தந்தை பெரியார் - 1

தந்தை பெரியார் - 1

bookmark

ஈரோடு வெங்கட்ட இராமசாமி நாயக்கர் எனும் இயற்பெயரைக் கொண்ட இவர் செப்டம்பர் 17, 1879ல் தமிழ்நாட்டிலுள்ள, ஈரோட்டில் பிறந்தார் .இவரின் குடும்பத்தினர் தெலுங்கு மொழியை தாய்மொழியாக உடையவர்கள் ஆவர். இவரின் தந்தை வெங்கட்ட நாயக்கர் நாயுடு மிக வசதியான வணிகப் பின்னணியைக் கொண்டவர். இவரின் தாயார் முத்தம்மாள் என்ற இயற்பெயர் கொண்ட சின்னத்தாயம்மாள் ஆவார். இவரின் உடன் பிறந்தோர் கிருஷ்ணசாமி, கண்ணம்மா மற்றும் பொன்னுத்தாயி ஆவர்.

1929, இல் இராமசாமி சுயமரியாதையை வலியுறுத்தும் விதமாக, செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில் , தன் பெயரின் பின்வரும் சாதிப்பெயரை நீக்கி, அனைவரின் பெயருக்குப் பின்னால் வரும் சாதிப் பெயரை நீக்க முன்னுதாரணமாக விளங்கினார். இராமசாமி மூன்று திராவிட மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளைப் பேசும் ஆற்றல் பெற்றவராவார். அவரின் தாய்மொழி தெலுங்கு ஆகும். பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை, மட்டுமே கல்வி பயின்றார். அதன் பின் கல்வியில் நாட்டமில்லாமையால் தந்தையின் வணிகத்தொழிலை 12 ஆம் வயது முதல் மேற்கொண்டார். தன் தந்தையின் விருந்தோம்பலில் திளைத்திருந்த வைணவப் பண்டிதர் ஒருவரின் அறிவுரைகளைக் (உபதேசங்களைக்) கேட்கும்படி தன் தந்தையால் இராமசாமி பணிக்கப்பட்டிருந்தார். அதன்படி அப்பண்டிதர் அளிக்கும் அறிவுரைகளை மிக ஆர்வமுடன் கேட்டு அவரின் இந்து புராண இலக்கிய உபதேசங்களில், புராணக் கதைகளில் எழுந்த சந்தேகங்களையும் துடுக்குடன் அவ்விளவயதிலேயே வினவினார். அன்று எழுந்த கருத்து வேற்றுமைகளே பின்னாளில் இந்து ஆரிய எதிர்ப்புக் கோட்பாடுகளை மேற்கொள்ள வழிகோலின. இராமசாமி வளரும்பொழுதே சமயம் என்பது அப்பாவி மக்களின் மீது வஞ்சகத்துடன், அவர்களைச் சுரண்டுவதற்காகப் போற்றப்பட்ட போர்வையாகப் போர்த்தப்பட்டுள்ளதைக் களையவேண்டுவது தனது தலையாய கடமை என்ற எண்ணத்தையும், மூடநம்பிக்கைகளிலிருந்தும், சமயகுருமார்களிடமிருந்தும் இம்மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தையும் வளர்த்துக் கொண்டார்.

இராமசாமியின் 19 வது வயதில் அவருக்குத் திருமணம் செய்ய பெற்றோர்களால் நிச்சயித்த வண்ணம், சிறுவயது முதல் நேசித்த 13 வயது நாகம்மையாரை மணந்து கொண்டார். நாகம்மையார் தன் கணவரின் புரட்சிகரமான செயல்களுக்குத் தன்னை முழுவதுமாக ஆட்படுத்திக்கொண்டார். இருவரும் இணைந்து பல போராட்டங்களிலும் ஈடுபடலானார்கள். திருமணமான இரு வருடங்களில் பெண் மகவை ஈன்றெடுத்தார். அக்குழந்தை ஐந்து மாதங்களிலேயே இறந்தது. அதன் பிறகு அவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை.

1904 இல் இராமசாமி இந்துக்களின் புனிதத் தலமாகக் கருதப்படும் காசிக்கு புனிதப் பயணியாக, காசி விசுவநாதரை தரிசிக்கச் சென்றார், அங்கு நடக்கும் மனிதாபிமானமற்ற செயல்கள், பிச்சை எடுத்தல்,கங்கை ஆற்றில் மிதக்கவிடப்படும் பிணங்கள் போன்ற அவலங்களையும், பிராமணர்களின் சுரண்டல்களையும் கண்ணுற்றவரானார்.