பிளாரன்ஸ் நைட்டிங்கேல் - 1

பிளாரன்ஸ் நைட்டிங்கேல் - 1

bookmark

எட்வர்ட் நைட்டிங்கேல் - பிரான்சஸ் ஸ்மித் தம்பதி இங்கிலாந்தில் செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தை சேர்ந்தவர்கள், அவர்கள் இத்தாலி நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பொழுது 12.05.1820–ம் ஆண்டு அவர்களுக்கு ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது. அக் குழந்தை ப்ளாரன்ஸ் நகரில் பிறக்கவே அந்த குழந்தைக்கு ப்ளாரன்ஸ் என்ற அந்த நகரத்தின் பெயரையே சூட்டினார்கள்.

பிளாரன்ஸ் வயது வந்த பெண்ணாக மாறிய போது அவளுக்குத் திருமணம் செய்ய பெற்றோர்களால் முடிவு செய்யப்பட போது. தனக்கு அன்பு செலுத்தவே விருப்பம் என்று கூறி, செவிலியர் சேவையைத் தன் பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக தேர்ந்தெடுத்தார். பிறகு, அப்பணியில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு நவீன தாதியியல் முறையை உருவாக்கி செவிலியர் பயிற்சிப் பள்ளியை பிளாரன்ஸ் நைட்டிங்கேல் தொடங்கினார். விளக்கேந்திய சீமாட்டி, கைவிளக்கேந்திய காரிகை (The Lady with the Lamp) என்று அழைக்கப்பட்டார். இவர் ஒரு எழுத்தாளரும், புள்ளியியலாளாரும் ஆவார்.

கிறிஸ்தவர் என்ற முறையில் தனக்கு இறைவனால் விதிக்கப்பட்ட பணியாக தாதியர் சேவையை அவர் உணர்ந்தார். 1837 ஆம் ஆண்டில் அவருக்கு ஏற்பட்ட இந்த உணர்வு அவரது வாழ்நாள் முழுதும் நீடித்தது. பெற்றோரின், குறிப்பாகத் தாயாரின் எதிர்ப்புக்கும், துன்பத்துக்கும் மத்தியில், தாதியர் சேவையில் ஈடுபடவேண்டும் என்னும் தனது முடிவை புளோரன்ஸ் 1845 ஆம் ஆண்டு அறிவித்தார். இவ் விடயத்தில் தொடர்ந்து தாதியர் சேவையில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டமை அச்சேவையில் இவரது பெருவிருப்பையும், அவரது காலத்தைய பெண்ணுக்குரிய எதிர்பார்ப்புகளை முறியடிப்பதாகவும் அடையாளம் காணப்படுகிறது. அக் காலத்தில் தாதியர் சேவை ஒரு மதிப்புள்ள பணியாகக் கருதப்படவில்லை. வறிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களே இப்பணியில் ஈடுபட்டு வந்தனர். தாதியர் சமையலாட்களாகவும் வேலை செய்யவேண்டி இருந்தது.

புளோரன்ஸ் வறியவர்கள் மீதும், இயலாதவர் மீதும் அக்கறை கொண்டிருந்தார். 1844 ஆம் ஆண்டு டிசம்பரில், இலண்டனிலிருந்த ஆதரவற்றோர் விடுதியொன்றில் வறியவர் ஒருவர் இறந்தது பெரும் பிரச்சினையாக உருவெடுத்தது. இதனைத் தொடர்ந்து புளோரன்ஸ், ஆதரவற்றோர் விடுதிகளில் மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக முன்னணியில் நின்று வாதாடினார். அக்காலத்தில் வறியோர் சட்டம் தொடர்பான சபையின் தலைவராக இருந்த சார்லஸ் வில்லியர்ஸ் என்பவரின் ஒத்துழைப்பையும் அவர் பெற்றுக்கொண்டார். இது வறியோர் சட்டத்தில் சீர்திருத்தம் கோருவதில் அவரை ஈடுபடுத்தியதுடன், மருத்துவ வசதிகளின் வழங்கலுக்கும் அப்பால் அவரது ஈடுபாட்டை விரிவாக்கியது.

1846 ஆம் ஆண்டில் ஜேர்மனி பயணத்தில் கண்ட கெய்சர்ஸ்வர்த் மருத்துவமனைக்குச் சென்றபோது அங்கு நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் கவனிப்பும் மருத்துவச் சேவையும் இவரை மிகவும் கவர்ந்தன.

தாதியர் சேவையில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதிலிருந்து திருமணம் தடை செய்யும் எனக் கருதி ரிச்சர்ட் மொங்க்டன் மில்ன்ஸ் எனும் அரசியல்வாதியுடனான தனது உறவை முறித்துக் கொண்டார். பின்னாளில், சிறந்த அரசியல் வாதியும், போர்ச் செயலராக்ப் பணியாற்றியவருமான சிட்னி ஹேர்பேர்ட் என்பவரை ரோமில் சந்தித்து அவர்பால் ஈர்க்கப்பட்டார். சிட்னி ஹேர்பேர்ட் ஏற்கெனவே மணமானவர். எனினும் இருவரும் வாழ்நாள் முழுதும் நெருங்கிய நண்பர்களாகத் திகழ்ந்தனர். கிரீமியாவில் நைட்டிங்கேல் ஆற்றிய பணிகளுக்கும், பொதுவாக அவரது துறையில் ஆற்றிய பணிகளுக்கும், ஹேர்பேட் வசதிகள் செய்து கொடுத்ததுடன் ஊக்கமும் கொடுத்து வந்தார். புளோரன்சும் ஹேர்பேட்டின் அரசியல் பணிகளுக்கு ஆலோசனை வழங்கி வந்தார். 1851 ஆம் ஆண்டு 4 மாதங்கள் கெய்சர்ஸ்வர்த் மருத்துவமனையில் பெற்ற பயிற்சி மூலம் தாதியியல் பால் இவரது கவனம் தீவிரமடைந்தது.

