டாக்டர் ஹோமி ஜஹாங்கிர் பாபா
அணுசக்திகள் பற்றிய ஆய்வுகள், அணுமின் நிலையம், அணுக்கரு உலை, அணுப்பிளப்பு பற்றிய வேகமான வளர்ச்சிகள் அனைத்தும் இந்தியாவில் வருவதற்கு வித்திட்ட அறிவியல் மேதைகளுள் முக்கியமானவர் டாக்டர் .ஹோமி ஜஹாங்கிர் பாபா. ஹோமி யெகாங்கிர் பாபா, இந்திய அணு ஆற்றல் திட்டத்தில் முக்கிய பங்களித்த ஒரு அணுக்கரு இயற்பியலாளர். இவர் இந்திய அணுக்கருவியலின் தந்தை என்றும் அழைக்கப்படுகிறார். உலக நாடுகளில், பல நாடுகள் தங்கள் அணுசக்திகளைப் பெருக்கிக் கொண்டு வந்தன. அணு ஆயுதக் கருவிகளுடன் போர் தொடுக்கும் சூழ்நிலையும் உருவாகிக் கொண்டு இருந்தது. இந்த நிலையில் இந்தியாவும் தனது பலத்தை உலகிற்கு பறை சாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. அக்காலகட்டத்தில் இந்திய அணு சக்தித் துறைக்கு தோல் கொடுத்து ஒரு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியவர் தான் ஹோமி ஜஹாங்கிர் பாபா.
1909 அக்டோபர் 30 அன்று மும்பையைச் சேர்ந்த வசதியான பார்சி குடும்பத்தில் பிறந்தார். சிறு வயதிலேயே அவர் வீட்டு நூலகத்திருந்த அனைத்து அறிவியல் புத்தகங்களையும் படித்து முடித்தார். பாபாவின் தந்தை அவரை ஒரு பொறியாளராக ஆக்க வேண்டும் என்று முனைந்து அவரை இங்கிலாந்திற்கு அனுப்பினார். தந்தையின் விருப்பத்திற்கு இணங்க பொறியியல் படிப்பில் சேர 1927-ல் கேம்பிரிட்ஜ் புறப்பட்டார்.1930-ல் பாபா எந்திரவியல் படிப்பில் முதல் வகுப்பில் தேறியதையொட்டி, கோட்பாட்டு இயற்பியல் துறையில் ஆராய்ச்சிப் பிரிவு மாணவராகச் சேர்ந்தார். அவர் என்ரிகோ ஃபெருமி, வூல்வுகாங் பவுலி ஆகிய தலை சிறந்த இயற்பியலாளர்களுடன் பணியாற்றினார் எனபது குறிப்பிடத்தக்கது.
1933-ல் “காமா கதிர்களை உட்கிரகிப்பதில் எலெக்ட்ரான் பொழிவுகளின் பங்கு”பற்றி அவர் சமர்ப்பித்த அறிவியல் கட்டுரைக்கு ஐசக் நியூட்டன் படிப்புதவி கிடைத்தது. 1934-ல் டாக்டர் பட்டம் பெற்றார். 1937ஆம் ஆண்டு ஓமியும் ஹைட்லர் என்ற செருமானிய இயற்பியலாளரும் இணைந்து செய்த அண்டக்கதிர்-பற்றிய ஆராய்ச்சி அவர்களுக்கு உலகப்புகழைத் தந்தது.அத்தோடு நில்லாமல், மேலும் செய்த ஆய்வுகளால் மீசான் எனப்படும் அடிப்படைத் துகள் ஒன்று அண்டக்கதிர்களில் இருந்ததைக் கண்டறிந்தார். ஐன்ஸ்டைனின் சார்பியல் தத்துவத்திற்கான ஆய்வுச்சான்றையும் மீசானின் இயக்கத்தை ஆய்வு செய்ததன் மூலம் காட்டினார். இந்த மீசான் ஆய்வுச்சான்று மிகவும் புகழ் வாய்ந்தது.
இவ்வாறு பல்வேறு அறிஞர்களின் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார் ஹோமி ஜஹாங்கிர் பாபா. அவரின் அறிவியல் சாதனைகளையும், புகழையும் அறிந்த இந்திய அரசாங்கம் அவருக்கு உதவ முன் வந்தது. எனவே 1948 ஆம் ஆண்டு அணுசக்தி ஆய்வுக் குழுவிற்கு முதல் தலைவராகத் தேர்ந்தெடுத்தது. பாபாவின் வழிகாட்டுதலுடன் உடன் பணி புரிந்த அறிஞர்களின் அயராத உழைப்பால் 1956 ஆம் ஆண்டு அப்சரா என்ற எதிர்த்துத் தாக்கும் கருவி (First Atomic reactor) பம்பாயில் டிராம்பேயில் சோதித்து பார்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சர்கஸ், செர்லினா என்ற இரு அணுக்கரு உலைகள் நிறுவப்பட்டது.
நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்ட பாபா பணத்திற்கும், புகழுக்கும் மயங்காதவர். நேர்மை தவறாதவர். எடுத்ததை முடிக்கும் திட மனது படைத்தவர்.இந்திய அணுசக்தி ஆய்வுக் குழுவின் தலைவரான பாபா முதன் முதலாக ஜெனிவாவில் நடைபெற்ற " அமைதிக்குப் பயன்படும் அணுசக்தி" என்ற ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.அத் தருணத்தில் உலக நாடுகள் அணுகுண்டுகள் பயன்படுத்துவதைத் தடைவிதிக்க பரிந்துரை செய்தார்.
தான் திருமணமே செய்து கொள்ளாமல் தனது வாழ்நாளை இந்திய தேசத்தின் வளர்ச்சிக்காக அர்பணித்தவர் பாபா.அவரின் தளராத முயற்சியால், ஓயாத உழைப்பால் இந்திய நாட்டின் முதல் அணுசக்தி நிலையம் தாராப்பூரில் ஏற்பட்டது. அதன் பின் இரு வருடங்கள் கழித்து புளுட்டோனியம் பிளென்ட் நிறுவப்பட்ட போது அவருடைய பங்கே அதில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்பட்டது. மேலும் இராஜஸ்தானில் உள்ள பஃக்ரைனில் இந்தியாவின் முதல் அணுகுண்டை வெடிக்கச் செய்து சாதனை படைத்தார். அவரது இந்த சாதனை இந்தியாவை உலக அளவில் தலை நிமிரும் படி செய்தது.
1966ஆம் ஆண்டு ஜனவரி 24 அன்று ஒரு சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் சென்று கொண்டிருந்தபோது அவர் பயணித்த விமானம் விழுந்து நொறுங்கியதில் 56 வயதே ஆன பாபா அகால மரணமடைந்தார். அவரின் மரணச் செய்தி இந்தியா உட்பட உலக நாடுகளையே ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியது.
