மிதிலைக் காட்சிப் படலம் - 608
சேடியர், பிராட்டியை அழைத்துச் செல்லுதல்
சோர்ந்த சீதையைத் தோழியர் மலர்ப்படுக்கையில் சேர்த்தல்
608.
கலம் குழைந்து உக. நெடு நாணும் கண் அற.
நலம் குழைதர. நகில்முகத்தின் ஏவுண்டு.
மலங்கு உழை என. உயிர் வருந்திச் சோர்தர.
பொலங் குழை மயிலைக் கொண்டு. அரிதின் போயினார்.
கலம் குழைந்து உக- அணிகள் நெகிழ்ந்து விழவும்; நெடு
நாணும் கண்அற- மிக்க நாணமும் (தன்னிடமிருந்து) ஒழியவும்; நலம்
குழைதர - அழகு மாறவும்; நகில் முகத்தின்- தன் முலைகளிடத்தில்;
ஏ உண்டு - காம பாணத்தால் அடிப்பட்டு; மலங்கு உழை
என - (வேடனது அம்பால் அடிபட்டு) வருந்தும் மான்போல; உயிர்
வருந்தி்ச் சோர்தர - உயிர் வருந்தி(ச்சீதை) வாடி நிற்க;
பொலங்குழை மயிலை - (அதைப் பார்த்த தோழியர்)
பொன்குழையாகிய காதணியை அணிந்த மயில்போலும் சாயலையுடைய
அச்சீதையை; அரிதின் - சிரமப்பட்டு; கொண்டு போயினார் -
அழைத்துச் சென்றார்கள்.
சீதை காமநோயால் வருந்தினாள்; அதனால் அதைத்
தணிக்கும்பொருட்டு அவளைத் தக்க இடத்திற்குத் தோழியர் கொண்டு
போயினர். 45
