ஹோ சி மின்
ஹோ சி மின் வியட்நாமின் புரட்சித் தலைவராக இருந்தவர், பின்னர் வடக்கு வியட்நாமின் பிரதமராகவும் (1946–1955), அதிபராகவும் (1946–1969) இருந்தவர். பல சோதனைகளைக் கடந்து நாட்டை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்ற ஒரு நிஜத் தலைவன். ஹோ வியட் மின் விடுதலை இயக்கத்தை 1941 இலிருந்து முன்னின்று நடத்தி, 1954 இல் பிரெஞ்சுப் படையினருடன் சண்டையிட்டு வெற்றி பெற்றார். அவ்வெற்றி அவருக்கு கம்யூனிச நாடாக வடக்கு வியட்நாமை அமைக்க உதவியது. வியட்நாம் போரை அவரது இறப்பு வரையில் முன்னின்று நடத்தினார். ஆறு ஆண்டுகளின் பின்னர் வட வியட்நாமின் வெற்றியுடன் போர் முடிவுக்கு வந்ததுடன் இரண்டு வியட்நாம்களும் ஒன்றிணைந்தன. தெற்கு வியட்நாமின் தலைநகராயிருந்த சாய்கோன் (Saigon) நகரம் ஹோவின் நினைவாக ஹோ சி மின் நகரம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
பிரான்சு நாட்டிடமும் பின்னர் ஜப்பானிடமும் அடிமைப்பட்டுக்கிடந்த வியட்நாமை அடிமைத் தளையிலிருந்து போராடி விடுவித்த மகத்தான தலைவர் ஹோசிமின். அமெரிக்காவுக்கே தண்ணிகாட்டி, அதோட மூக்கை உடைத்தவர் இவர் ? மொத்தத்தில் யார் இந்தப் புரட்சி வீரன்? இவரது வாழ்க்கை வரலாற்றைக் காண்போம் வாருங்கள்.
தோற்றத்தை வைத்து ஒரு மனிதனை மதிப்பிடாதீர்கள்.... இந்த வாக்கியம் நம்மில் பலருக்கும் தெரியும் ஆராம்பத்தில் எதிரிகளால் இப்படி தவறாக மதிப்பிட பட்ட பலர் பின்னாட்களில் வரலாற்றை மாற்றி எழுதியிருக்கிறார்கள். அவர்களில் ஹோசி மின் அவர்களும் ஒருவர். மெலிந்த தேகம், குறுந் தாடி, குறு குறுக்கும் பார்வையுடன் இருப்பார் ஹோசி மின்
இவர் 1890ம் ஆண்டு தன் பெற்றோருக்கு மூன்றாவது குழந்தையாப் பிறந்தார். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் சிங்சுங். பிறகு ஹோசி மின் என்ற பெயர் இவருக்கு எப்படி வந்தது என்று நினைக்கின்றீர்களா? ‘ஹோசிமின்’என்ற பெயருக்கு ‘ஒளி தந்தவர்’ என்பது பொருள். இருண்டு கிடந்த வியட்நாம் நாட்டுக்கு ஒளி தந்தவர் என்பதால் மக்கள் வைத்த பெயர் அது. அதுவே காலப்போக்கில் நிலைத்து விட்டது என்றால் அப்போது எந்த அளவுக்கு அவர் மக்களின் தலைவராக இருந்திருக்க வேண்டும். ஜனாதிபதியாக ஆகும் வரை இவர் தலைமறைவில் வாழ்ந்து வந்தார். சுமார் ஐம்பதுக்கும் மேல் வித்தியாசப்பட்ட இரகசிய பெயர்கள் இவருக்கு உண்டு என நம்பப்படுகிறது.
ஹோ சி மின் மத்திய வியட்னாமில் அமைந்துள்ள சிறிய மாகாணத்தில் பிறந்திருக்கலாம். பிற்பாடு தனது பிறப்பு சான்றிதழில் வித்தியாசப்பட்ட தகவலைக் கொண்டு தலைமறைவில் வாழ்ந்து வந்தார். 1894-1903 காலப்பகுதிகளைத் தனது பிறப்பு ஆண்டாகப் பத்திரங்களில் கொடுத்தாலும், அதிகாரப்பூர்வமாக 1890 எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சில ஆய்வாளர்களால் ஒத்துக்கொள்ளபடுவது இல்லை.
