மேரி கியூரி - 1
மேரி க்யூரி புகழ்பெற்ற போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர் ஆவார். இவர் போலந்தில் வார்சா என்னும் இடத்தில் 1867இல் பிறந்தார். பின்னர் பிரான்சில் வசித்தார். இவர் வேதியியல் மற்றும் இயற்பியலுக்காக நோபல் பரிசை முறையே 1911, 1903 ஆம் ஆண்டுகளில் பெற்றார். (இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்ற முதல் நபர்) ரேடியம், பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டு பிடித்தார். அத்துடன் பாரிஸ் பல்கலைக்கழகத்தின் முதலாவது பெண் பேராசிரியரும் இவரேயாவார்.
மேரி க்யூரி என்ற இந்த மங்கையைப் பற்றி ஒரு வார்த்தையில் சொல்ல முடியாது. மனதில் உறுதி மிக்க பெண், ஒரு சாதாரண பணிப்பெண்ணாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ரேடியத்தின் கதிர்கள் அவளது உடம்பைத் துளைத்தது. அது அவளது இறுதி நாளை எண்ணிடச் செய்தது, இருந்தாலும் வாழ்க்கையில் சாதித்தார். இப்படி பெண் இனத்திற்கே ஒரு தன்னம்பிக்கையை ஏற்படுத்திய அவளது வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்வோம் வாருங்கள்.
மரியா ஸ்க்லடவ்ஸ்கா என்ற மேரி கியூரி போலந்தின் வார்சாவில், 7 நவம்பர் 1867இல் பிறந்தார். இவரது பெற்றோர் பிரபலமான ஆசிரியர்களான பிரோநிஸ்லாவா மற்றும் வ்லேடிஸ்லாவா ஸ்க்லடவ்ஸ்கி ஆவர். போலாந்தின் சுதந்திரத்திற்கான போராட்டங்களில் மரியாவின் குடும்பம் பரம்பரை பரம்பரையாக ஈடுபட்டதனால் மரியா மற்றும் அவரது மூத்த சகோதர சகோதரிகள் தங்கள் வாழ்க்கையை வாழ மிகவும் சிரமப்பட்டனர்.
மரியாவின் தந்தை வ்லேடிஸ்லாவா ஸ்க்லடவ்ஸ்கி கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களை கற்பித்தார். அவர் இரண்டு வார்சா பள்ளிகளுக்கு இயக்குனராக இருந்தார். ரஷ்ய அதிகாரிகள் செயல்முறை கற்பித்தலை பள்ளிகளிலிருந்து நீக்கியபின் தனது ஆய்வுக்கூடத்தின் கருவிகளை வீட்டிற்கு எடுத்துவந்து தனது குழந்தைகளுக்கு அவைகளின் செயல்பாட்டை விளக்கினார். மரியாவின் தாயார் பிரோநிஸ்லாவா ஒரு உறைவிடப் பள்ளியை நடத்தி வந்தார். ஆனால் மரியா பிறந்தவுடன் அவர் தனது இப்பணியை கைவிட்டார். மரியாவின் பன்னிரெண்டாவது அகவையில் காசநோயால் அவர் இறந்தார்.
தனது பத்தாவது அகவையில் மரியா ஜே.சிகொர்ச்கா என்னும் உறைவிட பள்ளியில் சேர்ந்தார். அதிலிருந்து ஜூன் 12, 1883இல் தங்கப்பதக்கத்தோடு வெளியேறினார். அடுத்த ஆண்டை தனது தந்தையின் குடும்பத்தினருடன் கிராமத்தில் கழித்தார். பிறகு வார்சாவில் தனது தந்தையுடன் வாழ்ந்தார். அப்போது சிறிதாக பயிற்சி வகுப்பு நடத்தினார். பெண் என்பதால் மேற்படிப்பிற்கு அங்குள்ள நிறுவனங்களில் சேர்த்துக்கொள்ளப்படாததால் பிளையிங் பல்கலைகழகம் என்னும் போலிஷ் பாடத்திட்டம் நடத்தும், ரஷ்ய அதிகாரிகளை எதிர்க்கும் மற்றும் பெண்களை சேர்த்துக்கொள்ளும் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.
மரியா தனது அக்கா பிரோநிஸ்லாவாவுடன் ஒரு உடன்படிக்கை போட்டுக்கொண்டார். அதன்படி பிரோநிஸ்லாவாவின் மருத்துவப் படிப்பிற்கு தன்னால் முடிந்த அளவிற்கு மரியா பணம் கொடுப்பார். மாறாக பிரோநிஸ்லாவா இரு வருடங்களுக்கு பிறகு மரியாவிற்கு பண உதவி அளிப்பார். இதற்காக மரியா வார்சாவில் ஒரு வீட்டு ஆசிரியராக பணிபுரிந்தார்.
தன் தமக்கை மருத்துவம் முடித்த பிறகு குடும்பத்திற்குப் பேருதவியாக இருப்பாள் என எண்ணி இருந்த பொழுது தன்னுடன் படித்தவனை திருமணம் செய்து கொண்டு தனியாக அவள் வாழ்க்கை நடத்தத் தொடங்கினாள். அதனால் மனம் உடைந்த மேரி ஆசிரியர் தொழில் செய்து கொண்டே சொர்பான் நகரில் உள்ள ஒரு விஞ்ஞான பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படித்தாள். வேலையில் இருந்து கொண்டே மேரி ஒரு வழியாக முதுநிலை பட்டம் பெற்றார். பிறகு ஆசிரியர் வேலையை விட்டு சோதனைச் சாலையில் புட்டிகளைத் தூய்மை செய்யும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள். அப்படியே அங்கு தனது ஆய்வுகளையும் விடாமல் தொடர்ந்து மேற்கொண்டாள் மேரி. ஆனால், இறைவன் மேரியை வேறு ஒரு திட்டத்திற்காக தயார் படுத்திக் கொண்டு இருப்பது மேரிக்கு அப்போது தெரியாது.
மேரீ, முதன்முதலில் ஈயத்தின் காந்த சக்தி பற்றி ஆய்வு மேற்கொண்டார். அதே வருடம் பியர் கியூரி மேரீயின் வாழ்க்கையில் வந்தார். இருவருக்கும் ஒத்தாக உள்ள அறிவியல் ஆர்வமே இருவரையும் ஒன்று சேர்த்தது. ஒரு இயற்பியல் மற்றும் வேதியியல் பள்ளியில் பியரி ஓர் ஆசிரியராக இருந்தார். பேராசிரியர் ஜோசப் கொவால்ஸ்கி இவர்கள் இருவரையும் அறிமுகப்படுத்தி வைத்தார். அவர் மேரீ ஒரு பெரிய ஆய்வுக்கூடத்தை வேண்டுவதை அறிந்திருந்ததாலும் பியரி அத்தகைய ஓர் ஆய்வுக்கூடத்தை அணுகக்கூடிய வாய்ப்பு பெற்றிருந்தவர் என்பதை அறிந்திருந்ததாலும் இவ்வாறு செய்தார்.
