பிரபுல்ல சந்திர ரே - 2

பிரபுல்ல சந்திர ரே - 2

bookmark

1896 -ல் மாநிலக் கல்லூரியில் துணைப் பேராசிரியராகப் பதவியேற்றார். அன்றைய நாளில் அவருடைய சம்பளம் ரூ 250 மட்டுமே. ஆனால், அவர் மிகச் சிறந்த ஆசிரியராக அனைவரையும் கவரத்தக்க வகையில் பணியாற்றினார். மாணவர்களிடம் ஆய்வு மணப்பான்மையை வளர்ப்பதில் அதிகக் கவனம் செலுத்தினார். இந்தப் பணியில் இருந்து கொண்டே வீட்டிலும் ஓர் ஆய்வுக் கூடத்தை நிறுவினார். தன் மாணவர்களையும், அந்த ஆய்வுக் கூடத்தில் ஆய்வுகளைச் செய்ய அனுமதித்தார்.மேக்நாத் சாகா, சாந்தி இசுவரூப் பட்நாகர் ஆகிய தலைசிறந்த அறிவியலாளர்களை உருவாக்கியவர் ரே.

ஆயுர்வேதம் பற்றியும் இவர் ஆராய்ந்தார். " இந்திய வேதியல் வரலாறு" என்ற மிகச் சிறந்த நூலைப் பத்தாண்டு காலம் கடுமையாக உழைத்து எழுதி வெளியிட்டார். இந்திய நாட்டு மூலிகைகளைப் பற்றி அறிவியல் கண்ணோட்டத்துடன் ஆராய்ந்தார். அவற்றிலிருந்து மருந்துகளை எப்படித் தயாரிக்கலாம் என்பதற்கான முயற்சிகளைல் ஈடுபட்டார். இதன் பயனாக " வங்காள வேதியல் மற்றும் மருந்துகள் தொழிற்சாலை"(பெங்கால் கெமிக்கல்சு அன் பார்மசூட்டிகல்சு) என்ற இந்தியாவின் முதல் மருந்துத் தொழிற்சாலையை 1901 -ல் நிறுவினார். தனது வேதியல் ஆய்வுகளின் மூலம் " பாதரச நைட் ரேட்" டைக் கண்டு பிடித்தார்.

வேதியல் ஆய்வுகளோடு நின்று விடாமல் 'இந்திய வேதியல் கழகம்', 'இந்திய வேதியல் பள்ளி' ஆகியவறையும் தொடங்கினார். மாநிலக் கல்லூரியில் 28 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார். இந்திய அறிவியல் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார். 1936 -ல் இதிலிருந்து ஓய்வு பெற்று கொல்கத்தா பல்கலைக் கழத்தில் மதிப்பியல் சிறப்புப் பேராசிரியராகப் பதவியேற்றார்.

இவர் தாம் பிறந்த இந்தியத் தாய்த்திருநாட்டைப் பெரிதும் நேசித்தார். தேச விடுதலைப் போராட்டங்களில் பங்கு கொண்டார். தன்னுடைய வாழ்க்கை வரலாற்றையும் இவர் எழுதியுள்ளார். இவருடைய கடுமையான உழைப்பால் உடல் நலம் பாதிக்கப்பட்டார். 16-6-1944 -ல் இவர் இவ்வுலக வாழ்வை விட்டு மறைந்தார்.

1919-ல் அப்போதைய ஆங்கிலேய அரசு இவரைப் பாராட்டி "Companion of the Indian Empire" என்ற பட்டத்தையும், பிறகு "சர்" என்ற பட்டத்தையும் கொடுத்துச் சிறப்பித்தது. இந்திய வேதியல் வளர்ச்சிக்காக மிகக் கடுமையாக உழைத்த பிரபுல்ல சந்திர ரே யின் சேவையை மதித்து அவர் பெயரில் "பி.சி.ரே விருது" என்ற விருது இந்தியாவில் சிறந்த மருத்துவ சேவையாற்றுபவர்களுக்கு ஆண்டு தோறும் இந்திய அரசால் வழங்கிச் சிறப்பு செய்யப்படுகிறது.

வங்காள மொழி வளர்ச்சிக்கு மிகவும் பாடுபட்டார், இதற்கு அடையாளமாக, ஆச்சார்யா பிரபுல்ல சந்திரா கல்லூரி, ஆச்சார்யா சந்திர ராய் பல்தொழில் நுட்பக்கல்லூரி ஆகியவை வங்காள தேசத்தில் இன்றும் இவர் பெயரை நினைவுகூறுகின்றன. இவர் பெயரில் வங்க தேசத்தில் ஒரு சாலையும் உள்ளது. இதே போல சமூக சேவைகளிலும் ஈடுபட்டு அதன் ஒரு பகுதியாக இந்திய தேசிய சமூக சீர்திருத்த மாநாட்டில் தீண்டாமையின் கொடுமையை கடுமையாக சாடினார்.