ரஷ்யப் பேரரசிற்கும், பிரான்ஸ், ஐக்கிய இராச்சிய மற்றும் ஒட்டோமான் பேரசுப் படைக் கூட்டணிக்குமிடையே 1854 - 1856ம் ஆண்டு நடந்த கிரிமியன் போரில் தனது மருத்துவப் பங்களிப்பின் மூலம் புளோரன்ஸ் நைட்டிங்கேல் புகழ் பெற்றவரானார்.

கிரீமியப் போரில் காயமடைந்த வீரர்களுடைய நிலைமை மோசமாக இருப்பது குறித்த அறிக்கைகள் போர் முனையில் இருந்து பிரித்தானியாவுக்குக் கசிந்தபோது புளோரன்ஸ் அது குறித்துத் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கினார். புளோரன்ஸ் நைட்டிங்கேலும் அவரது சிற்றன்னை உட்பட அவரால் பயிற்றுவிக்கப்பட்ட 38 தாதியரும் துருக்கியில் இருந்த ஐக்கிய இராச்சியத்தின் முதன்மை முகாமிற்கு நவம்பர் 1854ம் ஆண்டு சென்றடைந்தனர். நவம்பர் தொடக்கத்தில் நைட்டிங்கேல் ஸ்கட்டாரியில் இருந்த செலிமியே முகாமுக்குச் சென்றார். அங்கே நிர்வாக அலட்சியத்தினால், போரிற் காயமுற்ற வீரர்கள் அதிக பணியால் களைத்திருந்த மருத்துவப் பணியாளரால் சரிவரக் கவனிக்கப் படாமையைக் கண்டார்கள். மருந்துத் தட்டுப்பாடும் சுகாதாரக் குறைவும் உயிராபத்து விளைவுக்கும் தொற்றுக்களும் அம்முகாமில் காணப்பட்டன. நோயாளருக்கான உணவைத் தயாரிப்பதற்கான வசதிகளும் இருக்கவில்லை.

புளோரன்ஸ் சூழல் தூய்மையாக இல்லாததாலேயே நோய்கள் பரவுகின்றன என்னும் கொள்கையுடையவர். அதன் சார்பில் தீவிரமாக வாதடியும் வந்தார். இதனால், புளோரன்ஸ் நைட்டிங்கேலும் அவரது தாதியர் குழுவும்முகாமின் மருத்துவமனையையும், கருவிகளையும் முழுமையாகச் சுத்தப்படுத்தியதுடன், நோயாளர் கவனிப்பையும் ஒழுங்குபடுத்தினர். எனினும் இவர் காலத்தில் ஸ்கட்டாரியில், இறப்பு வீதம் குறியவில்லை. மாறாக, அதிகரித்துவந்தது. அப்பகுதியிலுள்ள மருத்துவமனைகளுடன் ஒப்பிடும்போது அங்கேயே கூடுதலான இறப்புக்கள் நிகழ்ந்தன. அவருடைய முதல் மாரிகாலத்தின்போது 4,077 வீரர்கள் அங்கே இறந்தனர். போர்க் காயங்களினால் இறந்ததிலும் 10 மடங்கு கூடுதலானோர், டைபாய்ட், வாந்திபேதி (cholera), வயிற்றோட்டம் (dysentery) ஆகிய நோய்களுக்குப் பலியாயினர். அளவுக்கதிகமான இட நெருக்கடி, குறைபாடுள்ள கழிவு வாய்க்கால்கள், காற்றோட்டம் இன்மை ஆகியவற்றால், முகாமின் தற்காலிக மருத்துவ மனை நோயாளருக்கு உயிராபத்தை விளைவித்தது. இந் நிலை காரணமாக, 1855 ஆம் ஆண்டில் ஒரு சுகாதாரக் குழு பிரித்தானிய அரசினால் ஸ்கட்டாரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இது புளோரன்சும் அவரது தாதியரும் வந்து 6 மாதத்துக்குப் பின்னராகும். இவர்கள் வாய்க்கால்களைச் சுத்தப்படுத்தி, காற்றோட்டத்தையும் மேம்படுத்தினர். இதனால் இறப்புவீதம் பெருமளவு குறைந்தது.

மருந்துத் தட்டுப்பாடும் குறையூட்டமும் அதிக பணியுமே நோயாளிகளான வீரர்களின் இறப்புக்குக் காரணமென புளோரன்ஸ் நைட்டிங்கேல் கருதினார். படைவீரரின் உடல்நிலை குறித்து அரசாணைக் குழுவிற்கு அறிக்கை சமர்ப்பிக்கும் போது வாழ்க்கைத் தராதரம் மற்றும் சுகாதாரமான சூழல் கீழ்மட்டத்திலிருப்பதுவும் முக்கிய காரணமெனக் கருத ஆரம்பித்தார். இந்தப் போர் அனுபவம் அவரது பிற்கால வாழ்வில் சுகாதாரமான சூழலைப் பேணலின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைப்பதில் பெரும்பங்கை வகித்தது.