லியோ டால்ஸ்டாய்
லியோ டால்ஸ்டாய் ஒரு தலை சிறந்த படைப்பாளி. இவர் புதின எழுத்தாளர்களுள் மிகச் சிறந்தவர்களுள் ஒருவராக மதிக்கப்படுகிறார். இவரது மிகச் சிறந்த ஆக்கங்களான போரும் அமைதியும், அன்னா கரேனினா ஆகியவை, 19 ஆம் நூற்றாண்டு ரஷ்ய வாழ்க்கையை விபரிப்பதில் உண்மைவாதப் புனைகதைகளின் உயர்நிலையைக் காட்டுகின்றன. கட்டுரையாளர், நாடகாசிரியர், கல்விச் சீர்திருத்தவாதி என டால்ஸ்டாய் பல திறமைகளை உள்ளடக்கியவர்.
தனது வாழ்க்கையின் ஆரம்பக் கட்டங்களில் போக்கிரியாகவும், சூதாடியாகவும் திரிந்தார். ஒரு முறை வேட்டைக்குச் சென்ற அவர் ஒரு கரடியை வேட்டையாடினார். அக்கரடி ரத்த வெள்ளத்தில் துடி துடித்ததைக் கண்டு அவருக்குள் இருந்த மனிதாபிமானம் விழித்துக் கொண்டது.அவர் தன்னை ஆண்டவரிடம் ஒப்புக் கொடுத்தார். மேலும் பைபிள் வாசகங்கள் அவரை செம்மைப் படுத்தியது. அவரது எழுத்தில் கூட மனிதாபிமானம் தென்பட்டது. அவர் என்றைக்கும் தனது எழுத்தை பொருள் சம்பாத்திக்கும் ஒரு மூலதனமாகப் பார்த்ததில்லை.
மனிதன் சந்தோஷமாகக் கழிக்க வேண்டிய தனது ஒட்டு மொத்த வாழ்வை எவ்வாறு பொருள், பொருள் என்று தேடிச் சென்று வீணடிக்கிறான் என்று அவருடைய எழுத்துக்களில் கூட யதார்த்தத்தை வெளிப் படுத்தி இருப்பார்.அமைதி வேண்டி கிறிஸ்துவ மத சபைகளை நாடினார், ஆனால் அங்கு உள்ளவர்களோ போலியான பண்புகளுடன் ஊழல் பெருச்சாளிகழாகத் திகழ்ந்தனர். அதனால், சபைகளுக்குப் போவதை அவர் விரும்பவில்லை. இயேசுவை தன் சொந்த அனுபவங்களால் உணர்ந்தார். "அனா கரீனினா" என்ற நாவல் அவருக்கு நல்ல பண வருவாயை ஈட்டித் தந்தது கூடவே அவரது அந்தப் படைப்பு அவருக்கு பெயரையும், புகழையும் வாங்கித் தந்தது.
லியோ டால்ஸ்டாய் பணத்தின் மீது பற்று இல்லாதவர் காரணம் அவருக்குப் பூர்விகச் சொத்துக்களே ஏராளாம். இதில் அவரது எழுத்துக்கள் மூலமும் பணம் அதிக அளவில் சேர்ந்தது. ஒரு நல்ல, கிறிஸ்துவன் தேவைக்கு அதிகமாக பணத்தை வைத்துக் கொள்ளக் கூடாது என்பதை பைபிள் மூலமாக உணர்ந்தார். அதனை உணர்ந்த மாத்திரத்தில் ஏழை, எளியவர்களை அழைத்தார், அள்ளி , அள்ளி எல்லோருக்கும் கொடுத்தார்.அவரது மனைவி சோபியாவுக்கு டால்ஸ்டாய் செய்த இந்தக் காரியம் பிடிக்கவில்லை. இருந்தாலும் என்ன செய்ய? பற்களைக் கடித்துக் கொண்டு இருந்தாள் அந்த அம்மையார். காந்தியடிகள் கூட டால்ஸ்டாய் எழுதிய அன்பு , அகிம்சை சம்மந்தமான கட்டுரைகளை படித்து விட்டு. அவரது தென் ஆப்ரிக்க ஆசிரமத்துக்கு டால்ஸ்டாய் பண்ணை என்றே பெயர் இட்டு சிறப்பித்தார்.
