மிதிலைக் காட்சிப் படலம் - 595

bookmark

595.

‘கொல்லும் வேலும் கூற்றமும்
   என்னும் இவை எல்லாம்
வெல்லும் வெல்லும்’ என்ன
   மதர்க்கும் விழி கொண்டாள்;
சொல்லும் தன்மைத்து அன்று அது;
   குன்றும். கவரும். திண்
கல்லும். புல்லும். கண்டு உருக.
   பெண் கனி நின்றாள்.
 
கொல்லும்     வேலும் -  கொலைத் தொழிலில் வல்ல  வேலும்;
கூற்றமும்  -   இயமனும்;   என்னும்   இவை  எல்லாம் - என்ற
இவை  எல்லாவற்றையும்;  வெல்லும்  வெல்லும்  என்ன - வெற்றி
கொள்ளும் என்று  சொல்லுமாறு;  மதர்க்கும் -  களிப்பு  அடையும்;
விழி கொண்டாள்  - கண்களைப்  பெற்றுள்ளாள் (சீதை) ; அது  -
சீதையின் அந்த   நிலைமை;  சொல்லும்  தன்மைத்து  அன்று  -
(யாவராலும் சிறப்பித்து)  சொல்லி  முடிக்கக்கூடிய  தன்மையுடையதாக
இல்லை; பெண்கனி  -   (ஏனெனில்)  பெண்வடிவு  கொண்ட  கனி
போன்ற அச்சீதை;  குன்றும்  -  பெருந் தோற்றமுடைய மலைகளும்;
சுவரும் திண்கல்லும் - (சிறிய) சுவர்களும் வலிய கற்களும்;  புல்லும்
-  (மெல்லிய)    புற்களும்;   கண்டு   உருக  .   (இப்படிப்பட்ட
அசையாத  பொருள்களும்)   தன்   அழகைப்  பார்த்து   உருக்கம்
அடையுமாறு; நின்றாள் - நின்றிருந்தாள்.   

     வெல்லும் வெல்லும் - அடுக்கு. துணிவுப் பொருள் தருவது.  32