அவரின் பிறந்த நாளும்கூட சரிவரத் தெரியவில்லை. பொதுவாக வியட்னாம் உருவாக்கப்பட்ட மே 19 ஆம் தேதி அவரின் பிறந்த நாள் என நம்பப்டுகிறது. கிராமப்புறத்தில் பிறப்புத் தகவல் சேமிப்பு இல்லாதபடியால் ஹோ சி மின் தனது பிறப்புத் தேதி தெரியாதவராக இருந்து இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஆசிய நாடுகளில் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி எவ்வாறு கட்டப்படவேண்டும், ஒரு கம்யூனிஸ்ட் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கான அரிச்சுவடி ஹோசிமின்னிடம் இருந்துதான் கற்க முடியும். ஏனெனில், ஹோ-சி-மின்னின் புரட்சி வாழ்க்கை மார்க்ஸியத்தை அடிப்படையாகக் கொண்டது. முரணற்றது. மார்கஸியம் ஹோசிமின்னின் எளிமையான தூய வாழ்வு மூலம் புதிய பரிணாமத்தை அடைந்தது.
வியட்நாம், 1911 ஆம் ஆண்டின் ஒரு நள்ளிரவு. நிகே அன், பிராந்தியத்தின் சின்னஞ்சிறு விவசாய கிராமமான கிம்லியன் தூங்கிக்கொண்டிருந்தது. இந்தோ சீன பகுதியை பிரெஞ்சு ஏகாதிபத்தியம் ஆக்கிரமித்திருந்த நேரம் அது.
பிரெஞ்சு போலீஸ் லாரி ஒன்று புழுதியை கிள்ளப்பிக்கொண்டு ஊருக்குள் நுழைந்து ஒரு வீட்டின் சுவற்றில் மோதி நின்றது. அந்த வீட்டின் உரிமையாளரான ஆசிரியரையும் அவரின் மொத்த குடும்பத்தையும் லாரிக்குள் அள்ளி வீசியது. பிரெஞ்சு அரசுக்கு எதிராக கலகம் செய்தார் என்பது அந்த ஆசிரயர் மீதான குற்றச்சாட்டு. கடைசியாக அந்த ஆசிரியரின் ஒரு மகன் மட்டும் லாரிக்கு வெளியில் நின்று கொண்டிருந்தான். உயராமாக மிகவும் மெலிந்து காணப்பட்ட பரிதாபத்திற்குரிய தோற்றம் கொண்ட சிறுவன் அவன்.
" தானே சாவப்போற புழுவை நாம ஏண்டா அடிச்சு கொல்லனும், இவனை ஏத்த, உள்ள வேற இடம் இல்லை" என்று ஏளனம் செய்து விட்டு போலீசார் லாரியில் ஏறிக்கொண்டு ஊரை விட்டு வெளியேறி இருளில் மறைந்தனர். அந்த சிறுவன் அத்தோடு அவன் குடும்பத்தை மீண்டும் காணவில்லை.
கப்பல் ஒன்றில் உதவியாளனாக சேர்ந்து நாட்டை விட்டு வெளியேறினான். தன் தாய் நாட்டின் நலனை குறித்தும் தன்னை போலவே பலர் தொலைத்துவிட்ட குடும்பங்களை குறித்தும் சிந்திக்கலானான்.
பிரான்ஸ் தனக்கு தோதானவர்களை வியட்நாம் அரசில் அமர்த்தி விட்டு அவர்களை வைத்து பொம்மலாட்ட அரசியல் நடத்திக் கொண்டு இருந்தது. அதை எதிர்த்துப் போரிட்ட கொரில்லாப் படைக்கு தகவல்களைக் கொண்டு சேர்கிற வேலையைத்தான் சிறுவனாக இருந்த ஹோசிமின் செய்தார். உயிருக்கே ஆபத்தான இந்த வேலையச் செய்யும் போது நாட்டின் விடுதலைக்காக ஏதேனும் செய்ய வேண்டும் என்ற அழுத்தமான விதை இவர் மனதில் இருந்தது மட்டும் நிச்சயம். இளைஞனானதும் அவர் பிரான்ஸை எதிர்த்து போராட்டங்கள் நடத்தினார். பிரான்ஸ் அரசாங்கத்தோட சர்வ வல்லமைக்கு முன்னாள் ஒன்றும் செய்ய முடியவில்லை. பிறகு பிரான்ஸுக்கே போய், பாரிசில் ஒரு தபால் நிலையத்தில் வேலை பார்த்துக் கொண்டே பிரெஞ்சுப் புரட்சிய எப்படி சாதித்தார்கள் என்பதில் இருந்து பிரான்ஸ் பற்றிய பல தகவல்களை சேகரித்தார்.
