மிதிலைக் காட்சிப் படலம் - 610
அமளி நண்ணிய ஆரணங்கின் நிலை (610-613)
610.
நாள் அறா நறு மலர் அமளி நண்ணினாள்-
பூளை வீ புரை பனிப் புயற்குத் தேம்பிய
தாள தாமரைமலர் ததைந்த பொய்கையும்.
வாள் அரா நுங்கிய மதியும். போலவே.
பூளைவீ புரை- பூளைப் பூவைப் போன்ற; பனிப் புயற்கு -
(மெல்லிய வெண்ணிறமான) பனிமழைக்கு; தேம்பிய தாள தாமரை
மலர் - தாள்களைக் கொண்ட வாடிய தாமரைப் பூக்கள்; ததைந்த
பொய்கையும் - நெருங்கின தடாகத்தையும்; வாள் அரா - வாள்
போல் கொடிய பாம்பினால்; நுங்கிய மதியும் போல -
விழுங்கப்பட்ட சந்திரனையும் ஒப்ப (அந்த மலர்ப் படுக்கை)
வாட்டத்தை அடையுமாறு; நாள் அறா நறுமலர் - அன்று பூத்த
நறுமலர்களைக் கொண்டு பரப்பப்பட்ட; அமளி நண்ணினாள் -
அப்படுக்கையில் (சீதை) சேர்ந்தாள்.
தோழியர் அமைத்த மலர்ப்படுக்கையில் சீதை சேரவும்
அப்படுக்கை அவளது மேனி வெப்பத்தால் தீய்ந்துவிட்டது. 47
