இயேசுவின் திருமுழுக்கும் சோதனையும் பற்றிய நற்செய்தித் தகவல்கள்:-
இயேசு யோர்தான் ஆற்றில் திருமுழுக்குப் பெற்றார் என்னும் செய்தி மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்தி நூல்களிலும் உள்ளது. யோவான் நற்செய்தி இந்நிகழ்ச்சியைக் குறிப்பிடவில்லை.
மாற்கு நற்செய்தியின் படி, இயேசு யோர் தான் ஆற்றருகே வந்து, அங்கே திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்த யோவானிடம் தாமும் திரு முழுக்குப் பெற்றார். ஆற்றிலிருந்து இயேசு கரையேறியபோது தூய ஆவி அவர்மீது புறா வடிவில் வந்திறங்கினார். மேலும் "என் அன்பார்ந்த மகன் நீயே. உன்பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" (மாற்கு 1:10–11) என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.
லூக்கா நற்செய்தியில் யோவான் போதிக்க தொடங்கியது திபேரியு (Tiberius) சீசரின் 15 வது ஆண்டு என்னும் குறிப்பு உள்ளது (காண்க: லூக்கா 3:1). இது கி.பி. 28/29 ஆம் ஆண்டு ஆகும். இயேசு பிறந்தது கி.மு. சுமார் 4 ஆம் ஆண்டு என்று கொண்டால், அவர் திருமுழுக்குப் பெற்றபோது சுமார் 32 வயதினராக இருந்திருப்பார்.
இயேசு திருமுழுக்குப் பெற வந்ததைக் கண்ட யோவான் இயேசுவைத் தடுத்து, "நான்தான் உம்மிடம் திருமுழுக்குப் பெற வேண்டியவன்; நீரா என்னிடம் வருகிறீர்?" என்று கூறியதாக மத்தேயு நற்செய்தி குறிப்பிடுகிறது. ஆனால் இயேசு அவரைப் பார்த்து, "இப்பொழுது விட்டுவிடும். கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவது தான் முறை" (மத்தேயு 3:13-15) என்று பதிலளித்தார்; பின்னர் யோவானின் கைகளால் திருமுழுக்குப் பெற்றார்.
திருமுழுக்குப் பெற்ற பின்னர் இயேசு பாலைநிலத்துக்குச் சென்று 40 நாள்கள் நோன்பிருந்தார். அப்போது அலகை அவரை மூன்று முறை சோதித்தது. மூன்று முறையும் இயேசு வென்றார். பின்னர் இயேசு பாலைநிலத்தை விட்டகன்று, மக்களுக்கு "இறையரசு" பற்றிய நற்செய்தியை அறிவிக்கலானார். தம்மோடு இருக்கவும் மக்களுக்கு இறையரசு பற்றிய நற்செய்தியை அறிவிக்கவும் இயேசு தமக்கென சீடர்களைத் தெரிந்துகொண்டார் (காண்க: மத்தேயு 4:12-22; மாற்கு 1:14-20; லூக்கா 4:14-5:11).
