டாக்டர் ராஜேந்திர பிரசாத்
டாக்டர் ராஜேந்திர பிரசாத்...!
👉 டாக்டர் ராஜேந்திர பிரசாத் 1884ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி பீகாரில் பிறந்தார்.
👉 இவருடைய தந்தை பெயர் மகாதேவ் சாகி, தாயார் பெயர் கமலேஸ்வரி தேவி ஆகும்.
👉 இவருடைய தந்தை பெர்சிய மொழியிலும், சமஸ்கிருத மொழியிலும் தேர்ச்சி பெற்றவர்.
👉 தாயார் மிகுந்த சமயப் பற்றுள்ளவர். சிறுவயதில் தன் குடும்பத்தாராலும், நண்பர்களாலும் 'ராஜன்' என அழைக்கப்பட்டார் ராஜேந்திர பிரசாத்.
👉 டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்களின் உடன் பிறந்தவர்கள் மகேந்திர பிரசாத் என்னும் மூத்த சகோதரரும், பகவதி தேவி என்னும் மூத்த சகோதரியும் ஆவார்.
👉 டாக்டர் ராஜேந்திர பிரசாத் குழந்தையாக இருக்கும்போதே அவரது தாயார் இறந்துவிட்டார். அதன்பின் அவரது மூத்த சகோதரிதான் ராஜேந்திர பிரசாத்-யை கவனித்துக்கொண்டார்.
👉 டாக்டர் ராஜேந்திர பிரசாத், தனது ஐந்தாவது வயதில் ஒரு இஸ்லாமிய மௌல்வியிடம் பெர்சியம், இந்தி மற்றும் கணிதம் கற்க தொடங்கினார். பிறகு, சாப்ரா மாவட்டத்திலுள்ள ஒரு பள்ளியில் ஆரம்பக்கல்வியை முடித்தார்.
திருமணம் :
👉 இதற்கிடையில், 1896ஆம் ஆண்டு ஜூன் மாதம், தனது 12வது வயதில் ராஜவன்ஷி தேவி என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ம்ரித்யூன்ஜயா (Mrityunjaya) என்னும் மகன் பிறந்தார்.
கல்வி :
👉 இவர் தனது மூத்த சகோதரரான மகேந்திர பிரசாத் உடன் சேர்ந்து டி.கே. பாட்னாவில் உள்ள கோஷ் அகாடமியில் இரண்டு வருட காலம் படித்தார்.
👉 கல்கத்தா பல்கலைக்கழக நுழைவுத்தேர்வில் முதலிடம் பெற்ற ராஜேந்திர பிரசாத், ரூ.30 மாத உதவித்தொகையாக பெற்றார்.
👉 1902ஆம் ஆண்டு ராஜேந்திர பிரசாத், பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார். இங்கு அவர் ஆரம்பத்தில் அறிவியல் மாணவராக இருந்தார்.
👉 1904ஆம் ஆண்டு கல்கத்தா பல்கலைக்கழகத்தின்கீழ் தேர்ச்சி பெற்ற ராஜேந்திர பிரசாத் 1905ஆம் ஆண்டு முதல் பிரிவில் பட்டம் பெற்றார்.
👉 இதன்பின் ராஜேந்திர பிரசாத் கலை கல்வியில் கவனம் செலுத்த முடிவு செய்தார். 1907ஆம் ஆண்டு எம்.ஏ முதுகலை பட்டப்படிப்பில் முதல் மாணவராக தேர்ச்சிப்பெற்றார். அங்கு அவர் தனது சகோதரருடன் ஈடன் ஹிந்து விடுதியில் வசித்து வந்தார்.
👉 டாக்டர் ராஜேந்திர பிரசாத் அர்ப்பணிப்புள்ள மாணவராகவும் மற்றும் பொது ஆர்வலராகவும் இருந்தார்.
👉 1906ஆம் ஆண்டில் பிஹாரி மாணவர் அவையை அமைப்பதில் ராஜேந்திர பிரசாத் முக்கிய பங்கு வகித்தார்.
ஆசிரியராக ராஜேந்திர பிரசாத் :
👉 டாக்டர் ராஜேந்திர பிரசாத் ஆசிரியராக பல்வேறு கல்வி நிறுவனங்களில் பணியாற்றினார்.