டால்ஸ்டாய் ஒரு முறை ரயில் நிலையத்தில் நின்று கொண்டு இருந்தார். ஒரு பெண்மணி அவரை யாரோ எளியவர் என்று எண்ணி தனது மூட்டை, முடிச்சுகளை தூக்கும் படி பணித்தார். டால்ஸ்டாயும், எந்தக் கோபமும் படாமல் அந்த மூட்டையைத் தூக்கினார். பிறகு தான் அந்தப் பெண்மணிக்கே தெரிந்தது அது டால்ஸ்டாய் என்று. பதறி அடித்துக் கொண்டு,அவரிடம் மன்னிப்புக் கேட்டு பின் மூட்டையை தூக்கத் தான் கொடுத்த அந்தப் பணத்தை திரும்பக் கேட்க, " நீங்கள் ஏன் பணத்தை திரும்பக் கேட்கின்றீர்கள். அது நான் உழைத்த உழைப்புக்கான பணம். அதனை நான் ஏன் திருப்பித் தர வேண்டும்?" என்று பதில் அளித்தாராம் டால்ஸ்டாய்.
டுகொபார்ஸ் என்ற ஒரு இன மக்கள் அக்காலத்தில் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் தனது வாழ்நாளில் எப்போதுமே வன்முறையில் ஈடுபட்டது கிடையாது. பிறரை அடிப்பதை, ஏன் திட்டுவதைக் கூட பாவம் என்று நினைப்பவர்கள். ஒருவரை அடிப்பது போலக் கனவு கண்டாலும், உடனே எந்த நபரை அடித்தது போலக் கனவு கண்டார்களோ அந்த நபரிடமே சென்று மன்னிப்புக் கேட்டு, அவர்களுடன் மேலும் இணக்கத்தை வளர்க்க முற்படுபவர்கள். அக்காலத்தில் கட்டாய ராணுவ சேவை அமலில் இருந்த படியால், ராணுவம் இவர்களை சேவை செய்ய அழைத்தது. அப்பழங்குடி மக்கள் 47,000 பேரும் அரசின் ஆணையை மறுத்தனர். கோபம் கொண்ட அரசாங்கம் அவர்களை நாட்டை விட்டே வெளியேறும் படி சொன்னது. எங்கு போய், தஞ்சம் அடைவது என்ற கவலையில் இருந்தார்கள் (அம்மக்கள்), அந்நிலையில் அவர்களுக்கு கனடா அரசு ஆதரவு தர சம்மதித்தது. ஆனால், அவர்கள் பயணச் செலவு மற்றும் புரனமைப்புக்கு அதிக பணம் தேவைப்பட்டது.
டால்ஸ்டாய் அவர்களிடம் சென்று அப்பழங்குடியினர் உதவி கேட்டனர். டால்ஸ்டாய் அச்சமயத்தில் தனது எழுத்துப் பணியை விட்டே இருபது வருடங்களுக்கு மேல் ஆகி இருந்தது. என்றாலும், டால்ஸ்டாய் அவர்களுக்கு உதவ சம்மதித்தார். செய்தித் தாள்களில் ஒரு அறிக்கை ஒன்றை விட்டார் அதில், தான் " புத்துயிர்ப்பு " எனும் நாவலை எழுதப் போவதாகவும், அதற்கு யார் வேண்டுமானாலும் பணம் கட்டி விற்பனை உரிமையைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறி இருந்தார். அதனைப் பார்த்த பலர் " நான், நீ " எனப் போட்டி இட்டு டால்ஸ்டாயின் படைப்பை தங்களுக்கே உரிமம் பெற முண்டி அடித்து வந்தனர். அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு டால்ஸ்டாய் அந்த மலைவாழ் மக்களின் பிரச்சனையை தீர்த்து வைத்தார்.
அவர்கள் இப்பொழுது தன்னை டால்ஸ்டாய் டுகொபார்ஸ் என்றே அழைத்துக் கொள்கின்றனர்.அவரை இன்றும் ஞாபக் படுத்திக் கொண்டு தான் இருகின்றனர். தர்ம சிந்தனை, அள்ளிக் கொடுக்கும் கரங்கள் என அவரது செயல்பாடு, அவரது மனைவிக்குப் பிடிக்கவில்லை. ராயல்டியில் கிடைத்த பெரும் தொகையை அந்த மலை வாழ் மக்களுக்கு கொடுத்ததற்காக சோபியா ( டால்ஸ்டாயின் மனைவி) கோபிக்க. டால்ஸ்டாயும் பதிலுக்கு கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். அந்த சமயத்தில் அவருக்கு நிமோனியா பாதிப்பு இருந்தது.அச்டபோவ் ரயில் நிலையத்தில் சென்று ரயில் ஏறி போக நினைத்த அவர் தீடீர் என மயங்கி விழுந்தார்.எழுந்திரிக்க வில்லை.கண்களை நிரந்தரமாக மூடிவிட்டார் அந்த சிந்தனையாளர். ஆனால், அவரது படைப்புகள் இன்றும் சிரஞ்சீவியாக உலகத்தை வலம் வந்து கொண்டு தான் இருக்கிறது. அது தான் டால்ஸ்டாய் போன்ற படைப்பாளிகளின் பெருமை.
