வரைக்காட்சிப் படலம் - 954

bookmark

954.

பேர் அவாவொடு மாசுணம் பேர. வே
பேர. ஆவொடு மா சுணம் பேரவே!
ஆர ஆரத்தி னோடும் மருவியே
ஆர வாரத்தின் ஓடும் அருவியே!
 
மாசுணம்     - பெரும் பாம்புகள்; பேர் அவாவொடு - (இரையை
விரும்பியதனால்)   மிகு  விருப்புடன்; பேர - பெயர்ந்து செல்வதனால்;
வே  பேர  -  மூங்கில்கள் அடி  பெயர்ந்து இற்றுவிழ; ஆவொடு மா
சுணம்  பேர  -  (அது   கண்டு  அஞ்சிய) காட்டுப் பசுக்கள் ஓடவும்.
(அதனால்  எழுந்த)  பெரும்   புழுதி  பறக்கவும் (ஆயின) ; அருவி -
(அம்மலையில்   உள்ள)   நீரருவிகள்;   ஆர   ஆரத்தினோடும்  -
மிகுதியான முத்துக்களோடும்; மருவி- கலந்து; ஆரவாரத்தின் ஓடும் -
பேரொலியுடன் ஓடிக் கொண்டிருக்கும். 

மலையின்     ஒருபுறத்தில்  புழுதி பறக்கின்றது. மற்றொரு புறத்தில்
அருவி  ஓடுகின்றது. இவ்வாறு  மலையின்  சிறப்புக் கூறப்படுகிறது. வே:
மூங்கில். சுணம்: சுண்ணம். புழுதி.                             27