வரைக்காட்சிப் படலம் - 946

bookmark

946.

பூ அணை பலவும் கண்டார்;
   பொன்னரிமாலை கண்டார்.
மே வரும் கோபம் அன்ன
   வெள்ளிலைத் தம்பல் கண்டார்;
ஆவியின் இனிய கொண்கர்ப்
   பிரிந்து. அறிவு அழிந்த விஞ்சைப்
பாவையர் வைக. தீய்ந்த
   பல்லவ சயனம் கண்டார்.*
 
(அல்லாமலும்)  பூ அணை பலவும் கண்டார் - (அங்குள்ள மக்கள்)
மலர்ப்  படுக்கை  பலவற்றைப்  பார்த்தார்கள்;  பொன்  அரி மாலை
கண்டார் - (புலவியால்  எறிந்த) பொன்னரி மாலைகளைக் கண்டார்கள்;
மேவரும்  கோபம் அன்ன -  விரும்பத்தக்க இந்திர கோபப் பூச்சியை
ஒத்த; வெள்ளிலைத் தம்பல்- வெற்றிலைத் தம்பலங்களை; கண்டார் -
பார்த்தார்கள்;  ஆவியின்   இனிய  -  (தம்)  உயிரினும்  இனியரான;
கொண்கர்  பிரிந்து - கணவரைப் பிரிந்து; அறிவு அழிந்த - மதியை
இழந்த;   விஞ்சைப்  பாவையர்   வைக   -   வித்தியாதர  மகளிர்
தங்குவதால்;    தீய்ந்த   பல்லவ    சயனம்    -    தீய்ந்துவிட்ட
தளிர்ப்படுக்கைகளையும்; கண்டார் - பார்த்தார்கள். 

இவை    வெவ்வேறிடங்களில் அமைந்த காட்சிகளாதலின் ‘கண்டனர்
கண்டனர்’  என்று   தனித்   தனியே  கூறினார்.  தம்பல்  - தம்பலம்:
வெற்றிலை பாக்கை மென்று உமிழ்ந்தது.                         19