விவிலியத்தின்படி இயேசுவின் பிறப்பு பற்றிய செய்திகள் :-

விவிலியத்தின்படி இயேசுவின் பிறப்பு பற்றிய செய்திகள் :-

bookmark

மத்தேயு லூக்கா நற்செய்திகளில் கூறியுள்ளபடி இயேசு யூதேயாவிலுள்ள பெத்லகேமில் கன்னி மரியாவிடமிருந்து கடவுளின் வல்லமையாகிய தூய ஆவியினால் பிறந்தார். லூக்கா நற்செய்தியின் படி கபிரியேல் வான தூதர் மரியாவுக்குத் தோன்றி, "அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்" (லூக்கா 1:28) என்று வாழ்த்துக் கூறினார். இவ்வார்த்தைகளைக் கேட்டு அச்சமுற்றுக் கலங்கிய மரியாவைப் பார்த்து, கபிரியேல் வானதூதர், "மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்" லூக்கா 1:26-31) என்றுரைத்தார். இந்நிகழ்வு கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு அல்லது மங்கள வார்த்தையுரைப்பு (Annunciation) என நினைவு கூரப்பட்டு மார்ச்சு மாதம் 25ஆம் நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அந்நாளில் இயேசு மரியாவின் வயிற்றில் கருவானார் என்று கணக்கிட்டு ஒன்பது மாதங்கள் கழிந்து, டிசம்பர் 25ஆம் நாள் கிறித்து பிறப்பு விழாவைக் கிறித்தவர் கொண்டாடுகின்றனர்.

இயேசு பிறந்த நிகழ்ச்சியை விவரிக்கும் நற்செய்தி நூல்கள் யோசேப்பும் மரியாவும் அப்போது யூதேயாவை ஆண்ட அகுஸ்து சீசர் என்னும் அரசன் இட்ட கட்டளைக்கு ஏற்ப, மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தங்களைப் பதிவு செய்யச் சென்றார்கள் என்று கூறுகின்றன (காண்க: லூக்கா 2:1-5). யோசேப்பு தமக்கு மண ஒப்பந்தமான மரியாவைக் கூட்டிக் கொண்டு நாசரேத்திலிருந்து தம் சொந்த ஊரான பெத்லகேமுக்குப் பெயர் பதிவு செய்யச் சென்றார். அப்போது மரியாவுக்குப் பேறுகாலம் நெருங்கியது. அவரும் தம் குழந்தையாகிய இயேசுவை ஒரு மாட்டுத் தொழுவத்தில் பெற்றெடுத்து, குழந்தையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார் (காண்க: லூக்கா 2:1-7).

இயேசுவின் பிறப்பு முதலாவதாக இடையர்களுக்கு வானதூதரால் அறிவிக்கப்பட்டு அவர்கள் வந்து இயேசுவைப் பணிந்தார்கள். மேலும், மத்தேயு நற்செய்திப்படி, இயேசுவின் பிறப்பின் போது ஒரு அதிசய விண்மீன் தோன்றியது. இதனைப் பார்த்த ஞானிகள் யூதரின் அரசன் பிறந்துள்ளார் என்று அறிந்து பெத்லகேம் வந்து இயேசுவைக் கண்டு பணிந்தார்கள். பொன், தூபம், வெள்ளைப்போளம் ஆகிய பரிசுப் பொருள்களையும் அவர்கள் இயேசுவுக்குக் காணிக்கையாகக் கொடுத்தனர். மேலும் அப்போது யூதாவை ஆண்டுவந்த ஏரோது மன்னன் யூதரின் அரசன் பிறந்துள்ளார் என அறிந்து அப்பிரதேசத்திலிருந்த இரண்டு வயதுக்குக் குறைவான சகல ஆண்குழந்தைகளையும் கொலை செய்வித்தான். எனினும் முன்னரே தேவதூதரால் எச்சரிக்கப்பட்ட யோசேப்பு மரியாவையும் இயேசுவையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு தப்பிச் சென்றார். ஏரோது இறந்த பின்னர் யோசேப்பு, மரியா, இயேசு ஆகியோரை உள்ளடக்கிய "திருக்குடும்பம்" யூதா நாட்டுக்குத் திரும்பி நாசரேத்து என்னும் ஊரில் குடியேறியது (காண்க: மத்தேயு 2:1-23).

இயேசுவின் குழந்தைப் பருவத்துக்கும் இளமைப் பருவத்துக்குமிடையே இயேசு 12 வயதில் எருசலேம் கோவிலுக்குச் சென்ற நிகழ்வு மட்டுமே விவிலியத்தில் (லூக்கா நற்செய்தியில்) குறிப்பிடப்பட்டுள்ளது (காண்க: லூக்கா 2:41-52). இடைப்பட்ட காலத்தில் இயேசு என்ன செய்தார் என்பது விவிலியத்தில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்படாத சில நற்செய்திகளில் கற்பனைக் கதைபோல் மட்டுமே கூறப்பட்டுள்ளது (காண்க: இயேசுவின் மறைந்த வாழ்வு வரலாறு)