நகர் நீங்கு படலம் - 1851
இராமன் நிலை
இராமன் உளம் நெகிழ்தல்
1851.
உரைத்தபின், இராமன் ஒன்று
உரைக்க நேர்ந்திலன்;
வரைத் தடந் தோளினான்
வதனம் நோக்கினான்;
விரைத் தடந் தாமரைக்
கண்ணை மிக்க நீர்
நிரைத்து இடை இடை விழ,
நெடிது நிற்கின்றான்.
உரைத்தபின் - (இவ்வாறு இலக்குவன்) உரைத்த பிறகு; இராமன்-;
ஒன்று உரைக்க நேர்ந்திலன் - ஒரு வார்த்தையும் சொல்ல
முடியடாதவனாகி; வரைத் தடந்தோளினான் வதனம் - மலை போன்ற
அகன்ற தோள்களை உடைய இலக்குவனது முகத்தை நோக்கினான் -
பார்த்து; விரைத் தடந் தாமரைக் கண்ணை மிக்க நீர் - வரும்நீரானது;
நிரைந்து இடை இடை விழ - ஒழுங்காய் இடை இடையே விழும்படி;
நெடிது -நீண்ட நேரம்; நிற்கின்றான் - நிற்பவன் ஆனான்.
மறு மாற்றம் சொல்ல இயலாது இராமன் உடன்பட்டபடி. இலக்குவன்
முகம் பார்த்த அளவில்மனம் உருகிக் கண்ணீர் சொரியலானான் இராமன்.
இலக்குவன் பரிவும் உரமும் இராமனைஅசையாநிலைக்கு ஆளாக்கின. 156
