நகர் நீங்கு படலம் - 1818

இலக்குவன் விடை ((1818-1819))
1818.
‘மெய்யைச் சிதைவித்து, நின்மேல்
முறை நீத்த நெஞ்சம்
மையின் கரியாள் எதிர், நின்னை அம்
மௌலி சூட்டல்
செய்யக் கருதி, தடை செய்குநர்
தேவரேனும்,
துய்யைச் சுடு வெங் கனலின்
சுடுவான் துணிந்தேன்.
‘மெய்யைச் சிதைவித்து - சத்தியத்தை அழியச் செய்து; நின்மேல்
முறை- உன்னுடைய சிறப்பான அரசு முறைமையை; நீத்த- நீக்கின;
நெஞ்சம் மையின்கரியாள் எதிர் - மனத்தால் மை போலக் கரியவளான
கைகேயியின் எதிரே; நின்னை- உன்னை; அம் மௌலி சூட்டல்
செய்யக் கருதி - அந்த மகுடத்தை அணிந்து கொள்ளுதல்செய்ய
நினைத்து; தடை செய்குநர் தேவரேனும் -தடை செய்பவர்கள்
தேவராயினும்; துய்யைச் சுடு - பஞ்சை எரிக்கின்ற; வெங்கனலின்-கொடு நெருப்புப் போல; சுடுவான் - எரித்திட; துணிந்தேன்-
உறுதிசெய்தேன்.’
‘நின் மேல் முறை’ - ‘உன் மேல் உள்ள மகன் என்கின்ற அன்பு
முறைமையை’ என்றும்பொருள் உரைக்கலாம் - இது காறும் கைகேயியின்
அன்பு மகன் என இராமன் வளர்ந்ததை அவனும்அறிவான் ஆதலின்.
‘இமையோரை முனிந்திலாதாய்’ இன்று முனிவானேன் என்ற இராமன்
வினாவிற்கு; தடை செய்குநர் தேவரேனும்’ என்பது இலக்குவன் உரைத்த
பதில் எனக்கொள்ளின்; ‘இமையோரை’ என்னும் பாடம் வன்மை பெற
இதுவும் ஒரு சான்றாகும். 123