மிதிலைக் காட்சிப் படலம் - 604

bookmark

604.

மால் உற வருதலும். மனமும் மெய்யும். தன்
நூல் உறு மருங்குல்போல். நுடங்குவாள்; நெடுங்
கால் உறு கண் வழிப் புகுந்த காதல் நோய்.
பால் உறு பிரை என. பரந்தது எங்குமே.
 
மால்   உற   வருதலும் -  காமம்  மிகுதியாகத் தோன்றுதலும்;
மனமும் மெய்யும்  -  நெஞ்சமும்  உடலும்;  நூல்  உறு -  நூல்
இழையை ஒத்துள்ள;  தன்  மருங்குல்  போல் - தனது நுண்ணிய
இடைபோல;  நுடங்குவாள்  -  தளர்கின்ற  சீதையின்; கால் உறு
நெடுங்கண் - கரிய  நீண்ட  கண்களின்   மூலம்;  வழிப்  புகுந்த
காதல்நோய்  - உள்ளே புகுந்த  காதல்  நோயானது;  பால்  உறு
பிரை என - பாலில் சேர்ந்த பிரைத் துளிபோல; எங்கும் பரந்தது -
உடம்பு முழுதும் பரவியது.

பிரை:    பாலை உறையச் செய்யும் மோர்த் துளி. அது முதலிலே
பாலின்  ஓர் இடத்தில்  சேர்ந்து  உடனே  அப்பால்  முழுவதையும்
மாற்றுகிறது. அதுபோலக்  காமநோய்  முதலில்  கண்வழியே உள்ளே
சென்று உடனே உடம்பு முழுவதும் பரவியது என்றார்.

காதல் நோயால் உடல் நூல்போல் ஒடுங்கியது. காதல்  புகுதற்குக்
கண்ணின் கருமணியே வழியாகும்.

‘குடப்பால்  சில்லுறைபோலப்  படைக்கு   நோயெல்லாம்   தான்
ஆயினனே’  -  புற.  276  வேறு  உரை;நீர்  ஓரிடத்தில்   சேர்ந்து
பரவுவதற்கு  வாய்க்கால்  வழியாக  அமைவதுபோலக்  காம  ஆசை
மனத்தில்  சென்று  பரவக்  கண்  வழியாக  உள்ளது.  கண்களுக்குக்
கால்வாய் உவமை; காதல் நோய்க்கு நீர்ப் பெருக்கு உவமை; கால் உறு
கண்: கருமணி பாவை.                                     41