👉 பொருளாதாரத்தில் எம்.ஏ. முடித்த ராஜேந்திர பிரசாத், பீகாரில் உள்ள முசாபர்பூரின் லங்காட் சிங் கல்லூரியில் (Langat Singh College of Muzaffarpur) ஆங்கிலப் பேராசிரியராக பணியாற்றினார். அதன்பின் அக்கல்லூரியிலேயே கல்லூரி முதல்வராக பதவி வகித்தார்.
👉 பின்னர் சட்டப்படிப்பை மேற்கொள்வதற்காக ராஜேந்திர பிரசாத் அக்கல்லூரியை விட்டு வெளியேறினார். அதற்கு அடுத்து கல்கத்தாவின் ரிப்பன் கல்லூரியில் (இப்போது சுரேந்திரநாத் சட்டக் கல்லூரி) சேர்ந்தார்.
👉 1909ஆம் ஆண்டில், கல்கத்தாவில் சட்டப்படிப்பை தொடர்ந்தபோது, கல்கத்தா நகரக் கல்லூரியில் பொருளாதாரப் பேராசிரியராகவும் பணியாற்றினார்.
👉 1915ஆம் ஆண்டில், ராஜேந்திர பிரசாத் முதுநிலை சட்டத்தேர்வில் தேர்ச்சி பெற்று தங்கப்பதக்கம் பெற்றார்.
👉 1937ல் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
வழக்கறிஞராக ராஜேந்திர பிரசாத் :
👉 சட்டப்படிப்பில் முனைவர் பட்டம் பெற்றதை அடுத்து ராஜேந்திர பிரசாத் வழக்கறிஞர் பதவியேற்று பல வழக்குகளில் வாதாடி வெற்றி பெற்றார்.
👉 அவரது வாதத்திறமை அவரை ஒரு சிறந்த பேச்சாளர் மற்றும் சொற்பொழிவாளராக மாற்றியது. பிறகு அவர் மக்களுக்காக தனது குரலினை கொடுக்க ஆரம்பித்தார்.
👉 1911ஆம் ஆண்டு, கல்கத்தாவில் சிறிது காலம் வழக்கறிஞராக பணியாற்றிய அவர், 1916ஆம் ஆண்டு பாட்னாவிற்கு இடம்பெயர்ந்து, பீகார் மற்றும் ஒரிசா மாநிலங்களுக்கான உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
👉 1917ஆம் ஆண்டில், பாட்னா பல்கலைக்கழகத்தின் செனட் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்களில் ஒருவராக ராஜேந்திர பிரசாத் நியமிக்கப்பட்டார்.
👉 பீகாரில் உள்ள பிரபல பட்டு நகரமான பாகல்பூரில் சட்டம் பயின்றார்.
விடுதலை போராட்டத்தில் பங்கு :
👉 மகாத்மா காந்தியின் அர்ப்பணிப்பு, தைரியம் மற்றும் உறுதியால் ராஜேந்திர பிரசாத் பெரிதும் ஈர்க்கப்பட்டார். 1920ல் ஒத்துழையாமை இயக்கம் இந்திய தேசிய காங்கிரஸால் நிறைவேற்றப்பட்டவுடன், ராஜேந்திர பிரசாத் தனது வழக்கறிஞர் வாழ்க்கையிலும், பல்கலைக்கழகத்தில் தனது கடமைகளிலும் இருந்து ஓய்வு பெற்றார்.
👉 சுதந்திர இயக்கத்தின் போது, எழுத்தாளர் மற்றும் பல்துறை வல்லுநரான ராகுல் சங்கிருத்யாயனுடன் சந்திப்பு இவருக்கு கிடைத்தது. ராகுல் சங்கிருத்யாயன் பிரச்சாத்தின் அறிவுசார் சக்திகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, அவரை வழிகாட்டியாகவும், குருவாகவும் ஏற்றுக்கொண்டார் ராஜேந்திர பிரசாத்.
👉 அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினராக சேர்ந்த ராஜேந்திர பிரசாத், மகாத்மா காந்தியின் கருத்துக்களால் கவரப்பட்டு தன் வேலையை துறந்து, ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்தார்.
👉 1914ஆம் ஆண்டு பீகார் மற்றும் வங்காளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு ராஜேந்திர பிரசாத் தீவிர பங்கு வகித்தார்.
👉 1934ஆம் ஆண்டு பீகாரில் பூகம்பம் ஏற்பட்டபோது, ராஜேந்திர பிரசாத் சிறையில் இருந்தார். இரண்டு நாட்களுக்குப் பிறகு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராஜேந்திர பிரசாத், பீகார் மத்திய நிவாரணக் குழுவை அமைத்தார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நிதி திரட்டும் பணியை மேற்கொண்டார்.