வியட்நாமுக்கு அவர் திரும்ப வந்த போது. 1940ம் ஆண்டு. அப்பொழுது பிரான்ஸ் இடம் இருந்து வியட்நாமை ஜப்பான் கைப்பற்றியது. பிரான்சின் கொடுமையில் இருந்து விடுபட்டால் சரி என்று வியட்நாம் மக்கள் ஜப்பானியர்களுக்கு வரவேற்பு கொடுத்தார்கள். ‘‘எந்த நாட்டின் ஆதிக்கத்தோட கீழ இருந்தாலும் அடிமைகள் அடிமைகள் தானே... அதனால் இவர்களை விரட்டியடிச்சு தனது தேசத்தை சுகந்திர நாடாக மாற்ற முற்பட்டார் ஹோசி மின். மக்களிடம் போராட்ட உத்வேகத்தை ஏற்படுத்தினார் ஹோசி மின். இதனை பொறுத்துக் கொள்ளாத ஜப்பான் இவரை ஒடுக்க உடனடி நடவடிக்கைகளில் இறங்கியது. வியட்நாமில் அப்போது இருந்த அடர்ந்த காடுகள் ஹோசி மின்னுக்குப் புகலிடம் தந்து காப்பாற்றின. அந்தக் காட்டுக்குள் இருந்து கொண்டே ஒரு பெரும் கொரில்லாப் படையை உருவாக்கினார் ஹோ சி மின்.
1945ம் வருஷத்தில் ஜப்பான் மீது அமெரிக்க வீசிய அணுகுண்டுகள் ஜப்பானை அலற வைத்தது. இதனைப் பயன் படுத்திக் கொண்ட ஹோசி மின் ஜப்பானை முழுமையாக தனது கொரில்லாப் படையைப் பயன்படுத்தி நாட்டை விட்டே விரட்டி அடித்தார். பிறகு பிரான்ஸ் தேவை இல்லாமல் மீண்டும் யுத்தத்தில் இறங்கியது. பிரான்சுக்கும் ஒரு பாடத்தை கற்பித்தார் ஹோசி மின்.
அன்று தவறுதலாக மதிப்பிடபட்ட அந்த சிறுவன் தான் பின்னாளில் பிரெஞ்சு படைகளையும் பின்பு ஜப்பானிய படைகளையும் எதிர்கொண்டு வியட்நாமில் மன்னர் குடும்பத்தை துரத்தியடித்துவிட்டு மக்கள் ஆட்சியை நிறுவிய ஹோ சி மின். இத்தோடு மட்டும் நின்றுவிடவில்லை அவரின் போராட்டம். இரண்டாம் உலகப்போர் முடிந்திருந்த காலம் அது. துரத்தி அடிக்கப்பட்ட மன்னன் பிரெஞ்சு, பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் முறையிட இங்கிலாந்து அரச குடும்பம் இந்த விவகாரத்தை புதிய வல்லரசான அமெரிக்காவிடம் கொண்டு சென்றது.
பிரான்ஸ் ஹோ சி மின்-னை கம்யூனிஸ்ட் என்று அமெரிக்காவிடம் கூறி. அமெரிக்காவை மத்தியஸ்த்தம் செய்ய அழைத்தது. எப்போதுமே, யாராவது மத்தியஸ்தம் செய்ய நம்மை அழைக்க மாட்டார்களா என்று நாக்கை தொங்கப் போட்டு அலையும் அமெரிக்கா. பிரான்சின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது. தான் புதிதாக தயார் செய்த ஆயுதங்களை சோதிக்க அமெரிக்காவுக்கு ஒரு சோதனை களமும் தேவைப்பட்ட காரணத்தால், 1965 இல் அது வியட்நாம் மீது அனாவசியமாக போரைத் தொடர்ந்தது.
தோல்வியே காணாத அமெரிக்கா முதன் முதலாக இப்போரில் தோல்வியை ருசித்தது. ஹோ சி மின்னால் பயிற்சி அளிக்கப்பட்ட வியட்நாமின் கொரில்லாப் படைகளால் அமெரிக்கப் படைகள் சிதறுண்டு போனது. பொறுக்க முடியாத அமெரிக்கா ‘நேப்பாம்’ என்கிற ஒரு கொடுமையான குண்டை வியட்நாம் மீது வீச ஒரு கிராமமே பற்றி எரிந்தது. அதில் தன் உறவுகளை இழந்த ஒரு சிறுமி, ஆடைகளை கழற்றி விட்டு நிர்வாணமாக கதறிக் கொண்டே ஓடி வந்த காட்சியும் அந்தச் சிறமியின் கதறலும் பார்த்தவர்கள் அனைவரது மனதையும் உருக்கியது. உலக நாடுகள், பொதுமக்கள் என அனைவரும் அமெரிக்கர்களுக்கு எதிராகத் திரும்பினார்கள். அத்துடன் நிற்கவில்லை, இந்தப் போராட்டத்தில் புத்த பிட்சுகளும் கலந்து கொண்டனர்.
