திருமுதுகுன்றம் – திருத்தாண்டகம்

bookmark

திருச்சிற்றம்பலம்

681

கருமணியைக் கனகத்தின் குன்றொப் பானைக்

கருதுவார்க் காற்ற எளியான் றன்னைக்
குருமணையைக் கோளரவ மாட்டு வானைக்

கொல்வேங்கை யதளனைக்கோ வணவன் றன்னை
அருமணியை அடைந்தவர்கட் கமுதொப் பானை

ஆனஞ்சு மாடியைநான் அபயம் புக்க
திருமணியைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத்

தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

6.68.1

682

காரொளிய கண்டத்தெங் கடவுள் தன்னைக்

காபாலி கட்டங்க மேந்தி னானைப்
பாரொளியை விண்ணொளியைப் பாதாளத் தானைப்

பான்மதியஞ் சூடியோர் பண்பன் றன்னைப்
பேரொளியைப் பெண்பாகம் வைத்தான் றன்னைப்

பேணுவார் தம்வினையைப் பேணி வாங்குஞ்
சீரொளியைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத்

தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

6.68.2

683

எத்திசையும் வானவர்கள் தொழ நின்றானை

ஏறூர்ந்த பெம்மானை யெம்மா னென்று
பத்தனாய்ப் பணிந்தடியேன் றன்னைப் பன்னாட்

பாமாலை பாடப் பயில்வித் தானை
முத்தினை யென்மணியை மாணிக் கத்தை

முளைத்தெழுந்த செம்பவளக் கொழுந்தொப் பானைச்
சித்தனையென் திருமுதுகுன் றுடையான் றன்னைத்

தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

6.68.3

684

ஊன்கருவின் உள்நின்ற சோதி யானை

உத்தமனைப் பத்தர்மனம் குடிகொண் டானைக்
கான்றிரிந்து காண்டீப மேந்தி னானைக்

கார்மேக மிடற்றானைக் கனலைக் காற்றைத்
தான்றெரிந்தங் கடியேனை யாளாக் கொண்டு

தன்னுடைய திருவடியென் றலைமேல் வைத்த
தீன்கரும்பைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத்

தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

6.68.4

685

தக்கனது பெருவேள்வி தகர்த்தா னாகித்

தாமரையான் நான்முகனுந் தானே யாகி
மிக்கதொரு தீவளிநீர் ஆகா சமாய்

மேலுலகுக் கப்பாலாய் இப்பா லானை
அக்கினொடு முத்தினையு மணிந்து தொண்டர்க்

கங்கங்கே அறுசமய மாகி நின்ற
திக்கினையென் றிருமுதுகுன் றுடையான் றன்னைத்

தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

6.68.5

686

புகழொளியைப் புரமெரித்த புனிதன் றன்னைப்

பொன்பொதிந்த மேனியனைப் புராணன் றன்னை
விழவொலியும் விண்ணொலியு மானான் றன்னை

வெண்காடு மேவிய விகிர்தன் றன்னைக்
கழலொலியுங் கைவளையு மார்ப்ப வார்ப்பக்

கடைதோறு மிடுபிச்சைக் கென்று செல்லுந்
திகழொளியைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத்

தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

6.68.6

687

போர்த்தானை யின்னுரிதோல் பொங்கப் பொங்கப்

புலியதளே உடையாகத் திரிவான் றன்னைக்
காத்தானை ஐம்புலனும் புரங்கள் மூன்றுங்

காலனையுங் குரைகழலாற் காய்ந்தான் றன்னை
மாத்தாடிப் பத்தராய் வணங்குந் தொண்டர்

வல்வினைவே ரறும்வண்ணம் மருந்து மாகித்
தீர்த்தானைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத்

தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

6.68.7

688

துறவாதே யாக்கை துறந்தான் றன்னைச்

சோதி முழுமுதலாய் நின்றான் றன்னைப்
பிறவாதே எவ்வுயிர்க்குந் தானே யாகிப்

பெண்ணினோ டாணுருவாய் நின்றான் றன்னை
மறவாதே தன்றிறமே வாழ்த்துந் தொண்டர்

மனத்தகத்தே அனவரதம் மன்னி நின்ற
திறலானைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத்

தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

6.68.8

689

பொற்றூணைப் புலால்நாறு கபால மேந்திப்

புவலோக மெல்லா முழிதந் தானை
முற்றாத வெண்டிங்கட் கண்ணி யானை

முழுமுதலாய் மூவுலகும் முடிவொன் றில்லாக்
கற்றூணைக் காளத்தி மலையான் றன்னைக்

கருதாதார் புரமூன்று மெரிய அம்பாற்
செற்றானைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத்

தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

6.68.9

690

இகழ்ந்தானை இருபதுதோள் நெரிய வூன்றி

எழுநரம்பின் இசைபாட லினிது கேட்டுப்
புகழ்ந்தானைப் பூந்துருத்தி மேயான் றன்னைப்

புண்ணியனை விண்ணவர்கள் நிதியந் தன்னை
மகிழ்ந்தானை மலைமகளோர் பாகம் வைத்து

வளர்மதியஞ் சடைவைத்து மாலோர் பாகந்
திகழ்ந்தானைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத்

தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

6.68.10

இத்தலம் நடுநாட்டிலுள்ளது. இதுவே விருத்தாசலம்.
சுவாமிபெயர் - பழமலைநாதர்,
தேவியார் - பெரியநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்