நகர் நீங்கு படலம் - 1840

bookmark

மரவுரி பெற்ற இலக்குவன் அன்னையை வணங்குதல்

1840.    

அன்னான், அவர் தந்தன,
     ஆதரத்தோடும் ஏந்தி,
இன்னா இடர் தீர்ந்து, “உடன்
     ஏகு” என, எம்பிராட்டி
சொன்னால், அதுவே துணை ஆம்’
     என, தூய நங்கை
பொன் ஆர் அடிமேல் பணிந்தான்;
     அவளும் புகன்றாள்;

     அன்னான் - அந்த இலக்குவன்;  அவர் தந்தன - அவ் ஏவல்
மகளிர் கொடுத்தனவாகிய மரவுரியை; ஆதரத்தோடும் ஏந்தி - அன்போடு
பெற்றுக்கொண்டு ;  ‘இன்னா இடர் தீர்ந்து - துன்பத் துயரம் நீங்கி;
உடன் ஏகு’  என - இலக்குவ! இராமனுடன் நீயும் துணையாக வனம்
செல்க என்று; எம்பிராட்டி சொன்னால் - என் தாய்சுமித்திரை
சொல்வாளாயின்;  அதுவே துணை ஆம்’ - அதுவே எனக்குப் பற்றுக்
கோடாகஆகும்;  என - என்று  நினைத்து;  ***தூய மனம்  உடைய
சுமித்திரையின்;  பொன் ஆர்அடி மேல் - பொன் போலப் பொலிந்த
பாதத்தின் மேல்;  பணிந்தான் -வணங்கினான்; அவளும்  புகன்றாள் -
அவளும் சில சொற்கள் கொன்னாள்;

     தாயின் உத்தரவு பெற்று இராமனுடன் செல்லும் ஆசையால் அவள்
வாயாலேயே முதலில் அச்சொல்வரவேண்டும் என எதிர்பார்த்துப்
பணிகிறான் இலக்குவன்.  மரவுரிமை ஏற்ற இலக்குவன்குறிப்பறிந்து தாயும்
அவனைப் பார்த்துச்  சொன்னாள்.                              145