புத்த பிக்குகள் அமைதியாகப் பெட்ரோலை ஊற்றிக் கொள்வார்கள். ஒரே ஒரு ஒற்றைத் தீக்குட்சியால் தங்களது உடலை பற்ற வைத்துக் கொள்வார்கள். எந்த சப்தமும் இல்லாமல் இறந்து போவார்கள். இதனை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பிய போது அமெரிக்க மக்களே, (வியட்நாம் போரில் அமெரிக்கா அத்துமீறியதைக் கண்டித்து) தன் சொந்த நாட்டுக்கு எதிராகவே குரல் கொடுத்தனர். அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் என்ன செய்வது என்று அறியாது கையை பிசைந்தார் என்றாலும் , அமெரிக்கா தன்னை யாரும் அசைக்க முடியாது என்ற திமிருடன் வரைபடத்தில் தென் வியட்நாம் என்ற புதிய நாட்டை உருவாக்கியது, தன் பெரும் இராணுவத்தையும் அனுப்பியது.
அந்நிலையில், குழந்தையாக தவழ்ந்து கொண்டிருந்த வியட்நாம் பயந்துவிடவில்லை. ஹோ சி மின் தலைமையில் மக்கள் அணி திரண்டனர். அமெரிக்கா ஆக்கிரிமிப்பில் இருந்த தென் வியாட்நாமில் மக்கள் ஹோ சி மின் வழிகாட்ட கொரில்லா போராளிகளாக மாறினர். பகலில் வயலில் வேலை செய்யும் விவசாயி இரவில் ஆயுதம் ஏந்தினான், பகலில் பிள்ளைக்கு பால் கொடுத்த தாய் இரவில் வெடிகுண்டுகளோடு அமெரிக்க இராணுவத்தோடு போரிட்டாள். வியட்நாமியர்கள் அசராமல் அமெரிக்க ராணுவத்தை கொரிலா முறையில் நய்யப் புடைத்தனர். உலகையே திரும்பிப்பார்க்க வைத்தது வியட்நாம் போர். போரின் போது வியட்நாமில் சுமார் 8 மில்லியன் டன் வெடிகுண்டுகளை வீசியது அமெரிக்கா இது ஒட்டு மொத்தமாக இரண்டாம் உலகப்போரில் வீசப்பட்ட குண்டுகளை விட மூன்று மடங்கு அதிகமாகும். அன்றைய வியட்நாமின் மக்கள்தொகையுடன் ஒப்பிட்டால் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் 300 டன் வெடி குண்டுகள் அமெரிக்காவால் வீசப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அன்று ஏளனமாக எண்ணப்பட்ட அந்த சிறுவன் தான், பின்னாளில் வளர்ந்து தன்னை யாராலும் தோற்கடிக்க முடியாது என்று மார்தட்டிக்கொண்ட (இன்றும் மார்தட்டிக் கொண்டிருக்கிற) அமெரிக்கப் படைகளை மண்ணை கவ்வ செய்தவன். பெரும் சேதங்களுடன் அமெரிக்கா போரில் தோற்று வெளியேறியது. வியட்நாம் ஒரே நாடாக உலக வரைபடத்தில் இன்று கம்பீரமாய் காட்சியளிக்கிறது. ஆனால் ,அப்போது அதனைப் பார்க்க ஹோ சி மின் உயிருடன் இல்லை. ஆனால், அவர் வியட்நாம் மக்களிடம் ஏற்படுத்திய போர் குணத்தின் தாக்கம், ஊட்டிய வீரம் அனைத்தும் இன்னும் கூட வியட்நாம் மக்களிடம் காணப்படுகிறது.
தெற்கு வியட்நாமின் தலைநகராக அமெரிக்காவால் அறிவிக்கப்பட்ட "சைகான்" அந்தப் புரட்சியாளனின் பெயரை எடுத்துக் கொண்டு வரைபடத்தில் "ஹோ சி மின்" நகரம் ஆனது.
