வரைக்காட்சிப் படலம் - 947
947.
பானல் அம் கண்கள் ஆட.
பவள வாய் முறுவல் ஆட.
பீன வெம் முலையின் இட்ட
பெரு விலை ஆரம் ஆட.
தேன் முரன்று அளகத்து ஆட.
திரு மணிக் குழைகள் ஆட.
வானவர் மகளிர் ஆடும்.
வாசம் நாறு ஊசல் கண்டார்.
பானல் அம் கண்கள் ஆட - கருங்குவளை போன்ற கண்கள்
பிறழவும்; பவள வாய் முறுவல் ஆட - பவளம் போன்ற (தம்)
வாயிலே புன் சிரிப்புத் தோன்றவும்; பீன வெம்முலையின் -
பருத்துள்ளனவும் விரும்பத் தக்கனவுமான தனங்களிலே; இட்ட
பெருவிலை - அணிந்த மிகுதியான விலை பெற்ற; ஆரம் ஆட -
முத்தாரங்கள் அசையும்; தேன் அளகத்து - தேன் வண்டுகள்
கூந்தலிலே; முரன்று ஆட - ஒலித்துக் கொண்டு சுழலவும்; திரு மணிக்
குழைகள் ஆட - அழகிய மணிகள் இழைத்த குழைகள் (செவிகளில்)
அசையவும்;வானவர் மகளிர் - தேவ மாதர்கள்; ஆடும் வாசம் நாறு
- ஏறி ஆடுகின்ற மணம் கமழும்; ஊசல் கண்டார் -ஊஞ்சல்களைப்
பாாத்தார்கள்.
தெய்வப் பெண்கள் தம் கண் முதலியன ஆட ஊஞ்சல்
ஆடுவதையும் சென்றவர் கண்டவர் என்றார். ஊசலாடும் இயல்பை
வருணித்தது - தன்மை நவிற்சியணி. ஆட என்ற சொல் ஒரு
பொருளில் பலமுறை வந்தது - சொற்பொருள் பின்வருநிலையணி. 20
