பிடல் காஸ்ட்ரோ - 2
ஜுலை 26, 1953 ல் மொன்காடாத் ராணுவமுகாமின் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டார் காஸ்ட்ரோ. நன்றாக திட்டமிடப்பட்டிருந்தும் பிடெலின் வண்டி கோளாறு காரணமாகவும், இருட்டில் மற்ற வீரர்கள் வழி தவறியதாலும் அந்த தாக்குதல் தோல்வியை தழுவியது. காஸ்ட்ரோவும் மாட்டிக்கொண்டார். 1953 ல் காஸ்ட்ரோவின் வழக்கு நீதி விசாரணைக்கு வந்தது. காஸ்ட்ரோ புரட்சிக்கு திட்டம் தீட்டியதை ஒப்புக்கொண்டார். மேலும் பாடிஸ்டாவின் அரசையும் தோலுரித்துக்காட்டினார்; அமெரிக்காவைக் கடுமையாக சாடினார். நீதி மன்றத்தில் ஃபிடெல் நிகழ்த்திய இந்த உரையே பின்னாளில் 'வரலாறு என்னை விடுதலை செய்யும்' (THE HISTORY WILL ABSOLVE ME) என்று வெளிவந்த நூலாகும். பின் மே 15 1955 ல் காஸ்ட்ரோ விடுதலை செய்யப்பட்டார். பின்னர் மெக்சிகோ சென்ற காஸ்ட்ரோ கொரில்லா முறை தாக்குதல்களைக் கற்றுத் தேர்ந்தார். அத்துடன் க்யூபாவில் உள்ள அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களைக் கச்சா எண்ணெய் யை ரஷ்யா விடம் இருந்து இனி வாங்க வேண்டும் என்று வற்புறுத்தினார்.அவர்கள் அதனை ஏற்க மறுத்த போது, அனைத்தையும் தேசிய மயமாக்கினார்.
அடிமாட்டு விலைக்குக் கரும்பு விளைவிக்கும் நிலங்களை விவாசாயிகளிடம் இருந்து வாங்கிய யூனைடட் ப்ருட் கம்பனிக்கு அதே விலைக்கு இழப்பீடு கொடுத்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தார்.அமெரிக்காவை காஸ்ட்ரோ எதிர்க்கும் ஒவ்வொரு தருணத்திலும் ரஷ்யா அவருக்குக் கை கொடுத்தது. க்யூபாவிடம் இருந்து சர்க்கரையை இனி பெறக் கூடாது என்று அமெரிக்கா முடிவு செய்த போது, இதைத் தான் இத்தனை காலம் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருந்தேன், என்று கூறி க்யூபாவில் உள்ள அமெரிக்காவின் 166 கம்பனிகள், வங்கிகள் உட்பட அனைத்தையும் தேசிய மயமாக்கினார்.
மெக்சிகோவில் காஸ்ட்ரோ இருக்கும் போதுதான் அவருக்குத் தேச எல்லைகடந்த மனிதநேயப் போராளியான சேகுவேரா அறிமுகம் ஆனார். அவர் க்யூபா விடுதலைப் போராட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டார். காஸ்ட்ரோவும் சேகுவெராவும், க்ரான்மா எனும் கள்ளத்தோணி மூலம் கியூபா வந்தடைந்தனர். அடர்த்தியான மரங்கள் நிறைந்த சியார்ரா மேஸ்தாரவில் தங்கியிருந்தபடியே கியூப விவசாயிகளையும், இளைஞர்களையும் புரட்சிக்கு தயார்ப்படுத்தினார். பின் படிப்படியாக முன்னேறி கியூபாவில் காஸ்ட்ரோ தலைமையிலான சோசியலிச குடியரசை நிறுவினர்.
காஸ்ட்ரோவின் ஆட்சியின்கீழ் கியூபா முழுமையாக வந்ததும் அமெரிக்கா அவரைத் தன்வசம் இழுக்க முயற்சித்தது. ஆனால் அதற்கு காஸ்ட்ரோ மறுத்து, 'கியூப வளங்கள் கியூப மக்களுக்கே சொந்தம்' என்று கூறிவிட்டார். அதனால் அமெரிக்கா கியூபா மீது பொருளாதாரத் தடையை விதித்தாலும் காஸ்ட்ரோ அதனைச் சமாளித்தார். அமெரிக்கா தனது சி.ஐ.ஏ அமைப்பின் மூலம் காஸ்ட்ரோவை 638 முறை கொல்லத் திட்டம் திட்டியும் அதன் முயற்சிகள் பலிக்கவில்லை.
கியூபாவில் அனைவருக்கும் இலவசக் கல்வியை காஸ்ட்ரோ அறிமுகப்படுத்தினார். 1995 ஆம் ஆண்டின் யுனெஸ்கோ ஆய்வின்படி கியூபாவில் படிப்பறிவு சதவிகிதம் 96 ஆகும். மேலும் கியூபாவின் தொழில் நுட்பத்துறையில் பணிபுரிபவர்களில் 60 சதவிகிதத்தினர் பெண்கள் ஆவர். மருத்துவ துறையிலும் கியூபர்கள் சிறந்து விளங்கினர். மகப்பேற்றின் போது தாய்மார்களின் இறப்பு விகிதம் உலகிலேயே மிகக்குறைவாக இருப்பது கியூபாவில் தான்.
அமெரிக்காவின் சதிகள், பொருளாதாரத் தடைகள் என அனைத்தையும் மீறி காஸ்ட்ரோ க்யூபாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றார். க்யூபாவின் மக்களும் அதற்கேற்ப உழைப்பாளிகளாக இருந்தனர். க்யூபாவை உலகத்தின் முன் மென், மேலும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றார் பிடல். அது மட்டும் அல்ல, உலகின் மிகச் சிறந்த பொது மருத்துவ வசதிகள் மக்களுக்குக் கிடைக்கும் நாடுகளில் க்யூபா முதன்மையானது. இதற்க்கெல்லாம் கராணம் பிடல் காஸ்ட்ரோ என்ற அந்த ஒப்பற்ற புரட்சியாளனே. இவ்வளவு நல்லாட்சியை தந்த பிடல் உணவு செரிமானமின்மையால் 2008 ஆம் ஆண்டில் பதவிவிலகினார். அவருக்கு பின் அவரின் தமையன் ராவுல் காஸ்ட்ரோ அதிபராக பதவியேற்றார்.
