லூயி பாஸ்ச்சர்
லூயி பாஸ்ச்சர், இவர் நுண்ணுயிரியலின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். அவர் ஒரு வேதியலாளர். வேதி நொதித்தல் நிகழ்வை உற்றுநோக்கும் போது நுண்ணுயிரிகளை பற்றி இவர் அறிந்துக்கொண்டார். நுண்ணுயிரியல் துறையில் இவரது பங்கு அளப்பரியது. இவர் நடத்திய ஆய்வுகளின் பயனாய் பல நோய்கள் நுண்ணியிரிகளால் ஏற்படுகின்றன என்று அறிந்தார். இவர்தான் முதன்முதலாக வெறிநாய் முதலிய வெறிநோய் ஏறிய விலங்குகளின் கடியில் இருந்து காக்க ஒரு தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்தார். பாலும், குடிக்கும் கள்ளும் எவ்வாறு கெட்டுப் போகாமல் இருப்பது என்பதற்காக இவர் முன்வைத்த முறை இன்று பாஸ்ச்சரைசேஷன் (பாச்சர்முறை) என்னும் பெயரில் பெருவழக்காக உள்ளது. இம்முறையில் பாலைச் சூடு செய்து நுண்ணுயிரிகளைக் கொல்வதால் பால் கெடாமல் இருக்கின்றது. நுண்ணியிரி இயலை நிறுவிய மூவருள் இவர் ஒருவராகக் கருதப்படுகின்றார். மற்றவர்கள் ஃபெர்டினாண்ட் கோன் (Ferdinand Cohn) அவர்களும் ராபர்ட் கோஃக் (Robert Koch) அவர்களும் ஆவார்கள். இப்படிப் பல சாதனைகள் செய்து புகழ் பெற்ற இவரைப் பற்றி நாமும் அறிந்து கொள்வோம்.
பிரான்ஸ் நாட்டில் உள்ள டோல் என்னும் கிராமத்தில் 1822 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் நாள் லூயி பாஸ்டியர் பிறந்தார்.பள்ளிப் படிப்பை முடித்து விட்டு கல்லூரிப் படிப்பை தொடங்கினார், அச்சமயத்தில் ரசாயனத் துறை மற்றும் பௌதிகத் துறையில் மிகுந்த ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார்.அதன் காரணமாக அந்த இரு துறைகளிலும் அவர் டாக்டர் பட்டம் பெற்றார். இது தவிர மருத்துவத் துறையில் பாஸ்டர் செய்த ஆராய்ச்சிகள் மிகுந்த பயனைத் தந்தது. நுண் கிருமிகள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட பாஸ்டியர் " ரோட்டோசோவா" மற்றும் "பாரசைட் " போன்ற கிருமிகள் தான் நோய்களை ஏற்படுத்துவதாகக் கண்டு பிடித்தார். பிறகு பாஸ்டியர் விஞ்ஞானப் பேராசிரியராகப் பதவியை ஏற்றார். அச்சமயத்தில் தான் ஆடு, மாடுகளை நோய்களில் இருந்து விடுவிக்கும் மருந்தினைக் கண்டு பிடித்தார். வெறிநாய் கடித்து விட்டால் மரணம் தான். இதற்கு மாற்று வழி இல்லை என மக்கள் அக்காலத்தில் நம்பினர். அச்சமயத்தில் அவர் கடுமையாக ஆராய்சிகள் செய்து வெறி நாய்க் கடிக்கும் மருந்தினை கண்டு பிடித்தார். வெறி நாய்க் கடிக்கு ஆளான ஒரு சிறுவனின் உடலில் தான் கண்டு பிடித்த மருந்தினை தினமும் செலுத்தி வந்தார். அச்சிறுவன்,வெகுவாக குணமடைந்தான். மக்கள் வியந்து பாஸ்டியர் அவர்களை பாராட்டினார்கள். மேலும், அவருக்கு உலக நாடுகள் அனைத்தும் நிதி அளிக்க முன் வந்தன. காரணம், பாஸ்டியர் தனது கண்டுபிடிப்புகளை மனித நேயத்துடன் தான் செய்தார். பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் அல்ல. அவரது பெரும் முயற்ச்சியால் 1888 ஆம் வருடம் நவம்பர் மாதம் 14 ஆம் நாள் பிரான்சில் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தை ஆரம்பித்தார். தனது ஆராய்ச்சிகளை அங்கு தொடர்ந்து மேற்கொண்டார், அதன் மூலம் மக்களுக்குப் பயன் தரும் பல மருந்துகளை கண்டு பிடித்தார். தனது பிறப்பின் நோக்கம் பணி செய்து கிடப்பதே என்பது பாஸ்டரின் சித்தாந்தமாக இருந்தது. இவ்வாறு உலகம் முழுவதிலும் லட்சக்கணக்கான மக்களை நோயில் இருந்து காப்பாற்றிய பாஸ்டர் 1895 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.
