நகர் நீங்கு படலம் - 1841

சுமித்திரை இலக்குவனுக்குச் சொல்லியது (1841-1842)
1841.
‘ஆகாதது அன்றால் உனக்கு -
அவ் மனம் இவ் அயோத்தி;
மா காதல் இராமன் நம்
மன்னவன்; வையம் ஈந்தும்
போகா உயிர்த் தாயர் நம்
பூங் குழல் சீதை - என்றே
ஏகாய்; இனி, இவ் வயின்
நிற்றலும் ஏதம்’ என்றாள்.
(இராமனுக்கு ஆகிய) அவ்வனம் - அந்தக் காடு; உனக்கு ஆகாதது
அன்றால் -நீ செல்லுதற்குத் தகாதது அன்று; இவ் அயோத்தி - இந்த
அயோத்தி மாநகர் போன்றதேஆகும்; மா காதல் இராமன் நம்
மன்னவன் - சிறந்த அன்பினை உடைய இராமனே (உனக்குஇனி) நம்
மன்னனாகிய தயரதன் ஆம்; நம் பூங்குழல் சீதை - நம்முடைய பூக்கள்
அணிந்தகூந்தலை உடைய சீதையே; வையம் ஈந்தும் - இராமன் பூமியைப்
பரதனுக்குக் கொடுத்துக்காடு செல்லத் துணிந்த பின்னும்; போகா உயிர்த்
தாயர் - போகாத உயிரையுடையதாய்மார்கள் ஆவர்; என்று - எனக்
கருதி; ஏகாய் - வனத்திற்கு இராமனுடன்செல்வாயாக; இனி இவ்வயின்
நிற்றலும் ஏதம்’ - இனிமேல் இங்கே நீ நின்றுதாமதிப்பதும் குற்றமாகும்;
என்றாள் -
‘இராமன் இருக்கும் இடம் அயோத்தி’ என்னும் உலக வழக்கையே
சுமித்திரை மகனுக்குக்கூறினாள். இராமனையும் சீதையையும் தந்தை
தாயாகவும், வனத்தை அயோத்தியாகவும் கருதி இங்குள்ளது போலவே
வனத்தில்இரு என்றாளாம். ‘என்றே’ ‘ஏ’ காரம் தேற்றம். 146