
குரவமரும் பொழிற்புடைசூழ் கொட்டை யூரிற்
கோடீச் சரத்துறையுங் கோமான் றானே.
6.73.8
732
தளங்கிளருந் தாமரையா தனத்தான் கண்டாய்
தசரதன்றன் மகனசைவு தவிர்த்தான் கண்டாய்
இளம்பிறையும் முதிர்சடைமேல் வைத்தான் கண்டாய்
எட்டெட் டிருங்கலையு மானான் கண்டாய்
வளங்கிளர்நீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்
மாமுனிகள் தொழுதெழுபொற் கழலான் கண்டாய்
குளங்குளிர்செங் குவளைகிளர் கொட்டை யூரிற்
கோடீச் சரத்துறையுங் கோமான் றானே.
6.73.9
733
விண்டார் புரமூன் றெரித்தான் கண்டாய்
விலங்கலில்வல் லரக்கனுட லடர்த்தான் கண்டாய்
தண்டா மரையானும் மாலுந் தேடத்
தழற்பிழம்பாய் நீண்ட கழலான் கண்டாய்
வண்டார்பூஞ் சோலைவலஞ் சுழியான் கண்டாய்
மாதேவன் கண்டாய் மறையோ டங்கங்
கொண்டாடு வேதியர்வாழ் கொட்டை யூரிற்
கோடீச் சரத்துறையுங் கோமான் றானே.
6.73.10
இத்தலங்கள் சோழநாட்டிலுள்ளன.
திருவலஞ்சுழியில்,
சுவாமிபெயர் - கபர்த்தீசுவரர், தேவியார் - பெரியநாயகியம்மை.
திருக்கொட்டையூரில்,
சுவாமிபெயர் - சுந்தரகோடீசுவரர், தேவியார் - பந்தாடுநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
