பிகாசோ

bookmark

ஓவியர், சிற்பி, கவிஞர், நாடக ஆசிரியர் என்று பன்முகத் திறமை கொண்டவர் பிகாசோ. பிறந்தது ஸ்பெயினில் என்றாலும் . வாழ்நாளில் பெரும் பகுதியைக் கழித்தது பிரான்ஸில் தான். இவரது ஓவியக் கலை ஈடுபாடு குழந்தைப் பருவத்திலேயே வெளிப்பட்டது. இவர் முதலில் உச்சரித்த வார்த்தை ‘பென்சில்’ என்பதுதானாம். இதனை அவரது தாய் பூரிப்போடு சொல்வார். ஓவியப் பள்ளி ஆசிரியரான தந்தையிடம் 7 வயதில் ஓவியப் பயிற்சியைத் தொடங்கினார். 13 வயதிலேயே தந்தையை விஞ்சிய தனயன் ஆனார்.

பள்ளிப் பருவத்தில், பாடம் என்றாலே இவருக்கு கசப்பு. மோசமான மாணவனாக கருதப்பட்டார். ஒருமுறை சேட்டை அதிகமாகி, தனி அறையில் அடைத்தார்கள். உற்சாகமானவர் நோட்டுப் புத்தகத்தில் வரைய ஆரம்பித்துவிட்டார். இவரை கண்டிக்கவே ஆசிரியர்கள் தனிமை என்னும் தண்டனையைத் தர விரும்பினார்கள். ஆனால், இவருக்கு அந்தத் தனிமை மிகவும் பிடித்து இருந்தது. இவரே இச்சம்பவம் பற்றிப் பின்னாளில் பேசும் போது ஒரு முறை சொன்னார் ‘‘அந்த தனிமை ரொம்ப பிடித்திருந்தது. நிரந்தரமாக அடைத்து வைத்திருந்தால்கூட மகிழ்ச்சியாக இருந்திருப்பேன்’ என்று.

பார்சிலோனா நுண்கலைக் கல்லூரி நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதால் 14 வயது சிறுவன் பிகாசோவுக்கு விதிவிலக்கு அளித்து சேர்த்துக்கொண்டனர். ஆனால், கல்லூரியின் கட்டுப்பாடுகள் பிடிக்காமல் வகுப்புகளை ‘கட்’ அடித்துவிட்டு வீதிகளில் சுற்றித் திரிவார். கண்ணில்பட்ட காட்சிகளை மனதில் பதியவைத்து ஓவியங்களாகத் தீட்டுவார். மாட்ரிட் நகரில் உள்ள சான் பெர்னாண்டோ ராயல் அகாடமியில் ஓவியக் கலை பயின்றபோதும் இதேபோலத்தான்.

பாரம்பரிய ஓவிய பாணியில் இருந்து 18 வயதில் முழுவதுமாக விடுவித்துக்கொண்டு புதிய முயற்சிகளில் இறங்கினார். தனக்குத் தோன்றியதை ஓவியமாக வடித்துத் தள்ளிய உண்மையான கலைஞன் பிகாசோ. ஸ்பெயின் நாட்டுத் தெருக்களில், ஓவியங்களை வீதியில் போட்டு விற்ற போது, அந்நாட்டு மக்கள் பிகாசோவைப் பார்த்து சிரித்தனர். காரணம், அது வரையில் அப்படி யாரும் இதுவரை விற்றதில்லை. அப்பாவுடன், சிறு வயதில் காளைச் சண்டை பார்க்கப் போனபோது, அந்த அனுபவத்தைக் கூட ஓவியமாக வரைந்தார் பிகாசோ. காலையில் பதினோரு மணிக்கு பொறுமையாக எழுந்திருப்பார், இரவு மூன்று மணி வரை ஓவியங்களை வரைவார்.

‘யங் லேடீஸ் ஆஃப் அவென்யூ’ என்ற ஓவியம் மூலம் கியூபிசம் எனப்படும் புதிய பாணியை அறிமுகப்படுத்தினார். 5 பாலியல் தொழிலாளர்களை சித்தரிக்கும் இந்த ஓவியம், வெவ்வேறு கோணங்களில் பார்க்கும்போது மாறுபட்ட விஷயங்களை உணர்த்தும். இந்த ஓவியம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினாலும், கலை உலகில் புதிய புரட்சியை உருவாக்கியது. சிற்பம் வடிப்பது, செராமிக் ஓவியம் தீட்டுவதிலும் தனித்தன்மையுடன் பிரகாசித்தார். எப்படித் தொண்ணூறு வயதிலும் இத்தனை ஆர்வத்துடன் காணப்படுகின்றீர்கள் என சிலர் இவரிடம் கேட்ட பொழுது இவர் சொன்னாராம் " சிலர் இள வயதிலேயே முதியவர் போல உணர்கிறார்கள். நான் இந்த வயதில் முப்பது வயது இளைஞனாக ஆக தொடர்ந்து முயற்சித்துக் கொண்டு இருக்கிறேன்" என்று.

