நகர் நீங்கு படலம் - 1852
வசிட்டன் வந்து வருந்துதல் (1852-1856)
வசிட்டன் வருதலும் சிந்தித்தலும்
1852.
அவ்வயின், அரசவை நின்றும் அன்பினன்
எவ்வம் இல் இருந் தவ முனிவன் எய்தினான்;
செவ்விய குமரரும் சென்னி தாழ்ந்தனர்;
கவ்வை அம் பெருங் கடல், முனியும் கால் வைத்தான்.
எவ்வம் இல் அருந்தவ முனிவன் - துன்பமற்ற அரிய தவத்தைச்
செய்த முனிவனாயவசிட்டன்; அரசவை நின்றும் - அரச சபை
மண்டபத்திலிருந்தும்; அன்பினன் -இராமனிடத்து அன்பை உடையனாய்;
அவ்வயின் - அச் சுமித்திரை மாளிகையின்கண்; எய்தினன் -
அடைந்தான்; செவ்விய குமரரும் - நேரிய மைந்தர்களாய
இராமலக்குவர்களும்; சென்னி தாழ்ந்தனர் - தலையால் வணங்கினார்கள்;
முனியும் - வசிட்டனும்; கவ்வை அம் பெருங்கடல் - துன்பம் என்னும்
பெரிய கடலில்; கால்வைத்தான் - இறங்கத் தொடங்கினான்.
துன்பம் ஏதும் எய்தாது அருந்தவம் முடித்தவன் அன்பினால்
இப்போது துன்பக் கடலில்கால்வைத்தான் என்றது ஒரு நயம். ‘அன்னமும்
துயர்க்கடல் அடி வைத்தாள் அரோ’ (2461.) என்றுபின்வருவதும்
காண்க. 157
