மிதிலைக் காட்சிப் படலம் - 609
சேடியர் சீதாபிராட்டியைச் சீதமலரமளிச் சேர்த்தல்
609.
காதொடும் குழை பொரு கயற் கண் நங்கைதன்
பாதமும் கரங்களும் அனைய பல்லவம்
தாதொடும் குழையொடும் அடுத்த. தண் பனிச்
சீத நுண் துளி. மலர் அமளிச் சேர்த்தினார்.
காதொடும் - காதுடன்; குழைபொரு - குண்டலங்களையும்
முட்டுகின்ற; கயல்கண் - கயல்மீன்போல் பிறழும் கண்ணினையுடைய;
நங்கைதன் - சீதையின்; பாதமும் கரங்களும் - திருவடிகளையும்
கைகளையும்; அனைய பல்லவம் - ஒத்துள்ள பல்லவம் என்று
சொல்லப்படுகின்ற; குழையொடும் - செந்தளிர்களுடனும்; தாதொடும்
- பூந்தாதுகளுடனும்; அடுத்த - பொருந்தியதும்; தண்பனிச்
சீதம் நுண்துளி - மிகக் குளிர்ந்த நுட்பமான பனித்துளிகள்
தெளிக்கப் பட்டதுமான; மலர் அமளி - பூக்காளல் ஆகிய
படுக்கையில்; சேர்த்தினர் - (சீதையைத் தோழியர்) கொண்டுபோய்ச்
சேர்த்தார்கள்.
பல்லவம்: மென்மையான தளிர். மலர் அமளி: சீதையின்
வெம்மையைத் தணிவிக்கப் பூந்தாதுகளையும் தளிர்களையும் கீழே
இட்டு மலர் பரப்பிய படுக்கை. தண் சீதப் பனி நுண்துளி என
மாற்றுக. 46
