நெப்போலியன் - 2

நெப்போலியன் - 2

bookmark

நெப்போலியன் வியத்தகு விரைவுடன் உயர் அதிகாரத்தைப் பெற்றார். ஆகஸ்ட் 1793 இல் தூலோன் முற்றுகைக்கு முன் அவர் யாருக்கும் தெரியாத, ஃபிரெஞ்சு குடிமகன் என்று கூட சொல்ல முடியாத, 24 வயதுள்ள ஒரு கீழ் அதிகாரியாகவே இருந்தார். 6 ஆண்டுக்குள்ளாக 30 வயதுள்ள அவர் ஃபிரான்சின் ஈடற்ற தலைவரானார். அப்பதவியில் 14 ஆண்டுகளாக இருந்தார்.

நெப்போலியன் ஆட்சியிலிருந்தபோது ஃபிரான்சின் ஆட்சித் துறையையும் சட்ட முறையையும் பெரிதும் திருத்தியமைத்தார். எடுத்துக்காட்டாக, அவர் நிதி அமைப்பையும், நீதித் துறையையும் சீர் திருத்தினார். ஃபிரான்சின் வங்கியையும், ஃபிரெஞ்சுப் பல்கலைக் கழகத்தையும் நிறுவினார். ஃபிரெஞ்சு ஆட்சித் துறையை ஒழுங்குப்படுத்தினார். இம் மாற்றங்கள், ஃபிரான்சின் முக்கிய நிலையான விளைவுகளை ஏற்படுத்திய போதிலும், உலகைப் பெரிதும் பாதிக்கவில்லை.

நெப்போலியன் செய்த சீர்திருத்தங்கள் ஃபிரான்சின் எல்லைகளையும் கடந்து பெரும் விளைவுகளை ஏற்படுத்தியது. அதில் ஒன்று தான் நெப்போலியனின் சட்டத் தொகுப்பு எனப்படும் புகழ்மிகு ஃபிரெஞ்சு உரிமையியல் சட்டத் தொகுப்பு. பல வகைகளில் அச்சட்டத் தொகுப்பில் ஃபிரெஞ்சுப் புரட்சியின் குறிக்கோள்கள் பொதிந்திருந்தன. எடுத்துக்காட்டாக, அச்சட்டத் தொகுப்பின்படி பிறப்பின் அடிப்படையில் எவர்க்கும் சிறப்புரிமைகள் இல்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமம். ஆயினும் இத்தொகுப்பு பழைய ஃபிரெஞ்சு சட்டங்களையும் வழக்கங்களையும் ஓரளவு சார்ந்திருந்ததால் ஃபிரெஞ்சு மக்களும் வழக்கறிஞர்களும் அதை ஏற்கவில்லை. பொதுவாக அது மிதமானதாகும். நன்கு தொகுக்கப் பெற்றதாகும். சுருக்கமாகவும், மிகத் தெளிவாகவும் எழுதப் பெற்றதாகவும் இருந்தது. ஆகவே, அச்சட்டத் தொகுப்பு ஃபிரான்சில் நிலைத்து நின்றது. மட்டுமல்லாமல், ஓரளவு மாற்றங்களுடன் பல நாடுகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. (இன்றைய ஃபிரெஞ்சு உரிமையியல் சட்டத் தொகுப்பு நெப்போலியன் சட்டத் தொகுப்பைப் போன்றேயுள்ளது.)

நெப்போலியன் எப்போதுமே தாம் ஃபிரெஞ்சுப் புரட்சியின் பாதுகாவலரென்று வலியுறுத்தி வந்தார். ஆயினும் 1804 இல் அவர் தம்மைத் தாமே ஃபிரான்சின் பேரரசராக்கிக் கொண்டார். மேலும் சகோதரர் மூவரை ஐரோப்பிய அரசுகளின் அரியணையில் அமர்த்தினார். இச்செயல்களைக் கண்டு ஃபிரெஞ்சுக் குடியரசு வாதிகள் வெகுண்டனர். அவை ஃபிரெஞ்சுப் புரட்சியின் குறிக்கோள்களையே சிதைத்து விட்டதாக அவர்கள் கருதினர். ஆயினும் நெப்போலியனின் உண்மையான இடர்ப்பாடுகள் அயல்நாட்டுப் போர்களினாலேயே எழுந்தன.

நெப்போலியன் 1802 இல் ஏமியன்சில் இங்கிலாந்துடன் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டார். அது பத்தாண்டுகளாகத் தொடர்ந்து நிகழ்ந்துவந்த போர்களுக்குப் பிறகு ஃபிரான்சுக்கு ஓய்வளித்தது. ஆயினும் அடுத்த ஆண்டே அவ்வுடன்படிக்கை முறிந்தது. இங்கிலாந்துடனும் அதன் நட்பு நாடுகளுடனும் நீண்டகாலப் போர் தொடங்கியது. நெப்போலியனின் படைகள் நிலத்தில் வெற்றிகளைக் குவித்தப் போதிலும், இங்கிலாந்தை தோற்கடிப்பதற்கு அதன் கப்பற்படையை முறியடிக்க வேண்டியிருந்தது. ஆனால் 1805 இல் ட்ராஃபால்கர் போரில் ஆங்கிலேய கப்பற்படை மாபெரும் வெற்றி பெற்றது. ஆகவே, இங்கிலாந்தின் கடன் வலிமை குலையவில்லை. ட்ராஃபால்கர் போருக்கு ஆறு வாரங்கள் கழித்து நெப்போலியன் (ஆஸ்டர்லிட்ஸில் ஆஸ்திரிய ரஷ்யப் படைகளை முறியடித்து) மாபெரும் வெற்றி பெற்ற போதிலும், கடற்போரில் அவர் அடைந்த தோல்விக்கு அதனால் ஈடுசெய்ய இயலவில்லை.

1808 இல் நெப்போலியன் ஃபிரான்சை ஒரு நீண்ட, பயனற்ற போரில் மூடத்தனமாக ஈடுபடுத்தினார். அப்போரில் ஃபிரெஞ்சுப் படைகள் ஐபீரியத் தீபகற்பத்தில் நீண்டகாலமாக அழுந்திக் கிடந்தன. ஆயினும், நெப்போலியனின் மாபெருந் தவறு அவரது ரஷ்யப் படையெடுப்பு, 1807 இல் நெப்போலியன் ரஷ்ய மன்னரைச் சந்தித்தார். டில்சிட் உடன்படிக்கையின்படி இருவரும் அணையா நட்புறவு கொள்ள இசைந்தனர். ஆனால் அந்நட்புறவு நாளடைவில் நலிவுற்றது.