தாமஸ் ஆல்வா எடிசன் - 3

தாமஸ் ஆல்வா எடிசன் - 3

bookmark

கிராம போன் ஒலித்தட்டு ஆய்வில் வெற்றி பெற்ற எடிசன் அடுத்து, 1880 களில் திரைப்பட படப்பிடிப்புக் கருவி உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். எடிசன் நகரும் திரைப்பட படப்பிடிப்புக் கருவியை உருவாக்க, அதுவரை வெளிவந்த ஆய்வு முயற்சிகளையும், தன் கீழ் பணியாற்றும் நிபுணர்களின் ஆக்கங்களையும் பயன் படுத்திக் கொண்டார். முதல் நகரும் படம் இப்படித் தான் எடிசனின் முயற்ச்சியால் உருவானது. முதல் நகரும் படம் வெளிவரப் உதவியாக இருந்தவர், எடிசனுக்கு உதவியாளராகச் சேர்ந்த, W.K.L. டிக்ஸன் என்பவராவார். 1888 இல் எடிசன் முதலில் படைத்த திரைப்பட படப்பிடிப்புக் கருவி கினெட்டாஸ்கோப் [Kinetoscope]. ஆனால் படம் யாவும் அதில் சற்று மங்கலாகத்தான் தெரிந்தன.

இவ்வாறாக தனது பெயரில் சாதனை அளவான 1093 கண்டுபிடிப்புகளின் காப்புரிமைகளைப் பதிவு செய்த எடிசன், பெருமளவு கண்டுபிடிப்புக்களைச் செய்தவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். இவற்றுள் பெரும்பாலானவை இவரால் புதிதாக உருவாக்கப்பட்டவை அல்ல; முன்னைய உரிமங்களில் ஏற்படுத்திய சீரமைப்புக்களாகும். இவையும் பெரும்பாலும் இவரது பெருமளவிலான ஊழியர்களால் செய்யப்பட்டவை. இக்கண்டு பிடிப்புக்களுக்கான பெருமையில் மற்றவர்களுக்குரிய பங்கைக் கொடுக்காதமைக்காக எடிசன் அடிக்கடி விமர்சிக்கப்ப்ட்டார். இருந்தாலும், எடிசன் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் உரிமங்களைப் பெற்றார். எடிசன் நம்பிக்கை நிதியம் (Edison Trust) எனப் பொதுவாக அறியப்பட்ட, ஒன்பது முதன்மையான திரைப்படக் கலையகங்களின் கூட்டமைப்பான அசையும் பட உரிமக் நிறுவனம் (Motion Picture Patent Company) ஆரம்பித்தார்.

இவ்வாறெல்லாம் புகழ் பெற்ற அந்த ஆக்க மேதை தன் 84 ஆம் வயதில், 1931 அக்டோபர் 18 ஆம் தேதி நியூஜெர்சியில் உள்ள வெஸ்ட் ஆரஞ்ச் நகரில் காலமானார். அமெரிக்க ஜனாதிபதி ஹெர்பர்ட் ஹூவர் எடிசனின் உடல் அடக்கத்தின் போது அமெரிக்காவெங்கும் மின்விளக்குகளை, ஒரு நிமிடம் அணைக்கும்படி ஆணையிட்டிருந்தார். அக்டோபர் 21 ஆம் தேதி மாலை 9:59 மணிக்கு அவரது உடல் அடக்கமானது. அக்டோபர் 21 ஆம் தேதி மாலை நியூ யார்க்கில் 'சுதந்திர தேவி சிலையின்'(Statue of Liberty) கையில் இருந்த தீப்பந்தம் ஒளி இழந்தது! பிராட்வே விளக்குகள், வீதியில் பயணப் போக்கு விளக்குகளைத் தவிர மற்ற எல்லா விளக்குகளும் ஒளியிழந்தன. சிகாகோ, டென்வர் போன்ற முக்கியமான இடங்களிலும் விளக்குகள் அணைக்கப்பட்டன.