நெப்போலியன் - 3

நெப்போலியன் - 3

bookmark

ஜூன் 1812 இல் நெப்போலியன் தமது பெரும்படையுடன் ரஷ்யாவினுள் நுழைந்தார். அதன் விளைவு அனைவர்க்கும் தெரிந்தவையே, ரஷ்யப் படைகள் நெப்போலியனுடன் நேரில் போரிடுவதைத் தவிர்த்தன. ஆகவே நெப்போலியன் விரைவாக முன்னேற முடிந்தது. செப்டம்பரில் அவர் மாஸ்கோவைக் கைப்பற்றினார். ஆயினும் ரஷ்யர் நகரைக் கொளுத்தி விட்டனர். அதன் பெரும் பகுதி அழிந்து விட்டது. 5 வாரங்கள் மாஸ்கோவில் தங்கிவிட்டு ரஷ்யர்கள் பணிந்து அமைதி வேண்டுவார்களென்று வீணாக நம்பி, இறுதியில் நெப்போலியன் பின்வாங்கத் தீர்மானித்தார். ஆனால், அதற்குள்ளாகக் காலம் கடந்து விட்டது. ரஷ்யப் படைகளின் தாக்குதல்களும், ரஷ்யாவின் குளிர்காலத்தின் கடுமையும், ஃபிரெஞ்சு படைகளின் உணவுப் பொருள் பற்றாக்குறையும் ஒன்று சேர்ந்து பின்வாங்கிய ஃபிரெஞ்சு படைகள் நிலை குலைந்து ஓடச் செய்தன. நெப்போலியன் பெரும்படையில் பத்தில் ஒரு பகுதியினரே ரஷ்யாவிலிருந்து உயிருடன் வெளியேறினர்.

ஆஸ்திரியா, பிரஷ்யா போன்ற பிற ஐரோப்பிய நாடுகள் ஃபிரெஞ்சு ஆதிக்கத்தைத் தகர்த்தெறிய அதுவே தருணமென்பதை உணர்ந்தன. அவை ஒன்று சேர்ந்து நெப்போலியனை எதிர்த்தன. அக்டோபர் 1813 இல் லீப்சிக் போரில் நெப்போலியன் மற்றொரு மாபெரும் தோல்வியைத் தழுவினார். அடுத்த ஆண்டு அவர் அரியணை துறந்தார். இத்தாலியக் கரைக்கப்பாலுள்ள சிறிய எல்பா தீவுக்கு அவர் கடத்தப்பட்டார்.

1815 இல் நெப்போலியன் எல்பாவிலிருந்து தப்பி, ஃபிரான்ஸ் திரும்பினார். அங்கு மக்கள் அவரை வரவேற்று மீண்டும் ஆட்சியில் அமர்த்தினர். ஆனால், பிற ஐரோப்பிய அரசுகள் உடனே அவர் மீது போர் தொடுத்தன. மீண்டும் ஆட்சிக்கு வந்த நூறு நாட்களுக்குப் பிறகு வாட்டர்லூ போரில் இறுதியாக முறியடிக்கப்பட்டார். வாட்டர்லூ போருக்குப் பிறகு ஆங்கிலேயர் அவரை தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலிலுள்ள செயின்ட் ஹெலினா எனும் சிறிய தீவில் சிறைப்படுத்தினர். அங்கு தான் அவர் தனது 51ஆம் வயதில் மரணம் அடைந்தார் .

நெப்போலியன் பற்றிய மதிப்பீடு : நெடு நாட்களாகவே நெப்போலியனின் மரணத்தின் காரணம் அறுதியிடப்படாமல் இருந்தது. ஆங்கிலேயர்கள் ஆர்செனிக் நச்சு தந்து நெப்போலியனைக் கொன்றிருக்கலாம் என்பது போன்று இருந்த பழைய தோற்றப்பாடுகள் யாவும் தற்செயல் நிகழ்வுகள் எனவும் நெப்போலியன் இறக்கவும் அவனின் வம்சமே இறக்கவும் காரணம் பரம்பரையாக இருந்து வந்த இரைப்பைப் புற்று நோயே (stomach cancer) என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. நெப்போலியனின் புகைப்படங்கள் அனைத்திலும் அவன் தன் வலக்கையைச் சட்டைக்குள் வைத்திருக்கக் காரணம் வயிற்று வலியால் தான் எனவும் நம்பப்படுகிறது.

