வரைக்காட்சிப் படலம் - 945

bookmark

945.

‘படிகத்தின் தலம்’ என்று எண்ணி.
   படர் சுனை முடுகிப் புக்க
சுடிகைப் பூங் கமலம் அன்ன
   சுடர் மதி முகத்தினார்தம்
வடகத்தோடு உடுத்த தூசு
   மாசு இல் நீர் நனைப்ப. நோக்கி.
கடகக் கை எறிந்து. தம்மில்
   கருங் கழல் வீரர் நக்கார்.
 
படர் சுனை- பரவியுள்ள நீர்ச் சுனையை; படிகத்தின் தலம் என்று
-  படிகக்  கற்கள்   கிடக்கும்  இடமென்று; எண்ணி - மாறாகக் கருதி;
முடுகிப்   புக்க   -  விரைந்து   சென்ற;  சுடிகைப்  பூங்கமலம்  -
சுட்டியணிந்த அழகிய  தாமரையையும்; சுடர் மதி அன்ன - ஒளிவிடும்
சந்திரனையும்  ஒத்த; முகத்தினார்தம் வடகத்தோடு - முகத்தையுடைய
மகளிரின்  மேலாடையோடு;  உடுத்த   தூசை  -  (அரையில் கட்டிய)
சேலையையும்;   மாசு  இல்  நீர்  நனைப்ப -  கலங்காது  தெளிந்த
தண்ணீர்  நனைக்க;  நோக்கி - (அதை) கண்டு; கடகக் கை எறிந்து -
கடகம்  அணிந்த  கைகளைக்  கொட்டி;  கருங் கழல் வீரர் - பெரிய
கழலணிந்த வீரர்கள்; நக்கார் - சிரித்தார்கள். 

மகளிர்     சுனையுள்ள  இடத்தைப்  பளிங்குத்  தலமென்று கருதிச்
சென்றதால்.  தமது  ஆடை  நனைந்தன. அதைப் பார்த்த வீரர்கள் கை
கொட்டிச்  சிரித்தனர்.  என்பது - மயக்கவணியும் பொதுவணியும் கலந்த
கலவையணியாம்.                                            18