மிதிலைக் காட்சிப் படலம் - 611

bookmark

611.

மலை முகட்டு இடத்து உகு
   மழைக்கண் ஆலிபோல்.
முலை முகட்டு உதிர்ந்தன.
   நெடுங் கண் முத்து இனம்;
சிலை நுதற்கடை உறை
   செறிந்த வேர்வு. தன்
உலை முகப் புகை நிமிர்
   உயிர்ப்பின் மாய்ந்ததே.
 
சிலை   நுதற் கடை- வில் போன்ற நுதலின் கடைப்பால்  புருவ
விளிம்பில்; உறை செறிந்த  - பொருந்திய துளிர்த்த மிக்க; வேர்வு -
வியர்வைத்துளிகள்; தன் - அவனது; உலை முகப்புகை - கொல்லன்
உலைக்களத்து  எழும்புகை  போன்ற  வெப்பம்;  நிமிர் உயிர்ப்பின்
- நெட்டுயிர்ப்பினால்; மாய்ந்ததே - புலர்ந்து  (உலர்ந்து)  போயிற்று;
மலை   முகட்டு   இடத்து  -  மலைச்   சிகரங்களின்  மேற்பால்;
உகு - சிந்துகின்ற. பொழிகின்ற; ஆலிபோல்- மழைத்துளிகள் போல;
முலை  முகட்டு - அவளது தடங்கொங்கைகளின் மேற்பால்; நெடுங் 
கண் -  நீண்ட கண்கள் பெருக்கிய; முத்து இனம் - முத்து  போன்ற
கண்ணீர்த் துளிகள்; உதிர்ந்தன - சிந்தின.  

வான்கண்     விழித்த  (மேகம் பொழிந்த) நீர்த்துளிகள்  மலைச்
சிகரத்தில்   வீழ்தல்போல்   மான்கண்   இழித்த   முத்து   போன்ற
நீர்த்துளிகள் மலைச் சிகரங்களில் வீழ்ந்தன.  

வியர்வைத்துளிகள் நெட்டுயிர்ப்பால்  உலர்ந்து போயின  என்பது
குறிப்பு. மழைக்கண் காரணக்குறி என்பார் சுந்தர காண்டத்தும்.    48