நெப்போலியன் படைத்துறை வாழ்க்கை வியத்தகு புதிராக இருக்கின்றது. படைத்திறன் சூழ்ச்சியில் அவரது அறிவு மிளிர்கின்றது. அதை மட்டும் வைத்து அவரை மதிப்பிடுவோமானால் அவரை எக்காலத்துக்குமுரிய மிக உயர்ந்த படைத்தளபதியாகக் கருதலாம். ஆனால் போர்த்திற நடவடிக்கைகளில் அவர் நம்ப முடியாத பெருந்தவறுகளைச் செய்தார். எகிப்து, ரஷ்யா ஆகிய நாடுகளில் மீது அவர் படையெடுத்ததை எடுத்துக்காட்டாகக் கூறலாம். அவருடைய போர் நடவடிக்கைத் தவறுகள் எவ்வளவு அதிர்ச்சி தருபவையாக இருக்கின்றனவென்றால், நெப்போலியனுக்குப் படைத்துறைத் தலைவர்களுள் முதலிடம் தர இயலாது. இந்த இரண்டாம் கருத்து தவறானதா? இல்லை அழிவு தரும் தவறுகளைத் தவிர்க்கும் திறமை ஒரு படைத் தளபதியில் சிறப்புக்கு அளவுகோல், மகா அலெக்சாந்தர் ஜெங்கிஸ்கான், தாமர்லேன் போன்ற பெரும் தளபதிகளைப் பற்றி இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. அவர்களுடைய படைகள் ஒருபோதும் தோல்வியடையவில்லை. நெப்போலியன் இறுதியில் தோற்கடிக்கப்பட்டதால், அவருடைய அயல்நாட்டு வெற்றிகள் எல்லாம் நிலை பெறவில்லை. 1789 இல் ஃபிரெஞ்சுப் புரட்சி தொடங்கும் வேளையில் ஃபிரான்ஸ் பெற்றிருந்த நிலப்பரப்பைவிட, 1815 இல் நெப்போலியன் இறுதியாகத் தோல்வியுற்றபோது குறைவான நிலப்பரப்பைப் பெற்றிருந்தது.

நெப்போலியன் ஒரு தன்னல வெறியர். அவரைப் பலர் ஹிட்லருக்கு ஒப்பிடுவர். ஆனால், அவ்விருவருக்கும் பெரும் வேறுபாடுகள் உண்டு. ஹிட்லர் ஒரு கொடிய கொள்கையினால் உந்தப் பெற்றவர். ஆனால், நெப்போலியன் ஒரு பேராவலுள்ள சந்தர்ப்பவாதி. பயங்கரப் படுகொலைகள் செய்வதில் அவருக்குத் தனி ஈடுபாடு கிடையாது. நெப்போலியன் ஆட்சியில் ஹிட்லரின் கொடிய சிறைமுகாம்கள் போன்றவை இல்லை.

நெப்போலியனின் பெரும் புகழின் காரணமாக அவருடைய செல்வாக்கை அளவுக்கு அதிகமாக மதிப்பிடக் கூடும். அவரது ஆட்சியின் குறுகிய கால விளைவுகள் உண்மையிலேயே மிகுதியானவை. ஒருவேளை அவை அலெக்சாந்தர் படையெடுப்பின் விளைவுகளைவிட அதிகமாக இருக்கலாம். ஆனால், அவை ஹிட்லர் ஆட்சியின் விளைவுகளைவிடக் குறைவு. (நெப்போலியனின் போர்களின் போது 5,00,000 ஃபிரெஞ்சுப் போர் வீரர்கள் மடிந்தனர் என்றும், 2 ஆம் உலகப் போரின் போது 80,00,000 ஜெர்மானியர்கள் மடிந்தனர் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது) எவ்வகையில் பார்த்தாலும் ஹிட்லரைவிட நெப்போலியன் தம் காலத்தில் வாழ்ந்தோரின் உயிர்களைக் குறைவாகவே குலைத்தார்.

நீண்டகால விளைவுகளைப் பார்க்கும்போது நெப்போலியன் அலெக்சாந்தரைவிட குறைந்த முக்கியத்துவம் பெற்றுள்ளபோதிலும், ஹிட்லரைவிட அதிக முக்கியத்துவம் பெற்றிருக்கிறார். நெப்போலியன் ஃபிரான்சின் விரிவான ஆட்சித்துறை மாற்றங்களைச் செய்தார். ஆயினும் ஃபிரெஞ்சு மக்கள் உலக மக்கள் தொகையில் எழுபதில் ஒரு பகுதிதான். அந்த ஆட்சித் துறை மாற்றங்களை நாம் சரியான நோக்கில் பார்க்க வேண்டும். கடந்த இரு நூற்றாண்டுகளில் நிகழ்ந்துள்ள தொழில்நுட்ப மாற்றங்களைவிட அவை ஃபிரெஞ்சு மக்களின் வாழ்க்கையைக் குறைவாகவே பாதித்துள்ளன.