வாழ்க்கையில், இவருக்கு ஓவியம் தவிர எதுவும் தெரியாது.எந்த அரசியல் கட்சி இப்போது நாட்டை ஆள்கிறது, ஏன்? எந்த ராஜா, எந்தப் பட்டணம் போனால் என்ன என்று இருப்பார். சில சமயங்களில் ஓவியம் தீட்டும் போது பல நாட்கள் சாப்பிடவில்லை என்பதைக் கூட மறந்து விடுவார். அதனை யாரேனும் இவருக்கு நினைவு படுத்தினால் தான் உண்டு. அமைதியின் அடையாளச் சின்னமாக ஆலிவ் இலைகள், புறாவை பிரபலப்படுத்தியவர் இவர்தான். ஸ்பெயினின் கெர்னிகா கிராமத்தை ஹிட்லரின் நாஜிப் படை குண்டு வீசி நாசமாக்கியதைக் கண்டித்து ‘கெர்னிகா’ என்ற ஓவியத்தை தீட்டினார். அது இவரது போர் எதிர்ப்பு மனோபாவத்தை வெளிப்படுத்தியது. அதிகம் பொருள் ஈட்டிய இவர், தான் இறக்கிற வருடத்தில் கூட இருநூறு ஓவியங்களை வரைந்தார். அவர் எண்ணற்ற ஓவியங்களை வரைந்தாலும் அதில் சிலவற்றை மட்டுமே விற்பனைக்கு விடுவார். எண்ணற்ற ஓவியங்கள் ஒரே சமயத்தில் சந்தைக்கு வந்தால் அவரின் மார்கெட் போய் விடும் என்கிற தெளிவு அவருக்கு இருந்தது.

அவர் தனது வாழ்க்கையையே கலையாகத் தான் பார்த்தார். ஒரு நாளைக்கு பல மணி நேரம் நின்று கொண்டே வரையும் குணமும் அவருக்கு இருந்தது. இது போன்று ஓவியங்களை வரைந்து தள்ளுகிறாயே, இது உனக்கு சலிக்காத என்று நண்பர் ஒருவர் இவரிடம் கேட்க ," ஒரு மசூதிக்குள் நுழையும் முசல்மான் போல நான் பக்தியோடு ஓவியம் வரைய வருகிறேன், இது என்னுடைய ஹாபி; நான் மீண்டும் சலிப்படையும் போது மீண்டும் வரைய ஆரம்பிக்கிறேன்." என்றாராம் (சிரித்துக் கொண்டே). அவரது ஓவியங்களில் (Modern art) சில மக்களுக்குப் புரியவில்லை, அவரிடம் அது பற்றி விளக்கம் கேட்டு, தங்களுக்குப் புரியும் படி வரையுமாறு கேட்டார்கள். அதற்கு அவர் சொன்னாராம் ," உங்கள் வீட்டின் அருகில் உள்ள மரத்தில் இருந்து குயில், கீதத்தை கூவுதல் மூலம், கசிய விடுகிற காலைப் பொழுதின் அர்த்தம் உங்களுக்குப் புரிகிறதா? உங்கள் வீட்டின் கண்ணாடியில் வழிந்து மென்மையாகப் படிகிறதே பனித்துளி , அதனை எந்தப் பொருளில் புரிந்து கொண்டு இருக்கிறீர்கள்? ஒவ்வொரு நாளும் மேகம் புதுப் புது வடிவம் எடுக்கிறதே அதற்கு என்ன பொருள்? வெயிலை, இரவை, மழையை எப்படிப் புரிந்து வைத்து உள்ளீர்கள். முதலில் எல்லாவற்றிலும் மனதாரக் கரையுங்கள். எல்லாவற்றின் ஊடாகவும் நீங்கள் இருப்பதை உணரத் துவங்குங்கள். உலகின் காட்சிகளும் அதன் வனப்பும் உங்களுக்குப் புரியத் தொடங்கினால் நவீன ஓவியங்கள் தானே உங்களுக்குப் புரிந்து விடும்" என்றாராம்.

மொத்தத்தில் இவரே ஒரு புரியாத ஓவியம் தான். இவரது வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட சில திரைப்படங்களில் ‘தி மிஸ்ட்ரி ஆஃப் பிகாசோ’ திரைப்படம் குறிப்பிடத்தக்கது. இது 1955-ல் வெளியானது. 2 ஆயிரம் சிற்பங்கள், 1200-க்கும் மேற்பட்ட ஓவியங்கள், 3 ஆயிரம் மண்பாண்ட சிற்பங்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான கலைப் படைப்புகளுக்கு உயிர்கொடுத்த பிகாசோ, 93-வது வயதில் இறந்தார். எந்த உலகம் , இவரை ஒரு பைத்தியம் என்று நகைத்ததோ அதே உலகம் இவரை " நவீன ஓவியத்தின் தந்தை” என்று அழைத்தது.