நீர் விளையாட்டுப் படலம் - 1041
ஒருத்தி தன் தோழியின் கண் குறிப்புக்கொண்டு
பேசுதல்
1041.
தாழ நின்ற ததை மலர்க் கையினால்.
ஆழி மன் ஒருவன் உரைத்தான்; அது
வீழியின் கனிவாய் ஒரு மெல்லியல்.
தோழி கண்ணில். கடைக்கணிற் சொல்லினாள்.
ஆழி மன் ஒருவன் - ஆணைச் சக்கரம் செலுத்தவல்ல மன்னன்
ஒருவன்; தாழ நின்ற ததைமலர்க் கையினால் - மிக நீண்டு நின்ற
இதழ்கள் செறிந்த தாமரை மலர் போன்ற (தன்) கைகளினால்;
உரைத்தான் - (நாம் எங்கே; எப்போது மீண்டும் சந்திப்பது என்று)
சைகையால் கேட்டான்; வீழியின் கனிவாய் ஒரு மெல்லியல் - வீழிப்
பழம் போன்ற வாயினையுடைய மெல்லியலாள் ஒருத்தி; தோழி
கண்ணில் கடைக் கண்ணில் சொல்லினாள்-தோழியின் கண்மூலமாகக்
கடைக் கண் சாடையினால் (அவனுக்குப்) பதில் அறிவித்தாள்.
ஆடவனாகிய அவனைப் போலச் சைகையால் நேரடியாகப் பதில்
இறுத்தல். உயர் குடிப்பெண்மைக்குச் சிறப்பு அன்று ஆதலின். தோழி
கண்ணுக்கு இவள் கண்ணால் சொல்ல. அவள் அவனுக்குத் தன்
கடைக் கண்ணால் தெரிவித்தாள் என்க. காதல் உலகில். நயன
மொழியின் பெரும்பங்கு தெரிவித்தவாறு “சிறு நோக்கம் காமத்தின்
செம்பாகம் அன்று பெரிது” திருக். 1092) “பெண்ணினால்
பெண்மையுடைத்தென்ப கண்ணினால் காமநோய் சொல்லி இரவு”
(திருக். 1280) எனும் அருமைக் குறள்கள் ஒப்பிடத்தக்கன. “காதன்மை
கண்ணுளே அடக்கிக் கண் எனும். தூதினால் துணி பொருள்
உணர்த்தித் தான். தமர்க்கு. ஏதின்மை படக் கரந்திட்ட வாட்கண்
நோக்கு. ஓதநீர் அமுதமும் உலகும் விற்குமே” (சீவக. 1485) எனும்
திருத்தக்க தேவர் வாக்கும் சிந்திக்கற்பாலது. 28