👉 ராஜேந்திர பிரசாத் மீது அரசு விதித்த தடையை மீறி, சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார். காந்தியின் அழைப்புக்கு இணங்கி ஆங்கிலேய கல்விக்கூடத்தை விட்டு தனது மகனை வெளியேற்றினார்.
👉 பல போராட்டங்களில் கலந்து கொண்ட ராஜேந்திர பிரசாத் மக்களுக்காக தனது குரலினை உயர்த்தினார்.
👉 அக்டோபர் 1934ல் நடந்த மும்பை அமர்வின்போது ராஜேந்திர பிரசாத் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1939ல் பதவி விலகியபோது ராஜேந்திர பிரசாத் மீண்டும் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
👉 மும்பையில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டிற்கு ராஜேந்திர பிரசாத் தலைவராகப் பொறுப்பேற்றார். ராஜேந்திர பிரசாத், 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் கலந்து கொண்டதால் 1942ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பின்னர், ராஜேந்திர பிரசாத் 1945ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார்.
👉 1946ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி ஜவஹர்லால் நேருவின் தலைமையில் பரிந்துரைக்கப்பட்ட 12 அமைச்சர்களைக் கொண்ட இடைக்கால அரசு அமைக்கப்பட்ட பின்னர், ராஜேந்திர பிரசாத் அவர்கள் உணவு மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சராக பணியாற்றினார்.
👉 1946ஆம் ஆண்டு ராஜேந்திர பிரசாத் இந்திய அரசியலமைப்பு சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1947ஆம் ஆண்டு ஜே.பி.கிருபாலனி தனது ராஜினாமாவை சமர்ப்பித்த பின்னர் மூன்றாவது முறையாக ராஜேந்திர பிரசாத் காங்கிரஸ் தலைவரானார்.
இந்தியாவின் முதல் குடியரசு தலைவராக டாக்டர் ராஜேந்திர பிரசாத் :
👉 இந்தியா சுதந்திரம் அடைந்து இரண்டரை ஆண்டுகளுக்கு பின், 1950ஆம் ஆண்டு புதிய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டதை தொடர்ந்து, இந்தியா முழு குடியரசு நாடாக மாறியது.
👉 1950ஆம் ஆண்டு, இந்தியாவின் முதல் குடியரசு தலைவராக டாக்டர் ராஜேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
👉 அச்சமயத்தில் எதிர்பாராத விதமாக, இந்திய குடியரசு தினத்திற்கு ஒருநாள் முன்னதாக 1950ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி இரவு, அவரது சகோதரி பகவதி தேவி மறைந்தார்.
👉 இந்தியாவின் தூதராக உலகம் முழுவதும் பயணம் செய்த ராஜேந்திர பிரசாத், வெளிநாடுகளுடன் பரஸ்பர நம்பிக்கை மற்றும் புரிதல் உறவை வளர்த்துக் கொண்டார்.
👉 டாக்டர் ராஜேந்திர பிரசாத் இரண்டு முறை குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய குடியரசு தலைவர்கள் வரலாற்றில் இப்பதவியை இரண்டுமுறை அலங்கரித்த ஒரே குடியரசு தலைவர் என்ற பெருமையையும் பெற்றார்.
👉 இந்தியாவில் குடியரசு தலைவராக 12 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர், ராஜேந்திர பிரசாத் ஓய்வு பெறுவதற்கான தனது முடிவை அறிவித்தார்.
👉 இந்திய குடியரசு தலைவர் பதவியை துறந்த பின்னர், ராஜேந்திர பிரசாத் பாட்னாவுக்கு திரும்பினார். அங்கு அவர் பீகார் வித்யாபீத்தின் வளாகத்தில் தங்கினார்.
👉 இந்திய அரசு இவருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான 'பாரத ரத்னா' விருதை 1962ஆம் ஆண்டில் வழங்கி கௌரவித்தது.
டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்களின் மறைவு :
👉 குடியரசு தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற சில மாதங்களிலேயே அவரது உடல்நிலை சரியில்லாமல் தொடர்ந்து நோய்வாய்ப்பட்டார்.
👉 இந்திய முதல் குடியரசு தலைவர் ராஜேந்திர பிரசாத் அவர்கள், 1963ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி பீகாரில் உள்ள பாட்னா என்ற இடத்தில் இவ்வுலகை விட்டு மறைந்தார்.
